ஜனநாயகன்: விமர்சனம்: தூள் பறக்கும் விஜய் மாஸ்!

ஜனநாயகன்: விமர்சனம்: தூள் பறக்கும் விஜய் மாஸ்!

விஜயின் திரைப்படப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக வெளியாகியிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், மாஸ், ஆக்‌ஷன், அரசியல் மற்றும் பாசப் போராட்டங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு முழுமையான கமர்ஷியல் விருந்து!

தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’யின் அடிப்படைக் கருவை எடுத்து, அதைத் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் களம் மற்றும் எமோஷனல் பின்னணிக்கு ஏற்ப நேர்த்தியாக மாற்றியமைத்து உருவாக்கப்பட்டுள்ளது இதன் திரைக்கதை. தங்கை போன்ற விஜியை ராணுவ அதிகாரியாக்கத் துடிக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்), தமிழ்நாட்டைச் சீரழிக்கத் துடிக்கும் சர்வதேசக் குற்றவாளி ஜான் ஹிம்லர் (பாபி தியோல்) மற்றும் அதிகார மையமான ரங்கசாமியின் (பிரகாஷ் ராஜ்) சதித்திட்டங்களை முறியடித்து, நாட்டையும் தன் லட்சியத்தையும் எப்படி மீட்டெடுக்கிறார் என்பதே ‘ஜனநாயகன்’ சொல்லும் கதை.

 நடிப்புத்திறன்

விஜய்: வழக்கமான துள்ளலான உடல்மொழி, வசீகரிக்கும் முகபாவனைகள் மற்றும் அபாரமான நடனத்தால் ரசிகர்களைக் கட்டிப்போடுகிறார். ‘ஒன் லாஸ்ட் டான்ஸ்’ என நடனத்தில் தெறிக்கவிடுபவர், எம்ஜிஆர் படத்துடன் வரும் இன்ட்ரோ காட்சி, ‘நான் ஆணையிட்டால்’ பாணியில் சாட்டை சுழற்றும் அதிரடி, மாஸான இடைவேளைக் காட்சி எனத் திரைமுழுவதும் தன் ஆளுமையை நிரப்பியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் & பாபி தியோல்: ரங்கசாமி கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் வழக்கம்போல கம்பீரமான நடிப்பை வழங்கியுள்ளார். பாபி தியோல் வில்லனாக மிளிர்ந்தாலும், அவரது கதாபாத்திரத்தின் வலிமையை இன்னும் கூட்டியிருக்கலாம்.

மமிதா பைஜூ: விஜயலட்சுமி (விஜி) கதாபாத்திரத்தில் நடித்து, படத்தின் உணர்ச்சிப்பூர்வமான தூணாக நின்று கவனத்தை ஈர்க்கிறார்.

இசை மற்றும் பின்னணி

அனிருத் இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் வேகத்திற்குத் துணையாக நிற்கின்றன. குறிப்பாக, விஜய் மாஸ் காட்டும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும், உணர்ச்சிப்பூர்வமான தருணங்களிலும் பின்னணி இசை காட்சிகளின் வீரியத்தைக் கூட்டுகிறது.

ஒளிப்பதிவு

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆக்‌ஷன் காட்சிகளின் சுறுசுறுப்பையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் மிக நேர்த்தியாகக் கேமராவுக்குள் கொண்டுவந்து, திரையரங்க அனுபவத்தை மேலும் அழகாக்கியுள்ளார்.இயக்குநர் எச்.வினோத்தின் முத்திரை

ஹீரோ மற்றும் வில்லன்களின் பாதைகளைத் தனித்தனியாகத் தொடங்கி, பின்னர் அவர்களை நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் இடங்களில் எச்.வினோத் தன் திரைக்கதை திறமையைக் காட்டியுள்ளார். அரசியல் கூர்மை, சமூகப் பொறுப்பு மற்றும் மாஸ் கமர்ஷியல் அம்சங்களைச் சரியான விகிதத்தில் கலந்து இயக்கியுள்ளார். துணைக்கதைகளால் படத்தின் நீளம் சற்று அதிகமாகத் தெரிந்தாலும், ரசிகர்களுக்குத் தேவையான அனைத்துப் அம்சங்களையும் அளிப்பதில் வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தத்தில் …

திரையில் தோன்றும் சிறப்பு டைட்டில் கார்டு முதல் எண்ட் கிரெடிட்ஸ் வரை ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரு தூள் கிளப்பும் கமர்ஷியல் என்டர்டெய்னர்! மாஸ் ஆக்‌ஷன் விரும்பிகளுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இது ஒரு மறக்க முடியாத கொண்டாட்டம்.