“எம்.எஸ். தெய்வம்.. அவர் வாழ்க்கையை படமாக்குவது பாவம்!”: திரைப்படக் கதாசிரியர் எம்.எஸ்.பெருமாள்!

“எம்.எஸ். தெய்வம்..  அவர் வாழ்க்கையை படமாக்குவது பாவம்!”: திரைப்படக் கதாசிரியர் எம்.எஸ்.பெருமாள்!

பிரபல கர்நாடக சங்கீதப் பாடகி மறைந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு, எம்.எஸ். என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.

சுப்புலட்சுமியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, ஜெர்சி, கிங்டம், மேஜிக் படங்களை இயக்கிய கெளதம் தின்னூரி இயக்குகிறார். அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.

இந்நிலையில் “எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கையைப் படமாக்கக் கூடாது” என எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இவர்களில் ஒருவர், கே.பாலசந்தர் இயக்கி கமல், சுஜாதா உள்ளிட்டோர் நடித்த “அவள் ஒரு தொடர்கதை” படத்தின் கதாசிரியர் எம்.எஸ்.பெருமாள். இவர், சென்னை வானொலி நிலையத்தில் மூத்த தயாரிப்பாளராகவும், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தயாரிப்பாளராகவும் மற்றும் இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எழுத்தாளர்.

அவர் தனது முகநூல் பதிவில், “எம்.எஸ்.அம்மா பெயரைக் கேட்டாலே அமைதியும் தெய்வீகமும் கொண்ட முகம்தான் கண்முன் தோன்றும். அவரவர் கருத்துப்படி அம்மாவை ஆராதிக்கிறோம்.

வேறொரு நடிகை மூலமாக அம்மாவை தரிசித்தால் அந்தக் கண்ணியம் நிச்சயமாக சிதறும்.

தேவதாசி > மடிசார் மாமி என்ற பரிணாமத்தில் படம் தயாரிக்கப்பட்டால் அது வேறுவகையான மோதலைத்தான் உருவாக்கும்.

எம்.எஸ்.அம்மா கருவறை தீபம்.

அவரை விட்டில் பூச்சியாகக் காட்டுவது மகாபாவம் …படத் தயாரிப்பை உடனே நிறுத்தணும்!” என்று பதிவிட்டு உள்ளார்.