இந்தியன் 2: திரை விமர்சனம்
மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இருபத்தியெட்டு வருடங்களுக்குப் பிறகு, வெளியாகி இருக்கும் படத்தின் இரண்டாம் பாகம் என்பது எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம். அதோடு கமல் நடிப்பு, ஷங்கர் பிரம்மாண்டம், பல முக்கிய நட்சத்திரங்கள்… இப்படி ஆர்வத்தை அதிகரித்தது இந்தியன் 2.
இந்த ஆர்வத்தை திருப்திப்படுத்தி இருக்கிறதா இந்தியன் 2 என்பதை இப்போது பார்ப்போம்.
ஆண்டுகள் கழித்து பல போராட்டங்களுக்கு பின் இன்று உலகளவில் வெளியாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லைகா இப்படத்தை தயாரித்துள்ளது.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் திரை விமர்சனத்தை பார்ப்பதற்கு முன், இந்தியன் முதல் பாகத்தின் கதை சுருக்கத்தை பார்த்துவிட்டு வரலாம்.
விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர் சேனாபதி. நேதாஜியின் ஐ.என்.ஏ. படையில் முக்கிய தளபதியாக திகழ்ந்தவர். சுதந்திரத்துக்குப் பிறகு, மனைவி, மகன், மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
ஒரு கட்டத்தில், லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கிறார் சேனாபதி. அதாவது, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ‘மரண தண்டனை’ அளிக்கிறார். தனது மகனும் அதே லஞ்ச ஊழலில் திளைப்பதை அறிந்து மகனுக்கும் அதே ‘தண்டனை’யை அளிக்கிறார்.
இவரை காவல்துறை தேட.. வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்கிறார். அதோடு முதல் பாகம் நிறைவடைந்தது.
முதல் பாகத்தின் இறுதியில், ‘தவறு நடந்தால் மீண்டும் வருவேன்’ என்று எச்சரிக்கை செய்திருப்பார் சேனாபதி.
அவர் மீண்டும் வந்திருப்பதுதான் இந்தியன் 2.
சித்தார்த் தனது நண்பர்கள் பிரியா பவானி ஷங்கர், ஜெகன் ஆகியோருடன் சேர்ந்து யு டியுப் சேனல் நடத்துகிறார். அதில், சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். களத்தில் இறங்கியும் போராடுகிறார்.
ஒரு கட்டத்தில், ‘இந்தியன் தாத்தா வந்துதான் தவறுகளை தட்டிக் கேட்கவேண்டும்’ என்று முடிவெடுத்து, #comebackindian என்கிற டேக்கை வைரலாக்கி இங்கு நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விஷயங்களை சமூகவலைதளத்தில் பதிவிடுகின்றனர்.
தைவானில் இருக்கும் சேனாபதி, இதைப் பார்த்து மீண்டும் இந்தியா வருகிறார். அதற்கு முன்பே அவரைப் பிடிக்க காவல்துறை வலைவிரிக்கிறது.
விமான நிலையத்திலேயே சிக்கும் சேனாபதி, பிறகு தப்பிக்கிறார். அதன் பிறகு அவர் யாருக்கெல்லாம் ‘தண்டனை’ கொடுத்தார்… இறுதியில் என்ன ஆனது என்பதே இந்தியன் 2 படத்தின் கதை.
எப்போதும்போல நடிப்பில் பிரமிக்க வைக்கிறார் கமல்ஹாசன். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்பதில்லை.. அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் செம மாஸ்.
ஊழலை எதிர்த்து குமுறும் இளைஞர்களாக சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ஜெகன் சிறப்பாக நடித்து உள்ளனர். எஸ்.ஜே.சூர்யா சில காட்சிகளில்தான் வருகிறார் என்றாலும் கவர்கிறார்.
காவல் அதிகாரியாக வரும் பாபி சிம்ஹா அசத்துகிறார். இந்தியனை பிடிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்க வைக்கின்றன.
அனிருத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகிவிட்டன. பெரிய திரையில் பார்க்கும்போது இசை இன்னும் ஈர்க்கின்றது. பின்னணி இசையிலும் அதிரவைத்து இருக்கிறார் அனிருத்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு அசரடிக்கிறது. குறிப்பாக வெளிநாட்டு காட்சிகள்.. அதிலும் கடலும் வானமும் சேரும் பாடல் காட்சி பிரமிக்க வைக்கிறது.
முத்துராஜ் கலை இயக்கம், மேக் அப், விஎப்எக் என அனைத்தும் தூள்.
லஞ்ச ஊழல், அதை எதிர்த்து நடக்கும் போராட்டம் என முதல் பாக கதைதான் என்றாலும் சொன்ன விதத்திலும், பிரம்மாண்டத்திலும் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குநர் ஷங்கர்.
இந்தியன் 2 படத்தில் ஷங்கரின் பிரம்மாண்ட மேக்கிங் அடிக்கடி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதே போல கமல்ஹாசன் பிராஸ்தெடிக் மேக்கப் போட்டுக் கொண்டு ஆக்ஷன் காட்சிகளை செய்திருப்பதும், அந்த மெட்ரோ டிரெயின் ஃபைட் சீனும் மாஸ். விஜய் மல்லையாவை இந்த படத்திலும் போட்டு பொளந்துள்ளனர். கேலண்டர் சாங் குறியீடு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற கோடீஸ்வரர் என அவரை காட்டியதும், பெரிய திருமணத்தை குஜராத்தை சேர்ந்த நபர் நடத்துவதும், அவரது வீட்டில் தங்க டாய்லெட் உள்ளதாக காட்டும் காட்சிகள் எல்லாம் பிரம்மிக்க வைக்கிறது. மார்ஸ் கிரகத்துக்கு செல்வதாக இன்னொரு கோடீஸ்வரர் ஜீரோ கிராவிட்டியில் பயிற்சி செய்யும் இடத்திற்கே சென்று கமல்ஹாசன் அவரும் பறந்துக் கொண்டே சண்டை போட்டு அவரை வர்மக் கலை மூலமாக போட்டுத் தள்ளுவதும் சிறப்பு.
மொத்தத்தில்.. இந்தியன் 2 – செம மாஸ்!
