பிரபல ஹீரோயின் படத்துக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

பிரபல ஹீரோயின் படத்துக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

பிரபல நடிகை பிஜூமோல் நடித்து இன்று வெளியாகவுள்ள “காதலென்பது பொதுவுடமை” திரைப்படத்துக்கு, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து தமிழர் கட்சி கட்சி ராம ரவிக்குமார், பாஜகபிரமுகர் சௌதாமிணி ஆகியோர் கடுமையான எதிர்பபைத் தெரிவித்து உள்ளனர்.

ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் பிரபல ஹீரோயின் லிஜோமோல் ஜோஸ், அனுஷா, வினீத், காலேஷ் ராமானந்த், ரோகினி, உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

இத்திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் டீசர் வெளியானபோதே, இரு இளம் பெண்களுக்கு இடையேயான தன்பாலின ஈர்ப்பு (லெஸ்பியன்) கதை என்பது புரிந்தது.

தொடர்ந்து தன்பாலின ஈர்ப்பை கடுமையாக விமர்சித்து வரும் இந்துத்துவ தலைவர்களிடம், tamilankural.com  சார்பாக, கருத்து  கேட்டோம்.

இந்து முன்ணணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்:

“திருமண பந்தம் என்பது புனிதமானது. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நம் கலாச்சாரம். இதை எல்லாம் அழிக்கும் விசயம்தான், ஓரினச் சேர்க்கை. இது நம் பண்பாட்டுக்கு எதிரானது. இதனால் சமுதாயம் சீரழியும். ஆகவே இதை எதிர்க்கிறோம்.

புராணத்தில் இருந்தது என்பதை வைத்தெல்லாம் நாம் பேச முடியாது. புராணங்களில் கடவுள்களையும் அவர்களுக்கு ஒப்பானவர்களையும் சொல்லி இருக்கிறார்கள். அவர்களது செயல்களுக்கு உரிய காரணங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றைப் படித்தால் தெரியும்.

மற்றபடி புராணத்தை வைத்து நமது வாழ்க்கையை முடிவு செய்வது அறியாமை. சமூகத்தில் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் விசயத்தை பொதுமைப்படுத்தி அதற்கு அங்கீகாரம் பெற வைப்பது மிகக் கடுமையான தவறு.

ஓரினச் சேர்க்கை குறித்தான, ‘ ‘காதல் என்பது பொதுவுடமை’  திரைப்படத்துக்கு எங்களது கடும்

கண்டனங்களை தெரிவிக்கிறோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து அறிவிப்போம்!

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்:

“ஓரினச் சேர்க்கை சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டியது. இயற்கைக்கு மாறானது. குடும்ப வாழ்க்கையை சிதைக்க கூடியது.

கிருத்திகா உதயநிதி இது போன்ற விசயங்களை தொடர்ந்து ஆதரிக்கிறார். இந்த திராவிட அரசு, இது போன்ற மக்கள் விரோத செயல்களுக்கு கொடி பிடிக்கிறது.

‘காதல் என்பது பொதுவுடமை’ படத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

இந்து தமிழர் கட்சி தலைவர் இராம.ரவிக்குமார்

“ஓரினச் சேர்க்கை என்பது மேற்கத்திய கலாச்சாரம்தான். புராணங்களை தவறாக புரிந்துகொள்பவர்கள்தான் ஏதாவது சொல்வார்கள். மனித இனத்தின் அடிப்படையே, சந்ததியைப் பெருக்குவதுதான். அதனால்தான்  நீதிமன்றமும் இதுவரை,  ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்கவில்லை.

ஆகவே  ஓரினச் சேர்க்கையை… கலாச்சார சீர்கேட்டை… அதனை உயர்த்திப் பிடிக்கும் ”காதல் என்பது பொதுவுடமை’ திரைப்படத்தை கண்டிக்கிறோம்.

பாஜக பிரமுகர் சௌதாமினி:

“சமீபகாலமாக, ஓரினச் சேர்க்கை போனற சமூகக் கேடுகளை உயர்த்திப்பிடிக்கும் படைப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதன் பின்னணியில், நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் சதி இருப்பதாகவே தோன்றுகிறது.

‘காதல் என்பது பொதுவுடமை’ படத்துக்கு எனது கண்டனங்கள்.

பேட்டிகள்: டி.வி.சோமு

குறிப்பு: இது மேற்கண்ட ஆளுமைகள், ‘tamilankural.com’ இதழுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டிகள். இந்த பேட்டியை எடுத்து பயன்படுத்த விரும்பும் ஊடங்கள் தாராளமாக பயன்படுத்தலாம். அதே நேரம், ‘tamilankural.com’ இணைய இதழின் பெயரை குறிப்பிட வேண்டும்.

Related Posts