‘இரண்டாம் குத்து’ ஆபாச படத்துக்கு தடை?: திரையரங்க உரிமையாளர்கள் விளக்கம்

டும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள, ‘இரண்டாம் குத்து’ ஆபாச படத்தை, திரையிடக்கூடாது என பல தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், இது குறித்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் நமது, ‘தமிழன் குரல்’ இணைய இதழிடம் விளக்கம் அளித்துள்ளார்.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில்  கடந்த 2018 மே மாதம் 4ல் வெளியான திரைப்படம், ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’.  இப்படம் மிக ஆபாசமாகவும், அருவெறுப்பாகவு்ம் உள்ளதாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் திரையரங்கில் வெளியாகி ஓரளவு வசூலைக் குவித்தது.

இந்நிலையில், அதன் இரண்டாம் பாகமாக, ‘இரண்டாம் குத்து’ படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. இதுவும் அறுவெறுப்பின் உச்சமாக உள்ளது என கண்டனங்கள் எழுந்தன. திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர், இத்திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் சுப்ரமணியம்

இதற்கிடையே, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, “மத்திய அரசின் காட்டுபாட்டில் சென்சார் போர்டு இருந்தாலும்’ தமிழக அரசு ஆபாச காட்சிகளை நீக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் நிச்சயமாக  வலியுறுத்தும்!” என்றார்.

ஆகவே, படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்தை தொடர்புகொண்டு இது குறித்து கேட்டோம்.

அவர், “அந்தத் திரைப்படம் மிக ஆபாசமாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது உண்மைதான்.  இது போன்ற படங்களை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு நல்லவற்றை சொல்ல வேண்டுமே தவிர, இது போன்ற விசயங்களை தரக் கூடாது.

ஆனால், பல கோடி ரூபாய் செலவு செய்து படத்தை எடுத்து முடித்துவிட்டார்கள். தவிர சென்சார் சென்று அனுமதி பெற்றுதான் திரைக்கு வரப்போகிறது.

ஆகவே, இனி இதுபோன்ற தரமில்லாத படங்களை இயக்கக்கூடாது என்கிற நிபந்தனையுடன், திரையரங்கில் திரையிட இருக்கிறோம். அடுத்தபடத்தை இதுபோல ஆபாசமாக எடுத்தால் திரையிட மாட்டோம்!” என்றார்.

Related Posts