‘க.மு – க.பி’ : திரைப்பட விமர்சனம்
“காதல் என்பது பிரிவில் மட்டுமல்ல, திருமணத்திலும் முடிந்துவிடுகிறது” என்பது பிளாக் காமெடி பொன்மொழி.
இது ஏன்… காதலிக்கும்போது இருக்கும் விட்டுக்கொடுத்தல், நேசம்…. காதலர்கள் தம்பதியான பிறகு மறைவது ஏன் என்பதைச் சொல்கிறது, க.மு. – க.பி.: கல்யாணத்துக்கு முன் – கல்யாணத்துக்குப் பின்.
ஐடி துறையில் பணியாற்றுகிறார்கள் நாயகன் விக்னேஷ் ரவியும், நாயகி சரண்யா ரவிச்சந்திரனும். “இப்படி ஒரு பாசமான காதலர்களா” என்று வியக்கும் அளவுக்கு காதலிக்கிறார்கள். திருமணமும் செய்து கொள்கிறார்கள்.
விக்னேஷ் ரவிக்கு, திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்பது லட்சியம். அதற்காக தனது ஐ.டி. வேலையை விட்டுவிட்டு படம் இயக்கும் முயற்சியில் இறங்குகிறார். மனைவி சரண்யாவும் இதற்கு முழு சம்மதம் தெரிவிக்கிறார்.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே போகிறது இல்லற வாழ்க்கை. கொஞ்சநாளில், சின்ன சின்ன முட்டல் மோதல்கள்… அவையே பெரும் மனப்பிளவாக ஆகிறது.
நிரந்தரமாக பிரிய முடிவெடுத்து, நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
சின்னச் சின்ன வேடங்களில் கவனம் ஈர்த்த விக்னேஷ் ரவி, நாயகனாக வருகிறார். காதலியிடம் காண்பிக்கும் நேசம், அவளே மனைவியானதும் காட்டும் பொறுமை இன்மை ஆகியவற்றை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகி சரண்யா ரவிச்சந்திரனும் சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். காதல் கணவனிடம் அன்பை எதிர்பார்த்து ஏங்குவது, தன்னைப் புரிந்துகொள்ளவில்லையே என ஆற்றாமைப்படுவது, இறுதியில் வெளிக்காட்டும் ஆதங்கம்…என தூள் பறத்துகிறார்.
பாலு மகேந்திரா பட நாயகிகளைப்போல இந்த கருப்பு வைரம் ஜொலிக்கிறது. எதிர்காலத்தில் இன்னமும் பிரகாசிக்கும்! வாழ்த்துகள்!
“பொண்டாட்டிய காலடியில வச்சிக்கணும்டா” என்கிற கெத்து (!) புருசராக, வரும் நிரஞ்சன், அவரது டார்ச்சரை பொறுத்துக்கொண்டு கண்களாலேயே மனக்குமுறலைச் சொல்லும் அபிராமி முருகேசன் இருவருமே ரசிக்க வைக்கிறார்கள்.
டி.எஸ்.கே, பிரியதர்ஷினி, கபாலி பெருமாள், கேப்டன் ஆனந்த் உள்ளிட்ட அனைவருமே தங்கள் பாத்திரம் உணர்ந்து நடிப்பை அளித்து இருக்கிறார்கள்.
தர்ஷன் ரவி குமாரின் பின்னணி இசை படத்துக்கு பலம். அவரது இசையில், ஜெகன் கவிராஜின் வரிகளில் “இறவியே…” என்ற ஒரு பாடல்தான். இசையும், வரிகளும் ஈர்க்கின்றன.
ஜி.எம்.சுந்தரின் இயல்பான ஒளிப்பதிவு ஈர்க்கிறது.
சிவராஜ் பரமேஸ்வரனின் எடிட்டிங் கச்சிதம்.
பொதுவாக க்ரைம் கதைகளைத்தான் நான் லீனியர் முறையில் உருவாக்குவார்கள். பட இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம்,காதல் திரைப்படத்தை இப்படி உருவாக்கி இருக்கிறார். அதை குழப்பமின்றி அளித்திருக்கிறார். சிறப்பு.
நீண்ட காலம் காதலித்து.. குடும்பத்தினரை எதிர்த்து காதல் திருமணம் செய்துக் கொள்ளும் அளவுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு உள்ள ஜோடி, திருமணத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே முட்டிக்கொள்வது ஏன் என்பதை தனது பார்வையில் சிறப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
“பட்ஜெட் என்பது, செலவழிக்கும் பணத்தில் அல்ல.. ரசிகர்களின் மனதில் ஏற்படுத்தும் அதிர்வுகளே” என்பதை உணர்ந்த இயக்குநர் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்.
மொத்தத்தில், ‘க.மு-க.பி’ திருமணம் ஆனவர்கள், ஆகப்போகிறவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங்: 3.1/5
