ஹிட் லிஸ்ட்: விமர்சனம்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரின் வழி நடப்பவர், மென்பொறியாளர் நாயகன் விஜய் கனிஷ்கா. தனது தாய் சித்தாரா, தங்கை ஆகியோருடன் அமைதியாக வாழ்கிறார்.
இவரது அம்மாவையும், தங்கையும் திடீரென முகமூடி அணிந்த ஒரு மர்மநபர் கடத்துகிறான். கடத்திய அந்த மர்ம நபர் சிறு உயிரைக் கூட கொல்லக்கூடாது என்ற கொள்கையுடன் வாழும் நாயகன் விஜய்யை மிரட்டி இரண்டு கொலைகளைச் செய்யச் சொல்கிறான். நாயகனும் செய்கிறார்.
அந்த முகமூடி அணிந்த மர்மநபர் யார், எதற்காக சிறு எறும்பைக் கூட கொல்லக்கூடாது என்று வாழும் கொள்கை கொண்ட நாயகனை கொலை செய்யச் சொல்கிறான், அந்த முகமூடி அணிந்த மர்ம நபரிடம் இருந்து எப்படி நாயகன் தனது தங்கை, அம்மாவை காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகன் விஜய் கனிஷ்கா அற்புதமாக நடித்து உள்ளார். அப்பாவித்தனமான, பயந்த சுபாவமான இளைஞரை கண்முன் நிறுத்துகிறார். வேறு வழியே இல்லாமல் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை முகபாவனைகளில் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். அதே போல வசன உச்சரிப்பு, உடல் மொழி அனைத்தும் அருமை.
குறிப்பாக, காவல்துறையினருக்கும், அந்த முகமூடி அணிந்த மர்மநபருக்கும் இடையில் சிக்கித் தவிப்பதை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
ரவுடி காளி ( கே.ஜி.எஃப். வில்லன் கருடா ராம்)யுடன் மோதும் சண்டைக் காட்சியிலும் தூள் பறத்தி இருக்கிறார்.
அறிமுக நாயகனான விஜய் கனிஷ்கா, டிஸ்டிங்ஷனில் பாஸ் ஆகி உள்ளார்.
இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி குறைந்த நேரமே வந்தாலும் தன்னுடைய படங்களில் சொல்லும் சமூக கருத்துக்களை இதிலும் சொல்லி முக்கித்துவம் பெறுகிறார்.
காவல்துறை உயர் அதிகாரியாக வரும் சரத்துக்கு, அளவு செய்து தைத்ததைப்போல அருமையான கதாபாத்திரம். கச்சிதமாகப் பொருந்துகிறார். சிறப்பு.முனீஷ்காந்த், பால சரவணன ஆகியோரின் காட்சிகள் குறைவு என்றாலும் சிரிக்கவைக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர்கள் சூர்யகதிர் காக்கள்ளார் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இரட்டையர்களின் இயக்கம் சிறப்பு.
மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசிக்க மட்டுமல்ல.. பாடம் கற்றவும் வேண்டிய படம்.