‘இந்தியன் 2’ வழக்கு: இன்று நீதிமன்றத்தில் விசாரணை!

‘இந்தியன் 2’ வழக்கு: இன்று நீதிமன்றத்தில் விசாரணை!

இந்தியன் பாகம் இரண்டு திரைப்படம் குறித்த வழக்கு மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

லைகா தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை (ஜூலை 12) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையே, மதுரையை சேர்ந்த வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் இந்தியன் 2 படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மதுரை மாவட்ட 4 வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அவரது மனுவில், தனது அனுமதி இன்றி வர்மக்கலை முத்திரை இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது இயக்குனர் சங்கர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜாராகி வாதாடினார். நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுபாஷ் கரன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.

விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், நீதியின் நலன் கருதி வழக்கில் எதிர் மனுதாரர்களான தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என நீதிமன்ற நீதிபதி செல்வ மகேஸ்வரி உத்தரவிட்டார். இல்லையெனில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் வாதத்தை பொறுத்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.