செய்தது பலே வேலை! ஆனாலும் தப்பித்தார் இளையராஜா!
இஸ்லாமியர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா நேற்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.
இஸ்லாமிய மக்களும், எதிர்க்கட்சியினரும் இம் மசோதாவை கடுமையாக எதிர்க்கின்றனர்.
அவர்கள், “இந்தத் திருத்தம் வக்பு வாரியத்தின் செயல்பாட்டில் அரசின் தலையீட்டை அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது. அதேநேரத்தில், இஸ்லாம் மதத்திலும் அரசு தலையீடு அதிகரிக்கும் என்று கருத்து கூறப்படுகிறது. மேலும், புதிய சட்டத் திருத்தம், முஸ்லிம் சமூகத்தின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும், வக்பு வாரியங்களில் அதிகாரங்களை மையப்படுத்தும் எனவும் கருதப்படுகிறது. மத மற்றும் சமூகப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சொத்துகளை மட்டுமே வக்பு வாரியம் உரிமை கோர முடியும்.
வக்பு வாரியம் தனியார் சொத்துகளில் எந்த உரிமையும் கோர முடியாது. இதுபோன்ற அம்சங்கள் நிறைந்த வக்பு மசோதா, அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என்று கருதுகின்றனர்.
அவர்களின் உணர்வை ஏற்கும் வகையில், இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. பாஜக உறுப்பினர்கள் தவிர மற்ற அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்தனர்.
இந்தத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, மக்களவையில் திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 39 எம்.பி.க்களும் எதிர்த்து வாக்களித்தனர்.
அதே போல நாடாளுமன்ற மேலவையிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வாக்களித்தன. அதே நேரம், த.மா.கா. தலைவர் வாசன், ஆதரித்து வாக்களித்தார். இதையடுத்து அவர் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.
அவரைப்போலவே, ஆதரித்து வாக்களித்த.. ஆனால் விமர்சனத்துக்கு ஆளாகாத ஒருவர்.. இசையமைப்பாளர் இளையராஜா.
ஏற்கெனவே, டில்லி மாநில உரிமைளைப் பறிக்கும் மசோதாவை ஆளும் பாஜக கொண்டு வந்தபோதும் ஆதரித்தார். இப்போது ஆளும் பாஜக கொண்டு வந்த வக்பு வாரிய மசோதாவுக்கும் ஆதரவு அளித்துள்ளார். மற்றபடி இவர் நாடாளுமன்றத்துக்குச் செல்வதே இல்லை.
ஆனாலும் அவர் விமர்சிக்கப்படவில்லை என்பது ஆச்சரியம்தான்!
