விஜய் பயன்படுத்தும் அதே நிறுவனம்! மீண்டும் ஒரு அமைச்சரை பலிவாங்கிய  லியர்ஜெட்!

விஜய் பயன்படுத்தும் அதே நிறுவனம்! மீண்டும் ஒரு அமைச்சரை பலிவாங்கிய  லியர்ஜெட்!

ஜனவரி 28, 2026:

இன்று காலை,  உலகையே அதிரவைத்திருக்கிறது, அந்த  விமான விபத்து.

மும்பையில் இருந்து புறப்பட்ட அந்த லியர்ஜெட் 45 (VT-SSK) ரக விமானத்தில் மகராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்தார். அந்த குட்டி விமானம், பாரமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது ஓடுபாதையை விட்டு விலகி  தீப்பிடித்தது.

அஜித் பவார்,  அவரது பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மற்றும் இரு விமானிகள் என ஐவரும்  உயிரிழந்தனர்.

 லியர்ஜெட் பாதுகாப்பானதா?

அஜித் பவார் பயணித்த லியர்ஜெட் 45 என்பது ஒரு ‘சூப்பர்-லைட்’ (Super-light) ரக சொகுசு ஜெட் விமானம்.  கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் ஏரோஸ்பேஸ்  நிறுவனத்தின் தயாரிப்பு இது.  இதன் விலை, சுமார் ₹100 கோடி முதல் ₹130 கோடி வரை!

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த ரக விமான உற்பத்தி நிறுத்தப்பட்டது. பம்பார்டியர் ஏரோஸ்பேஸ்  நிறுவனம் பெரிய ரக விமானங்களை மட்டுமே தயாரிக்கிறது.

ஆனாலும் தற்போது விபத்துக்கு உள்ளாகி இருக்கும்  லியர்ஜெட் 45 (VT-SSK) ரக விமானம் பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது.  Federal Aviation Administration  தரச் சான்றிதழ் பெற்றது.  Honeywell Primus 1000 எனும் நவீன ஏவியோனிக்ஸ் சிஸ்டம் இதில் உள்ளது. வானிலை மற்றும் இதர விமானங்களைக் கண்டறியும் சென்சார்கள் (TCAS) இதில் பொருத்தப்பட்டுள்ளன.

ஆனாலும் விபத்து ஏற்பட்டுவிட்டது.

இதே விமானம் ஏற்கெனவே அமைச்சர் பலி!

ஏற்கெனவே இதே ரக விமானம்  விபத்துக்கு உள்ளானது.  ஆம்.. 2008ம் ஆண்டு மெக்சிகோ நாட்டின் உள்துறை அமைச்சர் ஜுவான் காமிலோ மொரினோ பயணித்த லியர்ஜெட் 45 விமானம், ( தற்போது போலவே) மெக்சிகோ சிட்டியில் விமான நிலையத்தில்  தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளானது. இதில் அமைச்சர் உட்பட அனைவரும் பலியாகினர்.

இரண்டு வருடங்களுக்கு முன், இதே ரக விமானம் மும்பை விமான நிலையத்தில் மழையில் சறுக்கி விபத்துக்கு உள்ளானது.  நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை.

இந்தியாவில் வாடகை விமான நிறுவனங்கள்

இந்தியாவில் சுமார் 120-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சார்ட்டர் நிறுவனங்கள் உள்ளன.  VSR Ventures மற்றும் Karnavati Aviation ஆகியவை அதிகப்படியான சார்ட்டர் விமானங்களை (தலா 11-12 விமானங்கள்) வைத்துள்ளன.

இன்று விபத்துக்கு உள்ளான லியர்ஜெட் 45 (VT-SSK) ரக விமானங்களுக்கு  ஒரு மணிநேரத்திற்கு சுமார் ₹4.5 லட்சம் முதல் ₹5.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் குளோபல் 6000 (Global 6000) மற்றும் கல்ப்ஸ்ட்ரீம் G650 ஆகிய பிரைவேட் விமானங்களுக்குத்தான் மிக அதிக வாடகை கொண்டவை.ஒரு மணிநேரத்திற்கு ₹12 லட்சம் முதல் ₹18 லட்சம் வரை. ஒரு நாள் என்றால்,  குறைந்தது இரண்டு கோடி ரூபாய்!

சொந்தமாக விமானம் வைத்துள்ள பிரபலங்கள்

முகேஸ் அம்பானி, கௌதம் அதானி, கலாநிதி மாறன் ஆகியோர் சொந்தமாக விமானம் வைத்து உள்ளனர்.  நடிகர் ரஜினி, நயன்தாரா ஆகியோரும் சொந்த விமானம் வைத்திருப்பதாக ஒரு பேச்சு உண்டு. ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை.

நடிகர் விஜய் பயன்படுத்தும் விமானங்கள்

சமீபகாலமாக, தனி விமானம் என்றாலே  நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் தான் நினைவுக்கு வருவார்.  பிரச்சாரங்களுக்கும்,  தனிப் பயணங்களுக்கும்  வாடகை  விமானங்களை எடுக்கிறார்.

இன்று விபத்துக்கு உள்ளான விமானத்தை வாடகைக்கு விட்ட,  பம்பார்டியர் ஏரோஸ்பேஸ்  நிறுவனத்திலும் வாடகைக்கு எடுத்து இருக்கிறார்.

ஆனால் பெரும்பாலும் GMR Aviation  என்ற நிறுவனத்திடமிருந்து  Embraer 135BJ Legacy 600  ரக விமானங்களையே வாடகைக்கு எடுப்பார். சமீபத்தில் சி.பி.ஐ. விசாரணைக்காக டில்லி சென்றபோதும் இந்த விமானத்தைத்தான் பயன்படுத்தினார்.

இது ஒரு ‘ட்வின்-டர்போபிராப்’ (Twin-Turboprop) வகை விமானம். அதாவது  இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.  கூடுதல் பாதுகாப்பானது.

தவிர, இந்த விமானத்தில்  அலுவலக அறை,  உணவு அருந்தும் அறை , சமையலறை, ஓய்வெடுக்க படுக்கை அறை ஆகியவை உண்டு. 13 பேர் வரை தாராளமாக பயணிக்கலாம்.  ,  மணிக்கு சுமார் 830 கி.மீ.  வேகத்தில் பறக்கக்கூடியது.

ஒரு மணி நேரத்துக்கு ரூ.ஐந்து லட்சம் வரை கட்டணம் என சொல்லப்படுகிறது.  ஜனவரி 11 அன்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட விஜய், ஜனவரி 13  அன்று  சென்னை திரும்பினார். கிட்டதட்ட ஒரு கோடி ரூபாய் வரை வாடகை செலுத்தி இருப்பார் என்கிறார்கள்.

விபத்தே நடக்காத விஜய் விமானம்!

இந்த வகை விமானங்கள் இதுவரை விபத்துக்கு உள்ளானதில்லை. விதிவிலக்காக இரு சம்பவங்களே உண்டு.

2023 ஆகஸ்ட் 23 அன்று,  ரஸ்யாவில், தனியார் ராணுவப்படையை நடத்தி வந்த  யெவ்ஜெனி பிரிகோஜின்  பயணித்த இதே எம்பிரேயர் லெகஸி 600 விமானத்தில் பறந்து கொண்டு இருந்தார். அப்போது நடுவானில் வெடித்துச் சிதறியது.  பிரிகோஜின் உட்பட விமானத்தில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர்.

ஆனால், “இது தொழில்நுட்பக் கோளாறால் நடந்த விபத்து அல்ல. ஏவுகணைத் தாக்குதல் காரணமாகவே இது நடந்திருக்கலாம்” என்று  சர்வதேச அளவில் நம்பப்படுகிறது.

இன்னொரு ஆச்சரிய சம்பவம்,  2006செப்டம்பர் 29ம் தேதி நடந்தது. பிரேசிலில் நாட்டு வான்வெளியில்  37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, இதே  Embraer Legacy 600 ஜெட் விமானம். ஒரு கட்டத்தில் எதிரே வந்த Boeing 737 பயணிகள் விமானத்துடன் நடுவானில் இது மோதிவிட்டது.

மிகப்பெரிய  போயிங் விமானம் அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கியது, அதில் இருந்த 154 பேரும் உயிரிழந்தனர்.

ஆனால்,  எம்பிரேயர் விமானத்தின் இடது சிறகில் மட்டும் சிறு சேதம்.விமானிகள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, அருகில் இருந்த ஒரு ராணுவ விமான தளத்தில் அதைத் தரையிறக்கினர். அதில் இருந்த 7 பேரும் எந்தக் காயமுமின்றி உயிர் பிழைத்தனர்.

– டி.வி.சோமு

Related Posts