ஜென்ம நட்சத்திரம்: திரை விமர்சனம்

ஜென்ம நட்சத்திரம்: திரை விமர்சனம்

பொதுவாக, பேய்ப்படங்களில் அதுதான் கொலைகள் செய்யும். இந்தப் படத்தில் பேய் போன்ற கொடூர மனதுடைய ஒருவனும் கொலைகள் செய்கிறான்.

நாயகனுக்கு, திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்பது கனவு. அவனது நண்பர்களுக்கும் ஆளுக்கொரு லட்சியம் இருக்கிறது. இந்த நிலையில் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.,  தேர்தலுக்காக மக்களுக்கு பணம் கொடுக்க ஏற்பாடு செய்கிறார். அவரது உதவியாளர் – மிக நல்லவர் – சந்தர்ப்ப சூழலால் அந்தப் பணத்தை எடுத்துவிடுகிறார். இதை அறிந்த எம்.எல்.ஏ.,  உதவியாளரை கொல்ல உத்தரவிடுகிறார். அடியாட்களும் அடித்து உதைக்க.. சின்னாபின்னமாகும் உதவியாளர் தப்பிக்கிறார்.

உயிர் போகும் நிலையில் நாயகன் மற்றும் நண்பர்களிடம், பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இடத்தைச் சொல்லி.. பதிலுக்கு ஒரே ஒரு உதவி செய்யுங்கள் என்கிறார்.

அதன் பிறகு பேயாட்டம் ஆரம்பிக்கிறது.. அது என்ன பேயாட்டம் என்பதுதான் கதை.நாயகனாக தமன் ஆக்ஷன்,  திரைப்பட வாய்ப்புக்காக அலைவது,  உரிய பட்ஜெட்டுக்கு ஒத்துக்கொள்ளாத தயாரிப்பாளரை புறக்கணித்துத் திரும்புவது என்றுமுடிந்த அளவு உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது காதலியாக வரும் நாயகி  மால்வி மல்கோத்ரா, இவர்களது நண்பர்களாக வரும் மைத்ரேயா, ரக்ஷா செரின், சிவம், அருண் கார்த்தி அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.

ஆளுங் கட்சி அரசியல்வாதியாக வரும் வேலராமமூர்த்தி,  அதிரடி அரசியல்வாதியை கண் முன் நிறுத்துகிறார். அவரது உதவியாளராக வரும் காளி வெங்கட் வழக்கம்போல் இயல்பாக நடித்து உள்ளார். அவரது முடிவு பரிதாபம்.

இதய நோய் மருத்துவராக வந்து இறுதியில் பகீர் – பரிதாப முடிவுக்கு ஆளாகிறார் தலைவாசல் விஜய்.

கேஜியின் ஒளிப்பதிவு, திகில் படத்துக்கு வேண்டிய கலக்கத்தை கொடுக்கிறது. பாராட்டுகள்.

இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம்,  அதிரடி இசையால் இன்னும் பயத்தைக் கூட்டுகிறார்.

கிராபிக்ஸ் நாய் நடுங்க வைக்கிறது.

ஒரு பேய்ப்படத்துக்குத் தேவையான திகில் பங்களா, இரவு, அமானுஸ்யம் என கவர்கிறார் இயக்குநர் பி.மணிவர்மன் ..

பார்த்து பயப்படலாம்.