உசுரே: திரை விமர்சனம்

உசுரே: திரை விமர்சனம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் நயம் காதல் கதை.

தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் பகுதியான (ஆந்திராவின்) சித்தூர் பகுதி.. அப்பா, மெக்கானிக் கிரேன் மனோகர், அம்மா செந்தில் குமாரி ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார் டீஜே அருணாசலம். குவாரியில் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார்.

இவர் வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டுக்கு தனது மகள் ஜனனியுடன் குடி வருகிறார் மந்த்ரா. சிறு வயதிலேயே கணவர் பிரிந்து சென்றுவிட்டதால், மகளை கண்டிப்புடன் வளர்க்கிறார். மகளை யாராவது பார்த்தாலே, அடித்து விடுகிறார்.

இதையெல்லாம் மீறி டீஜே அருணாசலம் – ஜனனி ஆகியோருக்கு இடையே காதல் மலர்கிறது.

அதன் பிறகு என்ன ஆகிறது என்பதுதான் கதை.நாயகன் டீஜே அருணாச்சலம், தான் ஒரு காதல் நாயகன் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆமாம்.. காதலி ஜனனி மீது அவர் வெளிப்படுத்தும் காதல் அத்தனை வெறித்தனமானது. உணர்ச்சிபூர்வமான நடிப்பை அளித்து உள்ளார்.

நாயகி ஜனனியும் சிறப்பாக நடித்து உள்ளார். தாயின் மீதான பயம், காதலன் மீதான பேரன்பு, கிளைமாக்ஸில் வெளிப்படும் ஆத்திரம் என அசத்துகிறார்.

அட… சில காலம் முன்பு வரை அழகால் மிரட்டிய மந்த்ராவா இது… கோபக்கார அம்மாவாக வந்து திகிலூட்டுகிறார். தமிழ்த் திரையுலகுக்கு புதிதாக ஒரு அழகான அம்மா கிடைத்து இருக்கிறார்.

நாயகனின் தந்தையாக வரும் கிரேன் மனோகர், வழக்கமான நகைச்சுவை நடிப்பை விடுத்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து உள்ளார். அம்மாவாகவரும் செந்தில் குமாரியும் சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.

இதர கதாபாத்திரங்களில் நடித்து உள்ள ஆதித்யா கதிர், தங்கதுரை, பாவல் நவநீதன் மெல்வின் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட அனைவருமே பாத்திரம் அறிந்து நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

மார்க்கி சாயின் ஒளிப்பதிவு கிராமத்தின் – மலையின் அழகை கண் முன் நிறுத்துகிறது. கிரண் ஜோஸ் இசை – பின்னணி இசை படத்துக்கு பலம்.

இன்று ஒரே நாளில் இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதளங்களில் காதல் தோன்றி அன்றே ஈசல் போல் மறைந்து விடுகிறது. இந்த நிலையில் அமரக்காதலாக மனதை உருக வைத்து இருக்கிறார் இயக்குநர்நவீன் டி கோபால் .

Related Posts