பேபி & பேபி: விமர்சனம்

சென்னை ஏர்போர்ட்டில் இருந்து கோவைக்கு சிவாவும் (ஜெய்), மதுரைக்கு குணாவும் (யோகி பாபு) தங்களது மனைவி குழந்தையுடன் செல்ல காத்திருக்கிறார்கள். பயணம் துவங்க, சிவாவின் ஆண் குழந்தை குணாவிடமும், குணாவின் பெண்குழந்தை சிவாவிடமும் மாறியிருப்பதை அறிகிறார்கள்.
சிவாவின் தந்தை (சத்யராஜ்) தனது பரம்பரை சொத்துக்காக ஆண் வாரிசையும், குணாவின் தந்தை ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒரு பெண் வாரிசையும் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
ஆகவே குழந்தைகள் மாறிப்போனதை பிறருக்குத் தெரியாமல் இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்
ஜெய், யோகிபாபு மற்றும் இவர்களது மனைவியராக வரும் சாய் தன்யா, பிரக்யா நாக்ரா… நால்வருக்குமே மாறிய குழந்தையை பிறருக்கு தெரியாமல் சமாளிப்பதுதான் முழு நேர வேலை. அதை ரசிப்பும், சிரிப்புமாக செய்து கவர்கிறார்கள்.
ஆண் வாரிசுக்கு அடம்பிடிக்கும் சத்யராஜ் எப்போதும்போல பாத்திரத்துக்குத் தேவையானதை அளித்து இருக்கிறார்.
ஒரு காட்சியில், குழந்தை ஒன்று சத்யராஜ் மீது, சிறுநீர் கழித்துவிடுகிறது.. உடனே அவர் “ஓ.. சொட்டு நீர் பாசனமா” என்று தன் ஸ்டைலில் சொல்லி ரசித்து சிரிக்க வைத்துவிடுகிறார்.
எதற்கெடுத்தாலும் சகுனம் பார்க்கும் இளவரசு, மொட்டை ராஜேந்திரன், ஸ்ரீமன், தங்கதுரை, ஆனந்த் ராஜ், சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி, விக்னேஷ் காந்த் என அனைவருமே சிரிக்க வைக்க முயற்சிக்கின்றரனர். சேஷு குறைவான நேரம் வந்தாலும் குபீரென சிரிக்க வைக்கிறார்.
டி.இமான் இசையில் பாடல் பின்னணி இசை அருமை. அதிலும் ‘ஆராஅமுதே’ பாடல் கூடுதலாய் ரசிக்க வைக்கிறது.
டி.பி சாரதியின் ஒளிப்பதிவு, கே.ஆனந்தலிங்ககுமாரின் படத்தொகுப்பு ஆகியவை படத்துக்கு பலம்.
குழந்தை மாறிப்போவது பழங்கால கதை. தவிர, அப்படி மாறிப்போன குழந்தையை உடனேயே சென்று மீட்டு வரலாமே… தவிர பல நாட்களுக்குப் பிறகு குழந்தை (மீண்டும்) மாறியதை குடும்பத்தினர் கவனிக்கவில்லையாம்.. சூச்சுவைப் பார்த்து நம்பி விடுகிறார்களாம்.. ஏன் குழந்தை முகத்தை யாரும் பார்த்திருக்கவே மாட்டார்களா..ஆண் குழந்தை பிறப்பதற்கான லேகியம் என்று ஸ்ரீமன் தொடர்பான காட்சிகள் எல்லை மீறுகின்றன.
இதையெல்லாம் கடந்து.. லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால் ரசித்து சிரித்துவிட்டு வரலாம்.