ஷாநவாஸின் ‘ருசி பேதம்’: சமூகத்தின் – வரலாற்றின் ருசி!

ஷாநவாஸின் ‘ருசி பேதம்’: சமூகத்தின் – வரலாற்றின் ருசி!

திநவீன எந்திரத்தில் ஏறி உலகம் முழுதும் குறுக்கும் நெடுக்குமாக பயணிப்பதோடு, கடந்த காலங்களுக்கும் சென்று வந்தால் எப்படி இருக்கும்… அதுவும் ருசியான உணவுகளோடு!

நினைக்கும்போதே இன்ப அதிர்ச்சியாக இருக்கிறதுதானே.. அந்த உணர்வை அப்படியே, அப்படியே தருகிறது, ஷாநவாஸ் அவர்கள் எழுதிய “ருசிபேதம்” புத்தகம்.

மனித குலத்தின் நாகரிக வளர்ச்சியை வெறும் போர்க்களங்களும், அரச பரம்பரைகளும் மட்டுமே தீர்மானிக்கவில்லை; அவை நாம் உண்ணும் உணவின் மூலமும், நாவில் தங்கும் சுவையின் வழியாகவும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதனை மிக ஆழமாகவும், நுட்பமாகவும் பதிவு செய்திருக்கிறது எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்கள் எழுதிய “ருசி பேதம்” எனும் கட்டுரைத் தொகுப்பு.

‘யாவரும் பப்ளிஷர்ஸ்’ வெளியீட்டில் வந்துள்ள இந்நூல், உணவை வெறும் பசி ஆற்றும் பொருளாகப் பார்க்காமல், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் வரலாறு, அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை ஒரு தேர்ந்த வரலாற்று ஆசிரியரின் பார்வையுடன் விவரிக்கிறது.

இட்லி: பண்பாட்டுப் பரிமாற்றத்தின் அடையாளம்

தமிழர்களின் அடையாளமாகத் திகழும் ‘இட்லி’, உண்மையில் தமிழக மண்ணிற்குச் சொந்தமானதா? என்ற வினாவிற்கு ஆசிரியர் தரும் தரவுகள் வியப்பளிக்கின்றன. ஏழாம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீனப் பயணி யுவான் சுவாங், இந்தியாவில் நீராவியில் வேகவைக்கும் முறையே இல்லை என்று குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர், பத்தாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழன் காலத்தில் இந்தோனேசியாவிலிருந்து ‘கெட்லி’ எனும் உணவு முறை இங்கு வந்திருக்கலாம் என்ற வரலாற்றுச் செய்தியை முன்வைக்கிறார். ஒரு சிறிய இட்லிக்கு பின்னால் இவ்வளவு பெரிய கடல்சார் வணிகமும், பண்பாட்டுப் பரிமாற்றமும் இருப்பதை ஆசிரியர் விவரிக்கும் விதம் அற்புதம்.

உருளைக்கிழங்கு: ஒரு உலகளாவிய ஏகாதிபத்தியம்: எளியவர்களின் உணவு என்று கருதப்படும் உருளைக்கிழங்கு, உலக அரசியலில் எப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ஆசிரியர் விளக்குகிறார்.

உற்பத்தியும் அரசியலும்: உருளைக்கிழங்கு விளைச்சல் பெருகியபோது, அதைச் சேமிக்க முடியாமல் போனதன் விளைவாகவே ‘சிப்ஸ்’ போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் உருவாயின.

 லண்டன் வாழ்வியல்: 2022-ல் லண்டன் சென்றிருந்த ஆசிரியர், அங்குள்ள மக்களின் பிரிக்க முடியாத உணவாக மாறிய ‘ஃபிஷ் அண்ட் சிப்ஸ்’ (Fish and Chips) குறித்தும், அது எப்படி ஒரு நாட்டின் கலாச்சார அடையாளமாக மாறியது என்பதையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார். உணவின் சுவைக்கு பின்னால் மறைந்திருக்கும் அதிகார வர்க்கத்தின் நகர்வுகளை ‘உருளை மகிமை’ கட்டுரையில் காணலாம்.

ருசி பேதம்: வர்க்கப் போராட்டத்தின் கசப்பு

புத்தகத்தின் தலைப்பு உணர்த்துவது போல, உணவு என்பது அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதை ஆசிரியர் வேதனையுடன் பதிவு செய்கிறார்.

பஞ்சமும் பாராமுகமும்: பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நிலவிய கொடும் பஞ்சத்தின் போது, கிடங்குகளில் தானியங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தும், ‘அரசாங்கம் திவாலாகிவிடும்’ என்ற பொருளாதாரக் கோட்பாட்டைக் கூறி மக்களுக்கு உணவு வழங்க மறுத்த அதிகார வர்க்கத்தின் வன்மத்தை ஆசிரியர் தோலுரித்துக் காட்டுகிறார்.

பேராசையும் தண்டனையும்: பத்தாம் நூற்றாண்டு அரபு நாடுகளில் மன்னர்களின் அந்தப்புரங்களில் உணவுகள் அள்ளி வீசப்பட்டதையும், அதே சமயம் அளவுக்கு அதிகமாக உண்பதைக் கண்டித்த எழுத்தாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட முரண்பட்ட வரலாற்றையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.மண்டேலாவும் அந்தத் ‘தீராக் காதல்’ பிரியாணியும்!

விடுதலைப் போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவுக்கும் பிரியாணிக்கும் இடையிலான பிணைப்பு ஒரு சுவாரஸ்யமான அத்தியாயம். 27 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகும், அவருக்குப் பிடித்தமான சுவை அவரை விட்டு நீங்கவில்லை. தனது பிரியாணி மாஸ்டர் ஓய்வு பெற விரும்பியபோதும், “உனக்கு ஓய்வே கிடையாது, எனக்காகப் பிரியாணி சமைத்துக் கொண்டே இரு” என்று அவர் அன்புக் கட்டளையிட்டது, ஒரு மனிதனின் ஆன்மா சுவைக்கு எப்படி அடிமையாகிறது என்பதைக் காட்டுகிறது.

சிங்கப்பூர் மாடல்: உணவின் வழி மனிதாபிமானம்

சிங்கப்பூரில் நீண்ட காலம் உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர், அங்குள்ள ‘SCORE’ (Singapore Corporation of Rehabilitative Enterprises) என்ற அமைப்பைப் பற்றி வியந்து பேசுகிறார். சிறைவாசிகளுக்குச் சமையல் கலை மற்றும் ‘டீ மாஸ்டர்’ பயிற்சிகளை வழங்கி, அவர்கள் மீண்டும் சமூகத்தில் கௌரவமான மனிதர்களாக வாழ்வதற்கு அந்த நாடு வழிவகை செய்வதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். உணவு என்பது வெறும் வயிறு வளர்ப்பதற்கல்ல, அது ஒரு மனிதனின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும் கருவி என்பதையும் உணர்த்துகிறார்.

மதுரையின் கறிதோசை மணத்தில் தொடங்கி, நைல் நதிக்கரையின் மீன் சுவை வரை உலகம் முழுவதும் வாசகர்களை அழைத்துச் செல்கிறார் ஷாநவாஸ். இதில் உணவுகளின் வரலாறு மட்டுமல்லாது, மார்க்சியம், மனிதாபிமானம் மற்றும் சமூக நீதிக்கான குரலும் ஓங்கி ஒலிக்கிறது.

இது ஒரு சாதாரண கட்டுரைத் தொகுப்பு அல்ல; அறிவும் சுவையும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு மகா விருந்து!

-டி.வி.சோமு

நூலினைப் பெற:
#24, Shop.No.B, First Floor, S.G.P.Naidu Complex,
Velachery Main Road, Velachery, Chennai-42.
📞Contact & WhatsApp.No: 90424 61472
Pay: https://razorpay.me/@yaavarumpublishers

Related Posts