விமர்சனம்: பைரி பாகம் – 1

விமர்சனம்: பைரி பாகம் – 1

நாகர்கோவில் அருகே ஒரு கிராமத்தில்  வசிக்கும் இளைஞன் லிங்கம். அந்தப் பகுதியில் பரவலாக நடக்கும் புறா பந்தயத்துக்காக புறாக்களை வளர்க்கிறான்.

அந்த ஊரில் உள்ள பெரிய  சுயம்புவும் புறா பந்தயம் நடத்துகிறான்.  பந்தயத்தில் சுயம்பு செய்யும் மோசடியை லிங்கம் கண்டுபிடித்து எதிர்க்க… இருவருக்கும் இடையே  மோதல் உருவாகிறது.

லிங்கத்தின் நண்பனை கடுமையாக தாக்கிவிடுகிறான் லிங்கம். இந்தத் தகவல் தெரியாமல், புறா பந்தயமே வேண்டாம் என லிங்கம் வேலை தேடி சென்னை செல்கிறான்.

நண்பன் காயம் பட்ட தகவல் லிங்கத்துக்கு கிடைத்ததா.. அவன் வருவானா என்கிற கேள்வி எழுகிறது.

இத்துடன் முதல் பாகம் முடிவடைகிறது.

படத்தின் ஹீரோ என கம்ப்யூட்டர் கிராபிக்ஸை சொல்லலாம். சிறிய பட்ஜெட்டில் புறா பந்தய காட்சிகளை மிக சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்கள். வி.எப்.எக்ஸ். சேகர் முருகன் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

தவிர, பலரும் அறியாத புறா பந்தயத்தை ரசிகர்களின் மனதுக்குள் விதைத்து, ஹீரோவின் புறா வெற்றி பெற வேண்டுமே என்கிற பதைப்பை நமக்குள் செலுத்தி விடுகிறார் இயக்குநர். இதுவே படத்தின் வெற்றி.புறா பந்தயம் குறித்த பல விசயங்களை.. புறாவின் வகைகள்.. போட்டியின் நிபந்தனைகள்.. என ரசிக்கும்படி விரிவாக காண்பித்து இருக்கிறார்கள். படத்தின் மீதான சுவாரஸ்யத்தை இந்த தகவல்கள் அதிகரிக்கின்றன.

அய்யா வைகுண்டர், பெருந்தலைவர் காமராஜர், வெங்கடேஷ் பண்ணையார் என பலரையும் படத்துக்குள் கொண்டு வந்து இருக்கிறார் இயக்குநர்.

மேலும்.. “மக்களே மக்களே..” என கதாபாத்திரங்கள் பேசுவது, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளேயே சென்று வந்ததைப் போல உணரவைக்கிறது.

அருண்ராஜ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. நாயகனின் தாயாக வரும் விஜி சேகர் மகனின் மீதுள்ள பாசத்தை, கோபத்தை அநாயாசமாக வெளிப்படுத்தி விட்டார்.மகன் சரியாக படிக்காமல் ஏமாற்றி இருக்கிறான் என்பதை அறிந்து பொங்குவது…  “போ.. போய்த்தொலை..” என்பவர், இறுதியாக, “எங்கேயாவது நல்லா இரு” என்று முடிப்பது ஒரு நெகிழ வைக்கும் கவிதை.

நாயகன் சையத் மஜீத், அவரது நண்பராக வரும் ஜான் கிளாடி (இயக்குநரும் இவரே), உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.

இயல்பான வட்டாரமொழி, சிறப்பான நடிப்பு, படத்துக்கு பலம் சேர்க்கும் ஒளிப்பதிவு, இசை, தடையில்லா திரைக்கதை என அனைத்து அம்சங்களுடன் ரசிக்க வைக்கிறது பைரி.