“எல்லா சாதி மதத்திலும் ஒடுக்கப்படுபவர்கள் ‘மங்கை’களே!”:  இயக்குநர் லெனின்

“எல்லா சாதி மதத்திலும் ஒடுக்கப்படுபவர்கள் ‘மங்கை’களே!”:  இயக்குநர் லெனின்

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிக்க, குபேந்திரன் காமாட்சி இயக்கும் திரைப்படம்  ‘மங்கை’.  இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்து உள்ளனர். தீசன் இசையமைத்து உள்ளார்.

படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

 

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும் போது, “மங்கை தரமான படம்.. மக்களுக்கான படம்.. கலை உணர்வு கூடிய படம். இது வெற்றிப் படமாகவும் அமைய வேண்டும்.

நல்ல ஒரு ஆக்கபூர்வமான கதைகள் வணிகரீதியாகவும் வெற்றி பெறும் போது, பெரிய பெரிய கலைப் படைப்புகள் நிறைய வரும். வெறும் வசூலுக்காகவே திரைப்படம் இல்லாமல், நல்ல கலைப்படங்கள் வசூலாக மாற வேண்டும். அதற்கு நாம் பார்வையாளர்களையும் தயார் செய்ய வேண்டியது இருக்கிறது. ஒரு புறம் இலக்கியத்தின் வாயிலாகவும், மறுபுறம் சிறந்த உலகத் திரைப்படங்களை கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பதின் மூலமாகவும், வாசிப்பு பயிற்சியினை பள்ளி வகுப்புகளில் இருந்து துவங்குவதன் மூலமாகவும் இந்த மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று நம்புகிறேன்” என்றார்.
படத்தொகுப்பாளர் பார்த்திபன் பேசும் போது, “
படத்தின் நாயகி ஆனந்தி ஒவ்வொரு ஷாட்டிலும் அவ்வளவு அருமையாக நடித்திருந்தார். அது கோபமோ சிரிப்போ ஒவ்வொரு ப்ரேமிலும் அவ்வளவு அழகாக இருந்தார். கார் சீக்குவன்ஸ் காட்சிகளில் துஷி மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். ஏனென்றால் ஒரே நேரத்தில் கார் ஓட்ட வேண்டும், டயலாக் பேச வேண்டும், பெர்ஃபாமன்ஸ் செய்ய வேண்டும். மலைப்பகுதியில் கார் ஓட்டுவது எளிதல்ல… அதை திறம்பட செய்த நாயகனுக்கு வாழ்த்துகள்” என்றார்.

நடன இயக்குநர் ராதிகா, “இந்த படத்தில் ஒரு சவாலான பாடலை செய்துள்ளேன்.  ஒரு காருக்குள்ளாகவே அழகான மூவ்மெண்டுகள் உடன் என்டர்டெயின்மென்ட் ஆகவும் இருக்க வேண்டும், கருத்தாழம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதால் இயக்குநர் அதை எனக்கு எளிமையான முறையில் விளக்கினார். நான் அதை அப்படியே எடுத்துக் கொண்டு செய்து கொடுத்திருக்கிறேன்” என்றார்.

நடிகர் ஆதித்யா கதிர், “‘மங்கை’ ஒரு முக்கியமான திரைப்படம். மார்ச் 1ம் தேதிக்குப் பிறகு அதை நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள். படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்களுக்கும் இயக்குநர் குபேந்திரன் காமாட்சி அவர்களுக்கும் நன்றி. துஷி விரைவில் சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அவரின் அப்பா ஜெயப்பிரகாஷ் இன்று உண்மையாகவே மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். கார்த்திக் சாருக்கு நன்றி” என்றார்.
‘மேற்குதொடர்ச்சி மலை’ பட இயக்குநர் லெனின்,  “கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே என்கின்ற அடிப்படையில் ‘மங்கை’ படம் உருவாகி உள்ளது என்று தெரியும். இப்படத்தின் பாடல்கள் மற்றும் சில காட்சிகளைப் பார்த்தப் பின்னர் தான் டைட்டில் டிசைனை கவனித்தேன். ஆண் கதாநாயகர்களை மையப்படுத்திய டைட்டிலைப் பார்த்தால் கம்பீரமாக இருக்கும். ஆனால் இங்கு மங்கை கீறப்பட்டு இருக்கிறது, காயப்பட்டிருக்கிறது, உடைந்திருக்கிறது. சிதைந்திருக்கிறது, தாக்கப்பட்டு இருக்கிறது. அதற்குக் கீழ் டிராவல் ஆஃப் வுமன் என்கின்ற கேப்ஷன் இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய அரசியல். எல்லா காலத்திலும் எல்லா சாதியிலும் எல்லா மதத்திலும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் ‘மங்கை’ என்கின்ற இந்த டைட்டில் மற்றும் திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. குழுவினருக்கு வாழ்த்துகள். விழா நாயகன் தீசன் அவர்களுக்கு வாழ்த்துகள், பாடலாசிரியர்கள் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாயகன் துஷிக்கும் வாழ்த்துகள்.

தோழர் ஆனந்தி எப்போதும் ஆழ அகலக் கதைகளையே தேர்ந்தெடுப்பார். அவர் தேர்வு செய்யும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும். கடைசி வரைக்கும் இப்படியே இருங்கள் தோழர் ஆனந்தி. பெண்களை உடலாகப் போதிக்காமல் ஒரு உயிராக பாவிக்கும் எண்ணத்தை இப்படம் முன்னெடுக்கும்” என்றார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ், “ ‘பசங்க’ படத்தின் ஆடியோ வெளியீட்டில் எனக்குத் துணைக்கு நான் என் பையன் துஷியை அழைத்துக் கொண்டு வந்திருந்தேன். அப்படித் தான் துஷியின் திரை பயணம் துவங்கியது. அவர் நடிக்க வருவார் என்று நினைத்ததே இல்லை. ஏனென்றால் நான் நடிக்க வருவேன் என்பதே என்னால் நம்ப முடியாத விஷயம். ஆனந்தி மிகப்பெரிய கலைஞர். அவருடன் நடித்ததெல்லாம் துஷிக்கு நல்ல அனுபவம். அவன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறான்.

என் பிள்ளைகளுக்கு நான் கற்றுக் கொடுத்த முக்கியமான விசயம் “Don’t do injustice to woman”. நல்ல படங்களை எப்போதும் கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் இப்படத்தையும் கொண்டு போய் சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் ஹலிதா சமீம், “இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மிக நன்றாக வந்திருக்கின்றன. எல்லோருக்கும் உதவுவதற்காகவே ஒருவர் இருக்கிறார் என்றால் அது கார்த்திக் துரை தான். தீயாக இருக்கும் தீசனின் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. சென்ற ஆண்டின் முழுமையான திரைப்படமாக நான் ‘கிடா’ திரைப்படத்தை தான் பார்க்கிறேன். துஷி ‘ஈசன்’ திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். அவருக்கு வாழ்த்துகள். இப்படம் பேச இருக்கும் கருத்திற்காக நான் இப்படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் ஜாஃபர், “ஒரு திரைப்படத்தை எடுப்பது மட்டுமே முக்கியமான வேலை இல்லை. அதை சரியாக மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும் முக்கியமான வேலை என்று நான் நம்பி உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

‘மங்கை’ மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. துஷி, கயல் ஆனந்தி மற்றும் சிறப்பான பாடல்கள் என ஒவ்வொன்றாக படத்தில் சேர்ந்து கொண்டே இருந்தார்கள். இசையமைப்பாளராக கிடைத்த வாய்ப்பை தீசன் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்பதில் இருந்து தான் இப்பயணம் துவங்கியது. பத்திரிகை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை ஆனந்தி, “ ‘கயல்’ வெளியாகி பத்து ஆண்டுகள் கழித்து ‘மங்கை’ படம் வெளியாக இருக்கிறது. ‘மங்கை’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நான் படத்தில் நடிக்க வந்துவிட்டேன். சினிமா குறித்து ஒன்றும் தெரியாது. இப்பொழுது தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் படங்களை எடுத்துப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். கண்டிப்பாக இப்படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன். படம் பாருங்கள். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். தயாரிப்பாளர் ஜாஃபர் எங்களுக்கு கிடைத்த வரம். படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க அவ்வளவு உழைத்திருக்கிறார். எக்ஸீகியூட்டிவ் புரொடியூசர் கார்த்திக் சார் எல்லா வேலைகளையும் எடுத்து செய்வார். எல்லாவித உதவிகளையும் எல்லோருக்கும் செய்பவர். அவருக்கு நன்றி. இன்றைய விழா நாயகன் தீசன் அவர்களுக்கு வாழ்த்துகள், மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ஸ்டார் அவர்களுக்கு நன்றி. ஷிவின் எனக்கு ஒரு நல்ல தோழியாக மாறி இருக்கிறார். அது போல் துஷி எனக்கு நல்ல நண்பர். ஜே.பி சாரின் பையன் என்பதை எல்லாம் காட்டிக்கொண்டதே இல்லை.நல்ல படங்களை எப்போதும் ஆதரிப்பீர்கள். இப்படத்திற்கும் உங்கள் ஆதரவை தாருங்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றார்.

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் பேசும் போது, “என் அம்மா, அப்பா, மனைவி மற்றும் கடவுளுக்கு நன்றி. என் மனைவிக்கு ஏன் நன்றி சொல்கிறேன் என்றால் வீட்டில் இருக்கும் மங்கை நன்றாக இருந்தால் தான் வெளியில் ஜெயிக்க முடியும். இந்த ‘மங்கை’ வெற்றிபெற வாழ்த்துகள். வாய்ப்பு கொடுத்த ஜாஃபர் சாருக்கு நன்றி. இயக்குநர் குபேந்திரன் சார் சொன்னார் நாங்க ஒரு சின்ன படம் பண்றோம், சப்போர்ட் செய்யணும் என்று. படம் சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று சொன்னேன். இப்படத்தின் க்ளைமாக்ஸ் மங்கைகளுக்கும் மட்டுமின்றி ஆடவர்களுக்கும் மிக முக்கிய பாடமாக அமையும் என்று கூறி விடை பெறுகிறேன்” என்றார்.

இயக்குநர் குபேந்திரன் காமாட்சி, “படப்பிடிப்புக்கு போகும் போது ஒரு பாடல் மட்டும்தான் இருந்தது. பின்னர் அது ஐந்து பாடல்களாக ஆனது. அதற்கு தீசனின் இசை ஒரு காரணம். பாடலாசிரியர்கள் கபிலன், யுகபாரதி, கார்த்திக் நேத்தா அனைவருக்கும் நன்றி.

படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் ஜாஃபர் சார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஸ்டார் சார் அனைவருக்கும் நன்றி, படத்திற்கு பத்திரிகையாள்ர்களான் நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Related Posts