“அந்தகன் படத்தை ஏன் நானே இயக்கினேன்!”: மனம் திறந்த தியாகராஜன்
ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் – வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், ”அனைத்து ஊடகத்தினருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் சிறிய வேடத்திற்கு கூட திறமையான கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தோம். திரையரங்குகளில் மறைந்த நடிகர் மனோபாலாவின் வசனங்களுக்கும், வனிதா விஜயகுமார் பேசும் வசனங்களுக்கும் கைத்தட்டல் கிடைக்கிறது என்றால் அதற்கு அவர்களுடைய கடுமையான உழைப்பும் ஒரு காரணம்.
பிரியா ஆனந்த் நடிப்பு ரியலிஸ்டிக்காக இருந்தது. அவருடைய அழகு – சிரிப்பு- டயலாக் டெலிவரி- என எல்லாம் சிறப்பாக இருந்தது.
இந்தத் திரைப்படத்தில் பிரசாந்த் நாயகனாக இருந்தாலும் அனைத்து கேரக்டருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்..
முதலில் இந்த திரைப்படத்தை ஜெயம் ராஜா இயக்குவதாக இருந்தது. அவருடன் மூன்று மாதம் இணைந்து பயணித்தோம். இந்த மூன்று மாத காலத்திற்குள் அவர் லண்டனில் உள்ள வெளிநாட்டு நடிகை ஒருவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். அவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினோம். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டோம்.
மூன்று மாதத்திற்கு பிறகு ஜெயம் ராஜாவிற்கு சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தப் படத்தை இயக்கி நிறைவு செய்த பிறகு இந்த படத்தில் பணியாற்றுகிறேன் என ஜெயம் ராஜா சொன்னார். நான் ‘நன்றி’ என்று சொல்லிவிட்டு, ‘உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள்’ என்றேன்.
அதன் பிறகு நான் இயக்க தீர்மானித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து யோசிக்க தொடங்கினோம். அப்போது சிம்ரனை தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய அளவில் பேராதரவை வழங்கினார். அவர் மேடையில் தமிழில் பேசியதை மிகவும் ரசித்தேன்.
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்- அவர் ஏற்கனவே பிரசாந்த் நடித்த ‘தமிழ்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அவரிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய ஈடுபாடு, ஒத்துழைப்பு பாராட்டும்படி இருந்தது.
சமுத்திரக்கனி- தெலுங்கில் பரபரப்பாக நடித்துக் கொண்டு இருக்கும் முன்னணி நடிகர். நான் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் அவரை ஒரு காட்சியில் அரைகுறை உடையுடன் பாத்ரூமில் உட்கார சொன்னேன். எந்த தயக்கமும் இல்லாமல் அந்த காட்சியில் சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.பிரசாந்த்- இந்தப் படத்தில் மட்டுமல்ல எந்த படத்திலும் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பார். அவர் சொன்னதைத்தான் செய்வார். இவராக எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ள மாட்டார். அதேபோல் இந்தப் படத்தில் நான் என்ன சொன்னேனோ அதை மட்டுமே அவர் செய்தார்.
அவர் பியானோ வாசிப்பதாகட்டும், கண் தெரியாமல் நடிப்பதாகட்டும் என எல்லா காட்சியிலும். நேச்சுரலாக நடித்தார். இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சி இல்லை, பாடல் காட்சி இல்லை, ஆனால் அந்த குறையை தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மறக்கடிக்க செய்திருந்தார். அவருடைய நடிப்பாற்றலால் இந்த படத்தை வெற்றி பெற செய்திருக்கிறார்.
படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட திரையரங்க அதிபர்களுக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.