“பாடலை திருடிய இயக்குநர் சக்தி சிதம்பரம்!”: நெட்டிசன்கள் கண்டனம்!

“பாடலை திருடிய இயக்குநர் சக்தி சிதம்பரம்!”: நெட்டிசன்கள் கண்டனம்!

‘என்னம்மா கண்ணு’, ‘சார்லி சாப்ளின்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம்,  பாடல் திருட்டு புகார் கூறப்பட்டு உள்ளது.தற்போது, ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற படத்தை இயக்கி வருகிறார், சக்தி சிதம்பரம். இதில்,   பிரபுதேவா, மடோனாசெபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

இப்படத்தில் இருந்து, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில், ஆண்ட்ரியா பாடிய  ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா…’ எ ன்ற பாடல் நேற்று வெளியானது.

இப்பாடல் குறித்து சமூகவலைதளத்தில் பலரும், “‘போலீஸ்காரனை கட்டிக்கிட்டா  லத்தி வச்சி அடிப்பான், டாக்டரை நா கட்டிக்கிட்டா ஊசி வச்சி குத்துவான்’. இப்படி பல்வேறு தொழில் செய்பவர்களை ஒருமையில் கூறும் வரிகளாக உள்ளன.   அதோடு, , இரட்டை அர்த்தத்தில் பாடல் உள்ளது” என்று விமர்சித்து வருகின்றனர்.

அதே நேரம், ” இந்த தலைமுறையினர் இப்படியான பாடல்களைத்தான் ரசித்துக் கேட்கிறார்கள்” என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தப்பாடல் இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

யு டியுப் தளத்தில், இப்பாடலை எழுதியவர், இயக்குநர் சக்தி சிதம்பரம் என்று இருக்கிறது. ஆனால், இந்த பாடலுக்கு பின்னூட்டம் இட்டிருக்கும் சிலர், “பத்திரிகையாளரும், ஏற்கெனவே ஜீரகபிரியாணி என்ற பாடல் மூலம் கவனத்தை ஈர்த்தவருமான ஜெகன் கவிராஜ்தான் இந்தப் பாடலை எழுதினார்” என்று பின்னூட்டம் இட்டுள்ளனர்.

சமூகவலைதளத்தில் சிலர், “குறிப்பிட்ட பாடலை ஜெகன் கவிராஜ்தான் எழுதினார் என்று,, விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் சக்தி சிதம்பரமே சொல்லி இருக்கிறார். இப்போது அந்த பாடலுக்கு தன் பெயரைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்.

வயதும் அனுபவமும் அதிகம் உள்ள அவர்  இப்படி வார்த்தைத் திருட்டில் ஈடுபடலாமா?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து இயக்குநர் சக்தி சிதம்பரத்தைத் தொடர்புகொண்டு  கேட்டோம். அவர், “நான் அது குறித்த செய்திகளைப் பார்க்கவில்லை” என்றார்.

நாம், “இந்தப் படத்தின் பாடலான ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா..’ என்ற பாடலை ஜெகன் கவிராஜ் எழுதியதாக நீங்களே விகடன் வார இதழ் பேட்டியில் கூறி இருக்கிறீர்களே” என்றோம்.

அதற்கு அவர், “இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் நான்தான் எழுதி இருக்கிறேன்.. அவ்வளவுதான்” என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

ஜெகன் கவிராஜை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “உண்மையை மறைக்க முடியும்.. அழிக்க முடியாது” என்று சுருக்கமாக சொல்லி முடித்தார்.

(முகப்பு படம்: சக்தி சிதம்பரம் – ஜெகன் கவிராஜ்)