விமர்சனம்: பம்பர்

விமர்சனம்: பம்பர்

பிரம்மாண்டமான படம், பம்பர்.  பெரிய நடிகர்கள்.. பெரிய செட், பெரிய செலவு.. என்றில்லாமல்..   உணர்வே பிரம்மாண்டம் என்பதை உரத்துச் சொல்லும் படங்களில் ஒன்று, பம்பர்.

வெட்டியாய் ஊர் சுற்றும் இளைஞன் புலிப்பாண்டி.  சபரிமலை  செல்கிறான். அங்கு ஒரு ஏழை   லாட்டரி வியாபாரி மீது பரிதாபப்பட்டு, ஒரு டிக்கெட் வாங்கிகுறான். அதை அங்கேயே தொலைத்து.. மறந்தும் விடுகிறான்.டிக்கெட், லாட்டரி வியாபாரியிடம் தங்கிவிடுகிறது. அதற்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுகிறது. பிறகு என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமாக, உயிரோட்டமாகச் சொல்கிறது படம்.

படத்தின் நாயகன் வெற்றி  இயல்பாக நடித்துள்ளார். தூக்குக்குடி இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். மாமன் மகள் மீது காதல் கொள்வது,  அவள் கிடைக்கமாட்டாள் என்றதும் விரக்தியடைந்து  ஒதுங்குவது, தன்னைத் தேடி வந்து பரிசுச் சீட்டைக் கொடுக்கும் வியாபாரியை மதிக்காதது, பிறகு அவர் மனம் உணர்ந்து நெகிழ்வது.. என உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். வெற்றியின் திரை வாழ்வில் முக்கியமான படம் இது.இனி அமானுஷ்ய படங்களை ஒதுக்கி, இது போன்ற சமூகப் படங்களில் அவர் கவனம் செலுத்த வேண்டும். தமிழின் முக்கிய நாயகராக உயர வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

படத்தின் இன்னொரு நாயகர், ஹரீஷ் பெராடி. வயது முதிரந்த நிலையில்,  நடை தளர்ந்து அவர் அலைவதைப் பார்க்கையில் மனம் நெகிழ்கிறது. இயல்பான பார்வை, நிதான பேச்சு என மனதில் பதிகிறார்.

அவரது லாட்டரி முதலாளியாக வரும் நபர், மகனாக வருபவர், வெற்றியின் நண்பர்கள்.. அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.

கடல் சார்ந்த தூத்துக்குடி, மலை சார்ந்த சபரி மலை.. என அனைத்து காட்சிகளையும் சிறப்பாக படம் பிடித்துத் தந்திருக்கிறது வினோத் ரத்தினசாமியின் கேமரா.

பாடல்கள் சுகம். இசை, கோவிந்த வசந்தா.

அதே போல பின்னணி இசையில் ஈர்க்கிறார்  ‘மசாலா கஃபே’ கிருஷ்ணா.

மனம் மாறிய நாயகன், அப்படியே பணப்பையை லாட்டரி வியாபாரியிடம் கொடுத்துவிடுவாரோ என்று நினைக்கையில் அவர் எடுக்கும் முடிவு இயல்பானது.

இப்படி சினிமாத்தனம் இல்லத காட்சி அமைப்புக்காகவே இயக்குநரை பாராட்டலாம். சாதி மத ரீதியான படங்களை எடுத்து பதட்டத்தை உருவாக்கி கல்லா கட்டும் இயக்குநர்களிடையே,  ‘எல்லாத்தையும்விட காசுதாண்டா பெருசு.. அந்த காசைவிட மனுசத்தனம்தாண்டா  பெருசு’ என்கிற உண்மையை அடுத்தமாகச் சொல்கிறது படம்.  அதுவும் பிரச்சாரமாக இல்லாமல்..  போகிற போக்கில் இயல்பாக.. ஆனால் மனதில் பதியும்படி சொல்லியிருக்கிறது.

தலைப்புக்கு ஏற்றபடி, ‘தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும் பம்பர் பரிசு’ என்று எழுதுவது பழைய பாணிதான்.

ஆனால், அது உண்மை!

 

Related Posts