சரண்டர்: திரை விமர்சனம்
பாடல்கள் இல்லாமல், ஹீரோயின் இல்லாமல் அதிரி புதிரியான அக்மார்க் க்ரைம் த்ரில்லர், சரண்டர்.
சட்டமன்றத் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன் கதை துவங்குகிறது. நடிகராகவே வரும் மன்சூர் அலி கான் திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை காவல் நிலையத்தில் தனது துப்பாக்கியை,சரண்டர் செய்கிறார். அதைக் காவலர் பெரியசாமி (லால்) வாங்கி வைக்கிறார். ஆனால் அது காணாமல் போகிறது. பயிற்சி காவலர் புகழேந்தி (தர்ஷன்), துப்பாக்கியை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார்.
இன்னொரு பக்கம், அரசியல் பிரமுகர், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யும் பொறுப்பை ஐஸ் ஃபேக்ட்ரி நடத்தும் கனகுவுக்கு (சுஜித்) அளிக்கிறார். அந்த அந்தப் பத்து கோடி ரூபாய் பணம், ஒரு விபத்தில் காணாமல் போய்விடுகிறது.
இன்னும் சில நாட்களில் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், காணாமல் போன பணத்தைத் தேடி அரசியல்வாதியும், துப்பாக்கியை கண்டுபிடிக்கும் வேலையில் காவலரும் தீவிரமாகிறார்கள்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே சுவாரஸ்யமான த்ரில்லராக விரிந்திருக்கிறது.
ஒரு பயிற்சி காவலரை கண் முன் நிறுத்தி இருக்கிறார் தர்ஷன். காவல் அதிகாரிகளால் அவமானங்கள் நேரும்போது மென்று விழுங்குவது, வெளியிலிருந்து காவல்துறைக்கு அவமானங்கள் வந்தால் பொங்கி எழுவது என சிறப்பாக நடித்து இருக்கிறார்.
கொடூர வில்லனாக சுஜித், சிறப்பாக நடித்து இருக்கிறார். வித்தியாசமான உடல் மொழி, முகபாவம் ஆகியவற்றால் கவனிக்க வைக்கிறார்.
அவரது ன் தம்பியாக கௌசிக், காவல்துறை அதிகாரிகளாக அருள், ரம்யா ராமகிருஷ்ணன், ரவுடியாக சுந்தரேஸ்வரன், பாவப்பட்ட பெண்ணாக செம்மலர் அன்னம், துப்பாக்கி வாங்க அலையும் முனீஸ்காந்த் என அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவர்கின்றனர்.
த்ரில்லர் படத்துக்கு ஏற்ற பரபரப்பான ஒளிப்பதிவை அளித்திருக்கிறார் மெய்யேந்திரன். இரவு நேரக் காட்சிகள்.. அதிலும் அந்த பேருந்து காட்சி அசத்தல்.
அதே போல துல்லியமான எடிட்டிங்கால் படத்தை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கிறார் படத்தொகுப்பாளர் ரேணு கோபால்.
விகாஸ் படிஸாவின் பின்னணி இசையு் மிரட்டுகிறது.
காவல் நிலையம், வில்லனின் ஐஸ் ஃபேக்ட்ரி குடோன் என கலை இயக்குநர் ஆர்.கே. மனோஜ் குமாரின் பங்களிப்பு சிறப்பு.
இரட்டைப் பாதையில் செல்லும் குழப்பம் இல்லாத திரைக்கதை, சுவாரஸ்யம் குறையாத காட்சிகள் என அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி அசத்தி இருக்கிறார். க்ரைம் படம் என்பதோடு இல்லாமல், காவல் நிலையத்திற்குள் நடக்கும் அதிகாரப் போட்டி,காவல்துறை-அரசியல்வாதிகள் இடையேயான நெருக்கம் ஆகியவற்றையும் சொல்லி கவர்கிறார்.
அனைவரும் பார்த்து ரசிக்கலாம்.
