ஒரு முதல்வர் வேட்பாளர் மிஸ்ஸிங்! சாம் சி.எஸ். ‘பர்த் டே’ அதிரடி!
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். தனது பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான நினைவலைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள்…
பிறந்தநாள் சந்தோஷமும் ரசிகர்களின் உரிமையும்!
“என் பிறந்தநாளான இன்னைக்கு உங்ககிட்ட பேசுறதுல செம்ம ஹேப்பி. திரும்பிப் பார்க்கும்போது இந்த பயணம் கொடுத்த அனுபவங்கள் ரொம்பவே நிறைவா இருக்கு. ஏகப்பட்ட கஷ்டங்களை தாண்டிதான் இந்த இடத்தை அடைஞ்சிருக்கேன். அதைத் தக்கவெச்சுக்குறது சாதாரண விஷயமில்லை. மக்களுக்கு தொடர்ந்து தரமான இசையைக் கொடுக்கணும்ங்கிற வெறி எனக்குள்ள எப்பவும் இருந்துட்டே இருக்கும். என் பாட்டை தாராளமா விமர்சியுங்கள், ரசியுங்கள்… ஏன்னா, அந்த உரிமை உங்ககிட்டதான் முழுசா இருக்கு.”
அறிமுகம் முதல் 100 படங்கள் வரை
” ‘அம்புலி’ மூலமா இசைப்பயணத்தைத் தொடங்கி, இப்போ கார்த்தி நடிக்கிற ‘சர்தார் 2’ படம் மூலமா செஞ்சுரி அடிச்சிருக்கேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தினு கலக்கிக்கிட்டு இருந்த நான், இப்போ 100 படங்களைத் தாண்டி அடுத்த கட்டத்தை நோக்கி ஓடிட்டு இருக்கேன். இந்த 100 படங்கள்ல கத்துக்கிட்ட வித்தையை வெச்சு, அடுத்தடுத்த படங்களை இன்னும் பிரம்மாண்டமா செய்யணும்ங்கிறதுதான் என் ஆசை.
சினிமாப் பின்னணி எதுவுமே இல்லாத முதல் தலைமுறையா களம் இறங்குனதால, விஷயங்களைக் கத்துக்கவே கொஞ்ச காலம் ஆச்சு. ஆனா, இந்த அனுபவத்தை வெச்சு விதவிதமான ஜானர், மொழி, நாடுகள்னு வேற லெவல்ல ஸ்கோர் பண்ண துணிச்சல் வந்திருக்கு.”
ரெண்டே நிமிடத்தில் உருவான மாஸ் பாட்டு!
“100 படங்கள்ல எந்த பாட்டு டக்குனு வந்துச்சு, எதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு?”னு எல்லாரும் கேக்குறாங்க. கார்ல போயிட்டு இருக்கும்போது வெறும் ரெண்டே செகண்ட்ல தட்டிவிட்டு உருவானதுதான் “டசக்கு டசக்கு” பாட்டு. வண்டி ஓட்டிக்கிட்டே சும்மா முணுமுணுத்து போன்ல ரெக்கார்ட் பண்ணது, ஆல்மோஸ்ட் ஒன்றரை நிமிஷத்துல ஓகே ஆகிடுச்சு.
அதேநேரம் கஷ்டப்பட்டு பண்ண பாட்டுகளும் இருக்கு. குறிப்பா, “மஹாவதார் நரசிம்மா” இந்தி படத்துக்காக தாயும் குழந்தையும் வர்ற ஒரு மெலடி பண்ணேன். நான் கர்நாடிக் மியூசிக் பின்னணியில இருந்து வந்தவன்ங்கிறதால, அந்த ஹிந்துஸ்தானி பாட்டை செதுக்கி எடுக்க கொஞ்சம் டைம் ஆச்சு.”
நடிப்புக்கு ‘நோ’.. இசைக்கு மட்டும் யெஸ்!
“நடிக்க சொல்லி நிறைய வாய்ப்புகள் தேடி வருது. சமீபத்துல ஒருத்தர் ரொம்ப அன்பா கதையெல்லாம் சொல்லி, ஸ்டூடியோ வரைக்கும் ரெடி பண்ணிட்டாரு. எனக்கு நடிக்கத் தெரியுமா தெரியாதாங்கிறது அடுத்த விஷயம், ஆனா நடிப்புல எனக்கு சுத்தமா ஆர்வமில்லை. ஏன்னா, இசைக்கடல்ல நாம சாதிக்க வேண்டியது இன்னும் மலையளவு இருக்கு. இளையராஜா சார், ரஹ்மான் சார்னு இவங்களைப் பார்த்துதான் நாம வளர்ந்தோம். ராஜா சார் தொட்ட சிகரத்துல ஒரு படியைக் கூட நாம இன்னும் எட்டல.
நடிகர் ஆகிட்டா உடனே பிரபலம் ஆகிடலாம், புகழ் வெளிச்சம் கிடைக்கும்ங்கிறது உண்மைதான். ஆனா, புகழைத் தேடி ஓடுறதை விட, என் இசை மூலமா மக்களைச் சென்றடைவதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. இசைக்குக் கிடைக்கும் பாராட்டுதான் எனக்கு எல்லாமே.”
தூக்கமும் என்னோட போதையும்!
“தூங்குற நேரம் ரொம்பக் கம்மிதான், அது ஒரு சின்ன பிரச்சனையாத்தான் இருக்கு. சமீபத்துல டாக்டரை பார்த்தப்போ கூட அதைப்பத்திப் பேசினோம். நம்ம உடம்புல வர்ற பாதி பிரச்சனைக்கு தூக்கமின்மையும், போதிய அளவு தண்ணி குடிக்காததும்தான் காரணம்.
ஒவ்வொருத்தருக்கும் ஒரு கிராக்கம் இருக்கும். எனக்கு என்னன்னா… சின்ன வயசுல ராயப்பன்பட்டி ஹாஸ்டல்ல படிச்சதால, அதிகாலை 5 மணிக்கெல்லாம் தட்டி எழுப்பிடுவாங்க. அந்தப் பழக்கத்தால இப்போ நைட் 3 மணிக்குத் தூங்கினாலும் 5 மணிக்கு ஆட்டோமேட்டிக்கா முழிப்பு வந்துரும். காலையில எந்திரிச்சதும் பாட்டு பாடத் தொடங்குறதுதான் எனக்குப் பெரிய போதை.
இவ்வளவு பிஸியா இருக்குறதால தூங்குறதுக்கு நேரம் அமையறதில்லை. இப்போ கொஞ்சம் தூக்கத்துலயும் கவனம் செலுத்த ட்ரை பண்றேன். ஆனா இது ஒன்றும் பிரஷரால வர்ற தூக்கமின்மை கிடையாது. ஒரு சூப்பர் படம் பார்த்துட்டு இருந்தா தூக்கம் வராம ரசிப்போம்ல, அதே மாதிரிதான் இசை அமைக்கும்போதும் எனக்குத் தூக்கமே வர மாட்டேங்குது!” என்று தனது உணர்வுகளை பகிர்ந்துகொண்டார் சாம் சி.எஸ்.
மொத்தத்தில், ‘நடிக்க மாட்டேன்’ என்று சொல்லி விட்டார்… ஆக, ஒரு முதல்வர் வேட்பாளர் மிஸ்ஸிங்!
