‘அந்தகன்’ தேங்க்ஸ் மீட்: பிரபலங்கள் பேசியது என்ன?
ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் – வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரலபலங்கள் பேசியதாவது:
“யாரும் செல்போன் பார்க்கலை!”: வனிதா விஜயகுமார்
”இந்தப் படத்திற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்ட பொதுமக்களின் கருத்தில் ஒரு முக்கியமான விஷயம் இடம் பிடித்திருந்ததை கவனித்தேன். படம் பார்க்கும்போது தியேட்டரில் யாரும் செல்போனை பார்க்கவில்லை என குறிப்பிட்டிருந்தனர். அந்த அளவுக்கு படம் சுவாரஸ்யமாக இருந்தது” என்றார்.
தியாகராஜன் காதல் கதைகளை இயக்க வேண்டும்!: ப்ரியா ஆனந்த்
”90ஸ் ஸ்டார் பிரசாந்த்- சிம்ரன் என்று சொல்லலாம். இப்போதும் அவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் இயல்பாகவும், அமைதியாகவும் இருப்பவர் இயக்குநர் தியாகராஜன். அவர் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அதிலும் குறிப்பாக இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்ற வகையில் காதல் கதைகளை அவர் இயக்க வேண்டும்,” என்றார்.
“பிரசாந்த் ராசியான ஜோடி!”: நடிகை சிம்ரன்
“திரையுலகப் பயணத்தில 29 வருடங்களை நிறைவு செய்து விட்டேன். இந்த முப்பதாவது ஆண்டில் ‘அந்தகன்’ சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கிறது. இதற்காக நான் இயக்குநர் தியாகராஜனுக்கு தான் நன்றி சொல்வேன். அவர்தான் இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார்.
படப்பிடிப்பு தளத்தில் தியாகராஜன் அமைதியாக இருப்பார். படப்பிடிப்பு தளமும் அமைதியாக இருக்கும். பணிகள் மட்டும் சுறுசுறுப்பாக நடைபெறும்.
பிரசாந்த் – என்னுடைய ராசியான ஜோடி. இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ப்ரியா ஆனந்த் – படத்தில் அழகாகவும், ரியலிஸ்டிக்காகவும் நடித்திருந்தார். பான் இந்திய நட்சத்திரமாக அவர் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
“அந்தகன்… நிஜமான வெற்றி!”: கே. எஸ். ரவிக்குமார்
”தற்போது திரைப்படங்களை உருவாக்குவது எளிது. அதை வெளியிடுவது கடினம். அதன் பிறகு அந்த திரைப்படம் வெற்றி பெறுவது அதைவிட கடினம். நல்ல படத்திற்கு கூட மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவதில்லை. பைரசியிலோ, ஓ டி டி யிலோ வந்து விடும். அதில் பார்க்கலாம் என்கிறார்கள். நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் என்றால் மட்டுமே அவர்களுடைய ரசிகர்கள் திரையரங்கத்திற்கு சென்று பார்க்கிறார்கள்.
இதையெல்லாம் மீறி அந்தகன் படம் வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதுதான் நிஜமான வெற்றி. படத்தைப் பற்றி வெளியான விமர்சனங்கள் அனைத்தும் சிறப்பானதாக இருந்தன.
இந்தப்படம் திரையிட்ட திரையரங்குகளில் இரவு காட்சிகளில் கூட ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த படக் குழுவினர் வெற்றி விழா கொண்டாடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனெனில் அந்தகன் படம் ஒரு உண்மையான வெற்றியை பெற்றிருக்கிறது.
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் தியாகராஜனின் சிரிப்பில் பல அர்த்தங்கள் இருக்கும். ஆனால் அவருடைய கவனம் எல்லாம் இயக்கத்தில் தான் இருக்கும். நடிகர்கள் சிறப்பாக நடித்தால் உடனடியாக பாராட்டை தெரிவித்து விடுவார்.
படத்தில் பிரசாந்தின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. கண் பார்வை தெரியும். ஆனால் கண் பார்வை தெரியாதது போல் நடிக்க வேண்டும். பிறகு கண்பார்வை நிஜமாகவே தெரியாது. அது போல் நடிக்க வேண்டும். இந்த வேடத்தில் சரியான அளவுகோலில் நடிக்க வேண்டும். கொஞ்சம் மீறினாலும் மிகை நடிப்பு வெளிப்பட்டு விடும். இந்த வேடத்தில் சிறப்பாக நடித்த பிரசாந்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற வேண்டும். திரையுலகில் மீண்டும் வலம் வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

