கிங்டம்: திரை விமர்சனம்
சிவா, சூரி இருவரும் அண்ணன் தம்பிகள். அப்பாவின் கொடுமை அதிகமாக, அதிகமாக சிறுவர்கள் தவிக்கிறார்கள். ஒரு நாள் அப்பா கொல்லப்படுகிறார். அண்ணன் சூரி, ஊரைவிட்டு ஓடி வடுகிறான். தம்பி சூரி வளர்ந்து போலீஸ் கான்ஸ்டபிள் ஆகிறான். மனதிற்குள் எப்போதும் அண்ணனின் நினைவு. எப்படியாவது அவனை கண்டுபிடித்துவிட துடிக்கிறான்.
இந்த நிலையில், அப்பாவியை அடித்துத் துன்புறுத்திய தனது அதிகாரியை அடித்துவிடுகிறான் சூரி. இதைத் தொடர்ந்து அண்டர்கவர் ஆபரேஷனுக்கு செல்லும் கட்டாயத்துக்கு ஆளாகிறான். தவிர அங்கு சென்றால் அவனது அண்ணனை சந்தக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே, இலங்கைக்கு அருகில் இருக்கும் ஒரு தீவுக்குச் செல்கிறான். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
அதிரடியும்.. அதே நேரம் அதி புத்திசாலித்தனமும் கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள் சூரியாக நடித்து இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அண்ணனைத்தேடி அலையும் பாசம், அதன் பிறகு பிரச்சினைகள் ஏற்படும்போது வெளிப்படுத்தும் உணர்வு என சிறப்பாக நடித்து உள்ளார்.
அவருடைய அண்ணனாக வரும் சத்யதேவும் நிறைவான நடிப்பை அளித்து இருக்கிறார். பாக்யஸ்ரீ போஸ் வந்து போகிறார். வில்லனாக வரும் வெங்கடேஷ் நிஜமாகவே மிரட்டி இருக்கிறார்.
அனிருத்தின் இசை படத்துக்கு பலம். இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம், சோர்வை அளிக்கும்போது நிமிர்ந்து உட்கார வைப்பது இசைதான்.
அதே போல கிரிஷ் கங்காதரன்- ஜோமோன் டி.ஜான் இரட்டையர்கள் ஒளிப்பதிவில் அசத்தி இருக்கிறார்கள். சண்டைக் காட்சிகள், கடல் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.
படம் ஆரம்பித்த உடனேயே, நாயகனின் அறிமுகம் அவனுக்கான நோக்கம் என கதைக்குள் நுழைந்து விடுவது சிறப்பு. அதே போல ஓரளவு நம்பும்படியான காட்சிகள் படத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. அதே நேரம் பின்பாதியில் படம் கொஞ்சம் தொய்வடைவதை இயக்குநர் கவுதம் தினனூர் தவிர்த்து இருக்கலாம்.
போலீஸ் இன்ஃபார்மரை கண்டுபிடிப்பது துவங்கி க்ளைமாக்ஸ் முந்தைய காட்சிவரையில் கொஞ்சம் கத்திரி போட்டுஇருக்கலாம்.
ராணுவமே தீவிரமாக தேடும் ஒரு பொருளை அசால்ட்டாக நாயகன் தூக்கி வருவது, ஒரு போன் காலில் எஸ்கேப் ஆவது என லாஜிக் இல்லாத காட்சிகளும் நிறையவே உள்ளன.
ஆனாலும் அதிரடி பட ரசிகர்களுக்கு சரியான விருந்து.
