கமல், சிவகார்த்திக்கு பதிலடி கொடுக்கும் ‘தண்டகாரண்யம்’!

கமல், சிவகார்த்திக்கு பதிலடி கொடுக்கும் ‘தண்டகாரண்யம்’!

2019 ஆம் ஆண்டு வெளியான, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை இயக்கி, தமிழ்த் திரையுலகில் தடம் பதித்தார், அதியன் ஆதிரை. இப்படம் மிக முக்கியமான விசயம் ஒன்றைப் பேசி, கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், அதியன் ஆதிரை அடுத்து, தண்டகாரண்யம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கலையரசன், தினேஸ், ரித்விகா, வின்சு சாம், ஷபீர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை செல்வா ஆர்.கே. கவனிக்கிறார். இப்படத்தை, பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் லர்ன் அண்ட் டீச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் படத் தயாரிப்பாளரான இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார். அதில், கலையரசனும், தினேஷும் இடம்பெற்று இருந்தனர். மரம் ஒன்று பற்றி எரிகிறது. வறண்ட நிலமும், சிவப்பு கொடியும் கவனம் ஈர்த்தது.

தவிர இந்த போஸ்டரை வெயிட்ட பா.ரஞ்சித், “ஒரு நாட்டை பாதுகாக்க வெறும் துப்பாக்கி பீரங்கி அணுகுண்டுகளால மட்டுமே முடியாது…’’ என கேப்ஷன் பதிந்தார். இதுவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

தற்போது, படத்திற்கு தணிக்கை குழு, யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.இந்நிலையில் மாலை மலர் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் “தணிக்கை சான்றிதழ் கிடைத்ததை இதனை பா. ரஞ்சித் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில் ‘அமரன்கள் செய்த அநீதிக செய்த அநீதிகளை பேசும் தண்டகாரண்யம்’ என பதிவிட்டுள்ளார்” என செய்தி வெளியிட்டு உள்ளது.

ஆனால், இந்தப் பதிவை வெளியிட்டவர், நடிகர் முத்துக்குமார். சர்பேட்டா பரம்பரை படத்திலும் நடித்தவர்.அவரது கருத்தும் நம் கவனத்தை ஈர்க்கிறது.

கடந்த ( 2024ம்) வருட தீபாவளி நேரத்தில், அக்டோபர் 31ம் தேதி அமரன் திரைப்படம் வெளியானது. கமல் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்தார்.

இப்படம், ஜம்மு – காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளை எதிர்த்து போரிடும் ராணுவ வீரர்கள் பற்றிய கதை.

அமரன் திரைப்படத்தை விமர்சித்து, பா.ரஞ்சித்தின் நீலம் இணையதளத்தில் வெளியான கட்டுரை குறித்த தகவல்

2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரியும் போது, ஷோபியானில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவானது.

படம் பரவலான வரவேற்பைப் பெற்றதோடு, அரசியல் தலைவர்கள் பலரது பாராட்டையும் பெற்றது.

அதே நேரம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, அமரன் படத்தை கடுமையாக விமர்சித்தார்.

அவர், “மண் உரிமைக்கும் தன்னுரிமைக்கும் ஜனநாயக வழியில் போராடியவர்கள் பலர் சீருடைகளில் ஒளிந்துள்ள வன்ம மிருகங்களால் வேட்டையாடப்பட்டனர்.
பல்லாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்கள் மீது அணுவளவும் அனுதாபம் காட்டாமல் அவர்கள் அத்தனை பேருமே பயங்கரவாதிகள் என்று அமரன் படம் சித்திரிப்பது எத்தனை கொடுமை!” என்று தெரிவித்தார்.

அதே போல், அறம் படத்தை இயக்கிய கோபி நயினார், “அமரன் படத்தின் திரைக்கதைக்கு பின்னால், ஒரு சமூகத்தின் துயரம் இருக்கிறது. ஆதை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை!” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்தான், நடிகர் முத்துக்குமார், ‘அமரன்கள் செய்த அநீதிக செய்த அநீதிகளை பேசும் தண்டகாரண்யம்’ என பதிவிட்டுள்ளது கவனத்தை ஈர்த்து உள்ளது.

தண்டகாரண்யம் என்பது சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய காடுப் பகுதி. இது குறித்து சி.பி.எம். கட்சியின் கனகராஜ் கூறுகையில், “அப்பகுதியில் கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. ஆகவே காலம் காலமாக வசிக்கும் பூர்வ குடிமக்களான பழங்குடியினரை விரட்டி அடித்து, அப்பகுதியை அழித்து கார்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்க அரசுகள் முயற்சிக்கின்றன. இதை அப்பகுதியில் இருக்கும் மக்கள் ஏற்கவில்லை. அவர்களுக்காக நக்சலைட்டுகள் போராடுகின்றனர். சமீபத்தில், நக்சலைட்டுகள் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், நக்சலைட்டுகளை கொடூரமாக வேட்டையாடி வருகிறது ஒன்றிய பாஜக அரசு” என்று தெரிவித்து இருந்தார்.

இதை வைத்துப் பார்க்கும்போது, தண்டகாரண்யம் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கைப் போராட்டம்தான் படத்தின் மையமாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.

ஆக, தனது முதல் படம் போலவே இதிலும் மக்கள் பிரச்சினையை முன்னிருத்தி இருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.

 

 

 

 

 

Related Posts