சோசியல் மீடியாவை தடை செய்ய வேண்டும்!
டி.வி.சோமு சிறப்புப் பக்கங்கள்:
இந்த ஒளிப்படத்தைப் பார்க்கும்போதே பதைபதைக்கிறது. 13 மற்றும் 11 வயது உடைய சகோதரிகள். மூத்தவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகிறான் ஒரு “நண்பன்”. அவன் அழைக்க வெளியூர் செல்கிறார். உடன் தங்கையும் வருகிறார்.

வழியில் இவர்களைப் பார்த்த காம வெறியன் இரு குழந்தைகளையும் பலாத்காரப்படுத்துகிறான். பிறகு மிரட்டி அனுப்பி வைக்கிறான். அந்த சிறுமிகள் இன்ஸ்டா நண்பனின் ஊருக்குச் செல்கிறார்கள். அங்கு அவனும் பலாத்காரப்படுத்துகிறான்.
பொம்மையை மறக்காத குழந்தைகளுக்கு இத்தனை கேடு.
இது நடந்தது தமிழ்நாட்டில்.. சில நாட்களுக்கு முன்.
நாடு முழுதும் நடக்கும் இது போன்ற நிகழ்வுகள் குறித்து தினம் தினம் செய்திகள் வருகின்றன.
சிறுமிகளை பலாத்காரப்படுத்திய வெறிப்பிடித்த அந்த மனித மிருகங்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது ஓரளவு நிம்மதியை அளிக்கிறது.
ஆனால் இந்த விவகாரத்தின் அடிப்படை.. இன்ஸ்டாகிராம்.
இது போன்ற சோசியல் மீடியாக்கள் தேவையா என்கிற கேள்வி எழுகிறது.
“மக்களுக்கான ஊடகம் இது.. உண்மையான சுதந்திரம் இதுதான்.. எந்தக் கருத்தையும் பதிவிடலாம்..” என்கிற எண்ணம் பலருக்கு உள்ளது.
ஆனால் நிஜம் அது அல்ல.
நல்லவித – அவசியமான கருத்துக்களை உடைய தகவல்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பதிவிடப்படுகின்றன என்பது உண்மையே. இதன் சதவிகிதம் மிகக் குறைவு.
சோசியல் மீடியாக்கள் வந்த கடந்த சில பல வருடங்களில் நம் நாட்டில் எந்தவித முன்னேற்றமும்.. அதாவது மக்களுக்கான முன்னேற்றமும் நடக்கவில்லை.
ஆபத்துகளே அதிகரித்து உள்ளன.
கோவையில், நீதிபதிகள், காவல் துறையினர், கல்வியாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டம் நடைபெற்றது.
சைபர் குற்றங்கள் தொடர்பாக வும், அதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்துமான கூட்டம்.
அதில், “சோசியல் மீடியாவினால் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. குறப்பாக பெண்களும், குழந் தைகளும் சமூக வலைதளங்களில் குறிவைக்கப்படுகின்றனர். பெண் கள், குழந்தைகளை குறிவைத்தே சைபர் குற்ற சம்பவங்கள் தற்போது அதிக அளவில் நடக்கிறது” என்றார்கள்.
நம் எல்லோருக்குமே தெரியும்…
ஒரு காலத்தில் ஒளிந்து ஒளிந்து சிலர் படித்த ஆபாச புத்தகங்கள் இன்று விசூவல் வடிவில்.. வீடியோவாக.. சுதந்திரமாக (!) செல்போனில் பார்க்க முடிகிறது…
சாதி மத கலவரங்களை உருவாக்கும் – வளர்க்கும் வதந்திகள் எளிதாக சோசியல் மீடியா மூலம் பரவுகிறது…
பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள்.. பலாத்காரங்கள் நடக்க உதவுகிறது…
விபசார தொழில் செய்யும் ஆண்கள் பெண்களுக்கு உதவியாக இருக்கிறது …
ஆபாச என்பதைவிட.. அருவெறுப்பின் எல்லையைக் கடந்த வீடியோக்கள், நேரலை என்று செல்போன் தேடி வருகின்றன…
இப்படித்தான் ஆகப்பெரும்பாலும் சோசியல் மீடியா பயன்படுத்தப்படுகிறது.
தவிர ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா.. எதிலும் நாம் நினைக்கும் நேர்மையான விசயங்கள் அனைத்தையும் பதிவிட்டுவிட முடியாது. அந்தந்த நாட்டு அரசுக்கு எது சரியோ அதை பதிவிடவே சமூகவலைதள நிர்வாகம் அனுமதிக்கிறது.
ஆகவே அரசு மட்டும்.. அதுவும் வீணாண – தவறான செய்திகளைப் பரப்பாமல்… மக்கள் நலத்திட்டங்கள், மருத்துவ மற்றும் பேரிடர் எச்சரிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்க மட்டும் பயன்படுத்த வேண்டும். பொது மக்கள் பயன்பாட்டுக்கு இவை தேவையில்லை.
ஆகவே, பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்களை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
– டி.வி.சோமு
