கருடன் விமர்சனம்

கருடன் விமர்சனம்

நகைச்சுவை பாத்திரங்களில்  இருந்து நாயகனாக உயர்ந்துள்ள சூரியின் இரண்டாவது படம். படம் என்பதைவிட, வதம் என்று சொல்லலாம். அதாவது எதிரிகளை வதம் செய்யும் கதாபாத்திரம் சூரிக்கு.

தென் தமிழ்நாட்டு தேனி மாவட்டத்தின்  கிராமம் ஒன்றை மையப்படுத்தி, நட்பு, அன்பு, பாசம், துரோகம், நியாயம், விசுவாசம் என்று அனைத்து உணர்வுகளையும் அளித்தந்து இருக்கிறார் இயக்குநர்.

சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள், ஆதி (சசிக்குமார்) மற்றும் கர்ணா (உன்னி முகுந்தன்).  கர்ணாவின் விசுவாசமான வேலைக்காரராக வந்து சேர்கிறார் ‘சொக்கன்’ ( சூரி).

பெற்றோர் இன்றி அநாதையாக திரிந்த தனக்கு , உணவளித்து தத்தெடுத்துக் கொண்ட கர்ணாவின் வலது கரம் ஆகிறார் சொக்கன்.  ஏன்… கர்ணாவின் ஏவல் நாயாகவே மாறிவிடுகிறார். இதை பெருமையுடன் சொல்லவும் செய்கிறார்.

அந்த கிராமத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஒன்று சென்னையில் கேட்பாரற்று கிடக்கிறது. அதை கையகப்படுத்த நினைக்கிறார் மாநில அமைச்சர்.  இதற்காக கோயில் நிர்வாகத்தில் தலையிடுகிறார்.  அது பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.இதன் தொடர்ச்சியாக நண்பன் ஆதி மீது கோபமாகிறார் கர்ணா. நட்பு துரோகம் செய்கிறார்.

இந்த நிலையில் சொக்கன் என்ன செய்கிறார் என்பதை ஆவேசமும், ரத்தமுமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

சொக்கனாக படத்தின் நாயகன் சூரி அசத்தி இருக்கிறார். தனக்கு வாழ்க்கை கொடுத்தவர் மீது  அதீத அன்பு கொண்ட அடிமையாகவே வாழ்ந்து இருக்கிறார். அதே நேரம் நியாயத்தின் பக்கம் நின்று அவர் வதம் செய்யும் இரண்டாவது பாதியில் கதை நாயகனாக மட்டுமின்றி கதாநாயகனாகவும் பிரம்மாண்டம் காட்டுகிறார்.

தன் முதலாளி மீது கை வைப்பது அவனது நெருங்கிய நண்பன் ஆனாலும் தடுக்கும் காட்சியில் ரசிக்க வைக்கிறார் சூரி.

சசிகுமார் வழக்கம்போல நல்ல நண்பனாக வந்து, உயிரைவிட்டு கலங்க வைக்கிறார். உன்னி முகுந்தன் ஆரம்பத்தில் நல்ல நண்பனாக.. பிறகு துரோகியாக.. இரு மாறுபட்ட கோணங்களிலும் சிறப்பாக நடித்து உள்ளார்..

கர்ணா கதாபாத்திரத்தில் வரும் உன்னி முகுந்தனும் சிறப்பாக நடித்து இருக்கிறார். நண்பன் சசிகுமார் மீது வைக்கும் பாசம்.. பிறகு ஆத்திரம் என சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதோடு நட்பா, குடும்பமா என தடுமாறும் காட்சிகளில் முத்திரை பதிக்கிறார்.

காவல் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி கச்சிதம். ஆர்.வி.உதயகுமார், மைம் கோபி, வடிவுக்கரசி என கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை அனைவரும் அளித்து உள்ளனர்.யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை, படத்துக்கு பலம். குறிப்பாக,  பஞ்சவர்ணக் கிளியே பாடல் ரொம்பவே ரசிக்க வைக்கிறது.  கிராமத்தின் அழகை, மலையின் பிரம்மாண்டத்தை சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறது ஆர்தர் வில்சனின் கேமரா.

கிராமத்து மனிதர்களை உலவவிட்டு அவர்களுக்குள் நடக்கும் நட்பு, துரோகம், பாசம், காதல் என்ற உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியதன் மூலம் கவனத்தை ஈர்க்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் அனைவரையும் ரசிக்க வைக்கிறான் கருடன்.

Related Posts