தனியே தன்னந்தனியே..!: கமல் கோட்பாடு சரிதானா?
இந்த கொரோனா காலத்தில், அனைவரும், தங்களது குடும்பத்தினரோடு தனித்திருக்கிறார்கள். ஆனால் நடிகர் கமல்ஹாசன் குடும்பம், தனித்தனியே தனித்திருக்கிறது.
இது குறித்து கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதில், “எனது அம்மா சரிகா மும்பை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசிக்கிறார். அப்பா கமல் மற்றும் தங்கை அக்ஷரா சென்னையில் தனித்தனியே வசிக்கிறார்கள். நானும் தனியே வசிக்கிறேன்.
நாங்கள் ஒருவரை ஒருவரை ஒரு மணிநேரம் கூட பார்த்துக் கொள்ள வாய்ப்பில்லை” என ஆதங்கப்பட்டிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.
வாணி கணபதியை மணந்துகொண்ட கமல்.. அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் சரிகாவுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து வாழ்ந்தனர். ஸ்ருதி, அக்சரா என இரு குழந்தைகள் பிறக்க.. பிறகே திருமணம் செய்து கொண்டனர்.
பிறகு கமல் – சரிகா இடையே மன வேறுபாடு ஏற்பட, சட்டப்படி பிரிந்தனர். குழந்தைகள் இருவரும் கமலிடம் வளர்ந்தனர்.
ஸ்ருதி பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். அக்சரா பாலிவுட் படங்கள் சிலவற்றில் பின்னணியில் பணியாற்றினார். பிறகு சில படங்களில் நடிக்கவும் செய்தார். பிறகு தமிழ்ப் படங்களில் ஆர்வம் கொண்டு, சென்னைக்கு வந்தார். ஆனாலும் தந்தை கமலுடன் தங்காமல் தனியாகவே வசிக்கிறார்.
இதைத்தான் ஸ்ருதிஹாசன், “ அப்பா, அம்மா, சகோதரி எல்லோரும் தனித்தனியே வசிக்கிறோம். ஒரு மணி நேரம்கூட பார்த்துக்கொள்ள முடியவில்லை” என வருத்தமும் ஆதங்கமுமாக பதிவிட்டிருக்கிறார்.
இது குறித்து சிலர், “இந்திய பண்பாடு என்பதே கூட்டு வாழ்க்கைதான். திருமணத்துக்கு முன் மகளோ, மகனோ ஒரே ஊரில் தனித்தனியாக வசிக்க அனுமதிக்கவே மாட்டார்கள். கமல் ஏன் இப்படி இருக்கிறார்.. இப்படி தனது பிள்ளைகளை வளர்த்திருக்கிறார்..” என வருத்தப்படுகிறார்கள்.
ஆனால் வேறு சிலர், “குடும்பம் என்பதே பெண்களை அடிமைப்படுத்தும் அமைப்புதான் என்பதுதான் சமூகவியல் அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. முன்னேறிய மேற்கத்திய நாடுகளில் குறிப்பிட்ட வயது வந்த பிறகு பிள்ளைகள் தனியே வசிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கான சுதந்திரம் அது. அதில் பெற்றோர் தலையிடுவதில்லை.
இங்குதான், தனது பிள்ளைகளிடம், “இன்னாரைத்தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என நிர்ப்பந்திக்கும் பழக்கம் இருக்கிறது. மீறினால் பெற்றோரே பிள்ளைகளை கொல்லும் கொடூரமும் நடக்கிறது.
இன்னொரு பக்கம், பிள்ளைகள் பெரியவர்களாகும் வரை, அருகிலேயே இருப்பததான் பாசம் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட பிள்ளைகள், பெற்றோரை மதிப்பதில்லை.. கைவிட்டு விடுகிறார்கள்.
ஆனால் கமல் தனது பிள்ளைகளை கைவிடவில்லை. அவர்களை,தனித்து இயங்கும் அளவுக்கு நன்றாக வளர்த்தார். அவர்கள் சொந்தக் காலில் நிற்கும்படி செய்தார். பிறகே அவர்களது சுதந்திரத்தை மதித்து, செயல்பட அனுமதித்தார்.
ஒரு முறை கமல், “மனைவியை விவாகரத்து செய்யலாம். குழந்தைகளை செய்ய முடியமா? அவர்கள்தான் என் செல்வங்கள்!” என்றார்.
ஆகவே, பலரும் செயல்படுத்த அஞ்சும் முற்போக்கான வழியில் தனது பிள்ளைகளை வளர்த்திருக்கிறார் கமல். நாளைய இந்தியா இந்த வழியில்தான் செல்லும். அதற்கு கமல் முன்னோடியாக இருப்பார்!” என்கிறார்கள்.
இரண்டில் எந்த கருத்து சரி..?
காலம்தான் சொல்ல வேண்டும்!