இந்த ஊரில் ஒரு இளைஞன், விளையாட்டாக விந்து தானம் செய்கிறான். அந்த ஊரில் ஒரு இளம் பெண், செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறாள்.
அப்போதே கதை இதுதான் என்பதை சின்ன குழந்தையும் உணர்ந்துவிடும். ஆம்.. அதுதான் கதை.
அதை சுவாரஸ்யமாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
இதை விட முக்கியம் படம் சொல்லும் செய்திகள்தான்…
“ஏம்மா.. நான் இன்னும் வெர்ஜினா இருக்கேன்னு நினைக்கிறியா?” தந்தை எதிரில் தாயிடம் கேட்கும் இளம் பெண்..
காதல் – திருமணத்தில் வெறுப்புகொண்டு, செயற்கை கருத்தரித்தல் மூலம் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்ளும் இளைஞி..
குழந்தையுடன் தனியாக வாழும் பெண்ணை மனதார காதலிக்கும் ஆண்…
மன விலகல் என்றவுடன் ‘டேக் இட் ஈஸி’யாக விட்டு விலகும் காதலன் – காதலி…
ஓரினச் சேர்க்கையாளரை இயல்பாக நண்பனாக ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள்.
காதலித்து திருமணம் செய்துகொள்ளும் இரு ஆண்கள்; ஆசீர் வதிக்கும் பெரியவர்கள். வாழ்த்தும் நண்பர்கள்….
– இப்படி தைரியமாக படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி, பேரான்மை மிக்கவர்தான்!
இந்த விமர்சனமே போதும்… நடிப்பு, ஒளிப்பதிவு உள்ளிட்டவை குறித்து அறிய விரும்புபவர்கள் மேற்கொண்டு படிக்கலாம்…
அவரதுஎதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்து இருக்கிறார்கள் நடித்தவர்கள் அனைவரும்.
நித்யாமேனன்… தைரியமான பெண்ணை கண் முன் நிறுத்துகிறார். காதலில் ஏற்பட்ட ஏமாற்றம், அதையடுத்து அவர் எடுக்கும் துணிச்சலான முடிவுகள், அறச் சீற்றம்… அதே நேரம், வாழ்வின் அடுத்தடுத்த பக்கங்களை நோக்கி இயல்பாக செல்லும் தன்மை, சிங்கிள் மதராக வாழ்க்கையை எதிர்கொள்வது… அசத்துகிறார் நித்யா.
ரவி மோகனும் சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். காதல் தோல்வி விரக்தியில் இருந்து விடுபட்டு எதார்த்த நிலைக்கும் வரும் மாற்றங்களை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதே போல சிறுவன் பார்த்தீவிடம் பாசம் செலுத்தும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். அதே போல, பிரிந்த காதலி மீண்டும் வர.. அவரை தயக்கத்துடன் எதிர்கொள்ளும் காட்சியிலும் அசரடிக்கிறார்.
சிறுவன் ரொஹான் சிங்… குறும்புத்தனம், தந்தை இல்லாத வெறுமையை வெளிப்படுத்துவது, அதற்கான அரவணைப்பு கிடைத்தவுடன் கொண்டாடுவது என சிறப்பான நடிப்பு.
காதலை முறித்துக்கொள்வது, மீண்டும் காதலனை அணுகுவது… இரண்டு சந்தர்ப்பங்களிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவர்கிறார் டி.ஜெ.பானு.
நித்யா மேனனின் சித்தியாக வரும் வினோதினி சிரிக்க வைப்பதுடன், உணர்ச்சிகரமான காட்சிகளில் நெகிழவும் வைக்கிறார். கொஞ்சமாக சிரிக்க வைத்தாலும் உறுத்தல் இன்றி வந்து போகிறார் யோகிபாபு. லால் ரசிக்க வைக்கிறார்.
தன்பாலின ஈர்ப்பாளராக வினய்… இயல்பாக நடித்து இருக்கிறார்.
முக்கிய பாத்திரத்தில் வந்தாலும் பாதியில் காணாமல் போகிறார். அவரது கதாபாத்திரத்தை இன்னும் விரிவாகவே எழுதியிருக்கலாமே?! லால், மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பிலும் குறையேதுமில்லை.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் வழக்கம் போல் அபாரம்.
– டி.வி.சோமு