சாதி ஒழிப்பு ‘புரட்சிகர’ இயக்குநர்கள்: சொல்ல வேண்டியது இதாம்பா!

சாதி ஒழிப்பு ‘புரட்சிகர’ இயக்குநர்கள்: சொல்ல வேண்டியது இதாம்பா!

சாதிக் கொடுமைகளைப் பேசும் திரைப்படங்கள் சமீபக காலமாக தொடர்ந்து வெளியாகின்றன. இந்த வாரம் நான்கு படங்கள் வருகின்றன. இது வரவேற்கத்தக்க விசயம்.

இது குறித்து பத்திரிகையாளர், டி.வி.சோமு, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“மாட்டு வண்டியில் போகும் சிறுவனுக்கு, வண்டி ஓட்ட ஆசை வரும்.

இதை உணர்ந்த வண்டிக்காரர், மாட்டுக் கயிற்றின் ஒரு முனையை அவனிடம் கொடுப்பார். அதைப் பிடித்தபடியே சிறுவன், தான்தான் வண்டி ஓட்டுவதாக.. சாதித்துவிட்டதாக நினைப்பான்.

ஒரு பெருமிதம் தலைக்குள் சுற்றும்.

சாதி ஒழிப்பு படம் எடுக்கும் இயக்குநர்களின் நிலை இந்த சிறுவனை ஒத்ததுதான்.

இவர்கள் சாதி ஒடுக்குமுறையை விமர்சித்து எடுக்கிறார்கள்.  மகிழ்ச்சி.. இதற்கு மூலாதராமான விசயத்தை விமர்சிக்க வேண்டுமே!

இன்னொரு பக்கம், ‘பட்டியலின மக்கள் மீதான ஒடுக்குமுறை குறித்தான படம்…’ என்பது விளம்பரங்களின் மூலமும் தகவல்களின் மூலமும் ஏற்கெனவே அறிந்ததுதான்.

உடனே, ‘ஸ்… இந்த சில டைரக்டருங்களுக்கு வேற வேலையே இல்லையா… எப்போதோ நடந்த சம்பவங்களை இப்போ கிளறணுமா… இப்பல்லாம்கூட, பட்டியலின மக்கள் மீது அடக்குமுறை நடக்குதா’ என்று அலுத்துக் கொள்பவர்கள் உண்டு.

இன்று வெளியாகும் நந்தன் திரைப்படமும்,  சாதீய ஒடுக்குமுறையைச் சொல்கிறது.

ஆனால்,  படம் ஆரம்பிக்கும்போதே இயக்குநர் இரா. சரவணன், ‘சந்தேகம் இருந்தால் வாருங்கள்.. ஒடுக்கு முறை நடக்கும் கிராமங்களுக்கு உங்களை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறேன்’ என்று கார்டு போட்டுவிட்டார்.

உண்மை… பாராட்டுகள்!

தனித்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சித் தலைவரை, ஆதிக்க சாதி பிரமுகர் – ( ஊராட்சி முன்னாள் தலைவர்) எப்படி ஒடுக்குகிறார்… அதற்கு சாதி ஆதிக்கவாதிகள் எப்படி உடன்படுகிறார்கள் என்பதை வலிக்கும்படி எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

சிறப்பு!

அதே நேரம், சாதி ஒடுக்குமுறைக்கு காரணம் சாதி தான் என்பது எல்லோருக்கும் தெரியும். சாதிக்கு காரணம் மதம்.. மதத்தின் அடிப்படை (கற்பனை) கடவுள்.

அதனால்தான் ஒடுக்குமுறைக்கு எதிரான தனது எதிர்ப்பை, கடவுள் மறுப்பில் கொண்டுபோய் நிறுத்தினார் தந்தை பெரியார்.

அதில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.ஆனால், பொது நோக்கம் கொண்ட இயக்குநர்களில் சிலர், சாதி ஒடுக்குமுறை என்பதோடு நின்று விடுகிறார்கள்.

இவர்களது பொது நோக்கம் – சமூக அக்கறை பாராட்ட வேண்டியது.. வாழ்த்த வேண்டியதுதான்.
அதே நேரம் சாதி ஒடுக்குமுறை ஒழிய – நல்ல மாற்றங்கள் வர – கடவுள் ஒழிப்பு அவசியம்.
நல்ல இயக்குர்களுக்கு இந்த அறிவாற்றல் இல்லையா, துணிச்சல் இல்லையா என தெரியவில்லை.

சிறுவர்கள், மாட்டுக்கயிறின் ஒரு பகுதியை பிடித்துக்கொண்டு.. வண்டியை தானே ஓட்டுவதாக கற்பனை செய்துகொள்வார்களே… இப்படித்தான் சில இயக்குநர்கள் கொள்கிறார்களோ இந்த சில இயக்குநர்கள் என தோன்றுகிறது!

சாதி ஒடுக்குமுறை குறித்து படம் எடுக்கும் மாரி செல்வராஜ், தனது படங்களில் தனது குலதெய்வ காட்சிகளை வைக்கிறார். இதை வெளிப்படையாகவே பேட்டிகளில் சொல்கிறார். சாதி அடக்குமுறையில் இருந்து குலதெய்வம் ஏன் காப்பாற்றவில்லை என்கிற கேள்வி அவருக்கு எழவே இல்லை. இந்த கேள்வி எழுந்தால், அடக்குமுறைக்குக் காரணமே.. மனிதன் உருவாக்கிய இந்த கடவுள்கள்தான் என்பது புரியும்..

 

(இரா. சரவணன் இயக்கி இன்று வெளியாகும் நந்தன் படத்திலும் கடவுள் காட்சிகள் உண்டு!)

இன்னொரு புறம், தந்தை பெரியாரை – பொதுவுடமை போராளிகளை “என்ன செய்தார்கள்” என்று வரலாற்று அறிவின்றி கேட்கிறார் பா.ரஞ்சித்.

ஆனால்…

சாதி உள்ளிட்ட வெகுபல மூட நம்பிக்கைக்களுக்குக் காரணம் கடவுள் என்கிற கற்பனைதான் எனறு அடித்துச் சொன்னவர் – ஆராய்ந்து சொன்னவர் – பெரியார்.

அவர் இன்னொன்றும் சொன்னார்: ‘சாதியை ஒழிக்க கடவுளை மறுக்க வேண்டும்.   கடவுள் ஒழிபைப் பேச முடியலை என்றால் இந்த வேலையிலேயே ஈடுபடாதே’ என்கிறார்.

அதுதான் உண்மை.

அப்படி செயல்பட்ட ஒரு இயக்குநர் உண்டு.

அவர், மரியாதைக்குரிய வேலு பிரபாகரன் ( Velu Prabakaran Velu) அவர்கள்.

வெகு பலருக்கு கடவுள் மறுப்பை ஏற்க தயக்கம் இருக்கும் என்கிற யதார்த்தத்தை உணர்ந்தவர் அவர். ஆகவே, ‘கடவுள் இல்லை’ என்தற்கு பதிலாக, ‘கடவுள் தேவை இல்லை’ என்று அழகாகச் சொல்லி இருப்பார்.

வேறென்றும் இல்லை.. ‘கடவுளை மற’ என்பதன், இன்னொரு வெர்சன்தான் இது!
என்னவொரு அற்புத சிந்தனை!

படமும், சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாமல் இருக்கும்!

இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘கடவுள்’ திரைப்படம்தான் அது!
வேலு பிரபாகரன், மணிவண்ணன், ரோஜா உள்ளிட்டோர் நடித்த படம்.

இசையமைத்தது இளையராஜா!

இந்த படத்தின் பாடல்கள், வேலு பிரபாகரன் பேசும் கிளிப்பிங்ஸ்கள் இப்போதும் இணையத்தில் வைரலாகிறது.அப்படி ஓர் திரைப்படம், இன்னும் வரவில்லை.

இரா.சரவணன் போன்ற, உண்மையிலேயே சமூக அக்கறை கொண்ட இயக்குநர்கள் அந்த படத்தைப் பார்க்க வேண்டும்.

அதுபோன்ற படங்களை இயக்க வேண்டும்.

அதுவே சமூக மாற்றத்தை ஏற்படுத்த சரியான வழி!

அதே நேரம், இப்போது வெளியாகி இருக்கும் நந்தன் திரைப்படமும் சிறப்பாக உள்ளது.

உள் நோக்கத்துடனோ, வியாபாரமாகவே பட்டியலின மக்கள் பிரச்சினையை இரா. சரவணன் பயன்படுத்தவில்லை. உண்மையான சமூக அக்கறை இருக்கிறது. அதை, படம் சொல்கிறது.

ஆகவேதான் இந்த கட்டுரை..

தவிர, படத்தை சுவாரஸ்யமாகவும் அளித்து உள்ளார். அடுத்து அவர், கடவுள் மறுப்பை நோக்கி பயணிக்க வேண்டும். அதுதான் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான வழி.

@ வேலு பிரபாகரன் அவர்கள் இயக்கிய கடவுள் படத்தின் லிங்க் இங்கே அளித்து இருக்கிறேன்..

கடவுள் – முழு நீள திரைப்படம்

முக்கிய குறிப்பு:

எனது ஆதங்கத்தைப் போக்கும் வகையில் ஒரு திரைப்படம் வர இருக்கிறது. அது, போஸ் வெங்கட் இயக்கும், சார்.

படத்தின் பாடல்கள், டீசர், டிரெய்லர் ஆகியவை நம்பிக்கையை விதைக்கின்றன.

இது குறித்த எனது கட்டுரையைப் படிக்க..

‘சார்’: பிற்போக்கு மகாவிஷ்ணு – முற்போக்கு சங்கர் கதையா?

 

– கட்டுரை: பத்திரிகையாளர் டி.வி.சோமு

தொடர்புக்கு: பத்திரிகையாளர் டி.வி.சோமு முகநூல் பக்கம்

[email protected]

 

Related Posts