இது தமிழ்நாட்டு ஆடு ஜீவிதம்! துபாயில் தவித்த அப்பாவி இளைஞரை காப்பாற்றிய எம்.எம்.அப்துல்லா!

இது தமிழ்நாட்டு ஆடு ஜீவிதம்! துபாயில் தவித்த அப்பாவி இளைஞரை காப்பாற்றிய எம்.எம்.அப்துல்லா!

சமீபத்தில் வெளியான ஆடு ஜீவிதம் மலையாள திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அரபு நாட்டில் வேலைக்குச் சென்று, ஏமாற்றப்ட்ட இளைஞரின் நிஜ சம்பவம் படமாக்கப்பட்டது. அதே போல, ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபாய்  பகுதியில் தவித்த தமிழக இளைஞரை, தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரான ஏ.எம். அப்துல்லா, காப்பாற்றி உள்ளார். இந்த  சம்பவத்தை, திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

கடுமையான பணிக்கு நடுவே ஒரு தொலைபேசி அழைப்பு ஒலித்துக் கொண்டே இருந்தது.

அந்தத் தம்பி எங்கள் ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். கிழிந்த தார்பாய்களுக்கு ஒட்டு போட்டு கொடுக்கும் பணி செய்து கொண்டிருந்தவர்.

தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்ததால் எடுத்து சொல்லி விடலாம் என்று, தம்பி வேலையாக இருக்கிறேன் பிறகு அழைக்கிறேன் என்று சொன்னேன். அண்ணா எவ்வளவு வேலையாக இருந்தாலும் ஒரு நிமிடம் கேளுங்கள், நான் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது இதற்குப் பிறகு உங்களிடம் பேச முடியுமா என்று தெரியவில்லை என்று கலங்கியபடி சொன்னார்.

அந்தத் தம்பியை எட்டு மாதங்களுக்கு முன்பு துபாய்க்கு வேலை தருவதாக சொல்லி ஒருவரின் மூலம் அழைத்துச் சென்று ஏதேதோ குளறுபடிகள் செய்து அவரது பாஸ்போர்ட்டும் அவரிடம் இல்லாத படி செய்து விட்டார்கள். இவர் அவர்களிடம் போய் முறையிட இதோ தருகிறோம் அதோ தருகிறோம் என்று எட்டு மாதம் இழுத்து விட்டார்கள்.

பொறுத்துப் பார்த்து அவர்களிடம் கொஞ்சம் கோபமாக கேட்க, அவர்கள் கொடுத்துக் கொண்டிருந்த சாப்பாட்டையும் நிறுத்தி விட்டார்கள். தங்கியிருந்த இடத்தையும் காலி செய்யும் படி சொல்லி இருக்கிறார்கள்.கலங்கியபடி பேசிய அவர், அண்ணா மறுமுறை பேச எனக்கு WI-FI கிடைக்குமா என்று தெரியவில்லை. என்று கலங்கினார்.

நான் தோழர் கோவி லெனின் அவர்களிடம் பேசி, M.M.abdhulla அவர்களிடம் விஷயத்தை சொன்னேன். அந்த தம்பியை என்னை தொடர்பு கொள்ள சொல்லுங்கள் என்று சொன்னார். நான் விஷயத்தை சொல்லிவிட்டு தூங்க சென்று விட்டேன்.

இப்போது விழித்துப் பார்த்தபோது அந்த தம்பியிடம் இருந்து கண்ணீர் மல்க ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்திருந்தது.

அண்ணா என்னை வந்து மீட்டு அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். இந்திய தூதரகத்திடம் பேசி அவர்களுக்கு கடிதம் கொடுத்திருக்கிறோம். அதுவரை செய்வதற்கு எனக்கு ஒரு வேலையும், தங்குவதற்கு இடமும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள்.

மூன்று நாட்கள் கழித்து இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் அண்ணா என்று கண்ணீர் மல்க அனுப்பியிருந்தார்.

எட்டு மாதங்களாக தத்தளித்துக் கொண்டிருந்த ஒருவரை எட்டே மணி நேரத்தில் மீட்டு கரை சேர்த்திருக்கிறார்கள்.

என்னால் நம்பவே முடியவில்லை. யாரு சாமி நீங்கல்லாம்..

 

Related Posts