சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்:  திரைப்பட விமர்சனம்

சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்:  திரைப்பட விமர்சனம்

காவல்துறை அதிகாரி, துப்பறிவாளர் போன்றோர் இல்லாமல்,  இறந்துபோன பிரபல எழுத்தாளரின் மகன்,  சீரியல் கில்லரை கண்டுபிடிப்பதே கதை.

பிரபல க்ரைம் எழுத்தாளரின் மகன் வெற்றி.  மறைந்த தனது தந்தையைப் பற்றி எழுத வேண்டும் என ஒரு பத்திரிகையில் இருந்து வந்து கேட்கிறார்கள்.  இதையடுத்து தந்தையைப் பற்றிச் சொல்வதற்காக இவர் மதுரையில் இருந்து சென்னைக்குச்செல்கிறார். அவர் தனது தந்தையைப் பற்றிச் சொல்லச் சொல்ல பத்திரிகையாளர் எழுதுவது திட்டம்.

சென்னையில் நாயகனுக்கு  போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிமுகமாகிறார். அவருக்குப் பல வழக்குகளில் தான் கிரைம் மூளையை வைத்து உதவிகள் செய்கிறார் நாயகன்.

ஒரு இளம்பெண்ணின் கொலையை துப்பறிய சொல்லும் இடத்தில் அது தொடர் கொலையின் ஒரு பகுதி என்பதை நாயகன் சொல்கிறார். தொடர்ந்து துப்பறிந்து கொலைகாரனை கண்டுபிடிக்க உதவுகிறார் என்பதுதான் கதை.

நாயகன் வெற்றி.  எப்போதும் ஒரே முக’பாவம்’.   இதில் கேலி, கிண்டல் காட்சிகள் எல்லாம் வைத்து இருக்கிறார்கள். இனியாவது இயக்குநர்கள், வெற்றியின் ஒரே மாதிரியான முகபாவத்துக்கு ஏற்ற காட்சிகளை மட்டும் வைக்கலாம்.  இல்லாவிட்டால் ரசிகர்கள் பாவம்தான்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக தம்பி ராமையா. ஆரம்பத்தில் வழக்கம்போல் கொஞ்சம் சிரிக்க வைத்து இருக்கிறார். ஆனால்,  அவரது மகள், கொலைகாரனிடம் சிக்கிய பிறகு அருமையான குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.   அவருக்கும், மகளுக்குமான உணர்வுபூர்வமான காட்சிகளில் அசத்துகிறார்.

பத்திரிகையாளராக வரும் ஷில்பா மஞ்சுநாத் சில காட்சிகளில் வருகிறார். அழகாக இருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி கொஞ்சமாக சிரிக்க வைக்கிறார்.

ஒரு த்ரில்லர் படத்துக்கு ஏற்ற அரவிந்த் ஒளிப்பதிவு, படத்துக்கு பதம். அதே போல . ஏஜிஆரின் பின்னணி இசை,  திகிலூட்டுகிறது.

காவல்துறை அதிகாரி எந்த ஒரு வழக்கையும் சுயமாக சிந்தித்து துப்பறியாமல், யாரோ ஒரு இளைஞனை நம்புகிறார் என்பதும்,  சீரியல் கொலைகாரன் பிடிபட்டதும் கதை வேறு பாதையில் நகர்வதும் பொருந்தவில்லை.

ஆனாலும் க்ரைம் த்ரில்லர் பட ரசிகர்களை ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் அனீஷ் அஷ்ரப்.

முதல் பக்கம் – கடைசி வரை பார்க்கத் தூண்டுகிறது.