சென்னை செம்பரம்பாக்கம் ஏரி : வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணா நதி நீரின் வருகை மற்றும் தொடர் மழையினால் சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரேநாளில் ஏரியின் நீர்மட்டம் 145 மில்லியன் கனஅடி உயர்ந்தது. மேலும், நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘டி -13 குன்றத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியில் பெய்துவரும் மழை காரணமாக நீர்மட்டம் 15.11.2020 தேதி மாலை நிலவரப்படி 2016 அடி உயரத்தை எட்டியுள்ளது. 22 அடி உயரத்தை விரைவில் எட்ட வாய்ப்புள்ளதால் 22 அடியை எட்டும்போது ஏரியின் 5 கண் மற்றும் 19 கண் மதகுகள் வழியாக உபரி நீரை எந்த நேரத்திலும் திறந்துவிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வெளியேற்றப்படும் நீரானது அடையாறு ஆற்றில் சேரும் பகுதிகளான திருநீர் மலை, குன்றத்தூர், வழுதலம்பேடு, நத்தம், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், மணப்பாக்கம் போன்ற அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

காவல்துறை எச்சரிக்கை

எனவே அம்பத்தூர், புனித தோமையார் மலை மாவட்ட காவல் துணை ஆணையாளர்கள் அவர்கள் நிலைமையை கூர்ந்து கண்காணித்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் நிகழா வண்ணம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்!’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே  சென்னை மாநகராட்சி அதிகாரி பிரகாஷ் கூறுகையில்,  “செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்வது குறித்து, தலைமை செயலர், பொதுப்பணி துறை செயலர் மற்றும் சுகாதாரத் துறை செயலர் அனைவரும் கலந்து பேசியுள்ளோம். வெள்ளப்பெருக்கு காலங்களில் சமாளிப்பதற்கும், மக்களின் குடிநீர் தேவைகளையும் கருத்தில்கொண்டு, நீர்மட்டம் 22 அடியை தொட்டவுடன், குறைவான அளவில் நீரை திறந்துவிட கலந்தாலோசித்துள்ளோம்.

அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால், ஏரிக்கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சப்பட தேவையில்லை!” என்று கூறியுள்ளார்

 

Related Posts