ஜமா விமர்சனம்
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை ரத்தமும் சதையும் உணர்வுமாக பதிவு செய்திருக்கும் படம். நாடகக் குழுக்களை, ஜமா என்பார்கள். ஒரு ஜமாவில், ஸ்திரீ பார்ட் – பெண் வேடமிட்டு – நடிப்பவர் பாரி இளவழகன். இதிகாச நாயகிகளான திரவுபதி, குந்தி உள்ளிட்டோரின் வேடம் புனைந்து, ஆடிப் பாடுகிறார். அந்த வித்தையில் அவருக்கு நிகர் யாருமில்லை.
ஒரே ஒரு முறையாவது, அர்ஜூனன் வேட கட்டி ஆடவேண்டும் என்றும், தனியாக ஒரு ஜமா துவங்க வேண்டும் என்றும் தீரா ஆசையில் இருக்கிறார் நாயகன்.
இதற்கிடையில் அவரது அம்மாவுக்கு ஒரு ஆதங்ம். தன் மகனுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்களே… பெண் வேடமிட்டு நளிமான உடல்பாவங்களுக்கு ஆளானதால்தானே இந்த நிலை.. கூத்துத் தொழிலை விட்டுத் தொலைத்தால் என்ன என்று மகனிடம் ஆவேசப்படுகிறார்.
இந்நிலைியல், கத்து வாத்தியார் சேத்தன்மகள் அம்மு அபிராமிக்கு நாயகன் மீது சிறு வயது முதலே ஈர்ப்பு. வாத்தியார் சேத்தனோ இதற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறார்.
அம்மு அபிராமியின் காதல் வெற்றி அடைந்ததா, நாயகன் தனி ஜமா துவங்கி அர்ஜுனன் வேடமிட்டு நடித்தாரா என்பதே மீதிக்கதை.
திருவண்ணாமலை பகுதியை – கூத்துக் கலையை முதல் முறையாக திரைப்படமாக எடுத்திருக்கிறார் நாயகன் & இயக்குநர் பாரி இளவழகன்.
கூந்தல், நளிமான நடை, பெண்கள் சூழ பழகும் இயல்பு என்று ஸ்த்ரீ பாட் நடிகரை கண்முன் நிறுத்துகிறார். அதுவும் அந்த முகச் சுழிப்பு… அற்புதம். உச்சகட்ட காட்சியில் அதிரடி ஆட்டம் ஆடி பிரமிக்க வைக்கிறார்.
நாயகி அம்மு அபிராமியும் நடிப்பில் அசத்தி இருக்கிறார். கண்களாலேயே பேசி ரசிகர்களை கவர்கிறார்.
கூத்து வாத்தியாராக சேத்தன், நாயகனின் அம்மாவாக கேவிஎன் மணிமேகலை, பூனை என்ற பாத்திரத்தில் வசந்த் மாரிமுத்து, காலா குமார், ஏ.கே.இளவழகன், சிவ மாறன் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இளையராஜாவின் இசை படத்துக்கு பலம். கூத்துக் கலைஞர்கள் பயன்படுத்தும் இசையேயே அளித்து ரசிக்க வைக்கிறார். குறிப்பாக, நீயிருக்கும் உசரத்துக்கு என்ற பாடல் லயிக்க வைக்கிறது.
கோபால் கிருஷ்ணாவின் இயல்பான ஒளிப்பதிவு படத்துக்கு பலம். அளவோடு காட்சிகளைத் தரும் எடிட்டிங் சிறப்பு.
நமது கலையை – கலைஞர்களை கண்முன் நிறுத்தி சிலிர்க்க வைத்திருக்கிறது ஜமா.
ஆகஸ்ட் 2ம் தேதி படம், திரையரங்குகளில் வெளியாகிறது; அவசியம் பாருங்கள்.
