நேசிப்பாயா..: திரை விமர்சனம்

எந்த அளவுக்கும் சென்று, எவரையும் எதிர்த்து நின்று காதலியைக் காப்பாற்றும் காதலனின் கதை.
அதிதி ஷங்கர் மீது காதல் வயப்படுகிறார் ஆகாஷ் முரளி. அதிதி மறுக்கிறார். ஆகாஷ், தொடர்ந்து தொடர… சில காரணங்களை சொல்லி, “ஒருவேளை அப்படி நடந்தால் உன்னை விட்டு போய்டுவேன்” என்று சொல்கிறார்.
அதற்கு ஆகாஷும் சம்மதிக்க… இருவரும் காதலிக்கின்றனர்.
ல் ஒரு கட்டத்தில் இருவரும் பிரியும் சூழல் ஏற்படுகிறது. பிறகு அதிதி வேலைக்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்று விடுகிறார்.
அங்கு கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்குச் செல்கிறார் அதிதி. அதோடு சக கைதி மூலம் அவரை கொல்லவும் சதி நடக்கிறது.
காதலி சிறைக்கு சென்றதை அறிந்து ஆகாஷ் போர்ச்சுக்கல் நாட்டுக்குச் செல்கிறார். காதலியை காப்பாற்ற போராடுகிறார்.
அதிதி கொலை செய்தாரா… ஆகாஷ் எப்படி அவரை வழக்கில் இருந்து மீட்டாரா என்பதே மீதிக்கதை.

மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷிற்கு இது முதல் படம். காதலியிடம் தனது நிலையைச் சொல்வது, அவளது கோபத்துக்கு நிதானமாக விளக்கம் சொல்வது, அவள் பிரிந்தவுடன் குமுறுவது, வெளிநாட்டில் காதலி சிறையில் இருக்கிறாள் என்றவுடன் பதறி அடித்து அங்கு சென்று சாகசங்கள் புரிவது… என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஆகாஷ். அதே போல சண்டைக் காட்சிகளில் மூர்க்கம் காட்டி இருக்கிறார்.
அதிதி ஷங்கரும் நடிப்பில் அசத்தி இருக்கிறார். காதலைவிட தனது அடுத்தகட்ட முன்னேற்றமே முக்கியம் என்று தெளிவாக கூறுவது, காதலின் மீதான ஆத்திரம், சிறையில் படும் துன்பம் என அற்புத நடிப்பு.
அட.. மென்மையான கதாபாத்திரங்களில் வரும் ராஜா, இதில் அதிரடி காட்டி இருக்கிறார். அதே போல சரத்குமாருக்கு முக்கிய கதாபாத்திரம். குஷ்புவும் தேர்ந்த நடிப்பை அளித்திருக்கிறார்.

‘லீலை’ ஷிவ் பண்டிட்டிற்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் சிற்பாக செய்துள்ளார். பிரபு ஒரு சீனில் வந்தாலும் அசாத்திய நடிப்பு. அதிதிக்காக வாதாடும் வக்கீலாக வரும் கல்கி கோச்சின், அடிக்கடி ஆகாஷை கலாய்ப்பது போல் திட்டுவது ரசிக்கும்படி இருக்கிறது.
யுவனின் இசை. படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்களும், பின்னணி இசையும் அபாரம்.
இயக்குநர் விஷ்ணுவர்தன் காதல் காட்சிகள் வழக்கம்போல ஸ்டைலிஷாக தந்திருக்கிறார். ஆனால் வெளிநாட்டில் போய் ஒரு இளைஞன் திடுமென பெரிய தாதாக்களை எதிர்கொளவதும் அங்கு பலர் தமிழர்களாக இருப்பதும்… இப்படி லாஜிக் மிஸ்ஸான காட்சிகள் பல.