“தன் நடிப்பை நிறுத்திக் கொண்டு பிரசாந்தின் வளர்ச்சிக்காக அரும் பாடுபடுகிறார் தியாகராஜன்!”: ப்ரவீன் காந்த் நெகிழ்ச்சி
ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் – வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் பிரவீண் காந்த் பேசுகையில், ”’அந்தகன்’ படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் ‘கரிஸ்மா’ தான் காரணம். தியாகராஜன் சார் தன்னுடைய மகனுக்காக இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். தன் நடிப்பை நிறுத்திக் கொண்டு பிரசாந்தின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு வருகிறார். அவருடைய நடிப்புத் திறனுக்கு இன்றைக்கு அவர் ஒரு பான் இந்தியா ஸ்டார்.
தன் மகனை மீண்டும் டாப் ஸ்டார் ஆக்குவதற்காக கடினமாக உழைத்து உருவாக்கிய படம் தான் ‘அந்தகன்’. இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் எதை விரும்புவார்களோ அதை வழங்கி வெற்றியை ருசித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த பிரசாந்த், இடைவெளியை உணர வைக்காமல் நன்றாக நடித்திருக்கிறார். ‘ஜோடி’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களில் திரையில் தோன்றிய பத்தாவது நிமிடத்திலே நம் மனதில் பதிந்த பிரசாந்தை இந்த படத்தில் காண முடிகிறது. இதற்கு அவருடைய கடின உழைப்புதான் காரணம்.
இன்றளவிலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரே நடிகர் பிரசாந்த் தான் என சொல்லலாம். தியாகராஜன்- பிரசாந்த் ஆகியோரைப் போல் திரையுலகில் அனைவரும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பிரசாந்த்திற்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்த தியாகராஜனுக்கு வாழ்த்துகள்,” என்றார்.