காதலென்பது பொதுவுடமை: விமர்சனம்

காதலென்பது பொதுவுடமை: விமர்சனம்

இது வழக்கமான படம் அல்ல.

இரு இளம் பெண்களிடையேயான நேசத்தை – காதலைச் (லெஸ்பியன்) சொல்லும் திரைப்படம்.

ஓரினச் சேர்க்கை – தன்பாலின ஈர்ப்பு என்பது, ஏதோ திமிரெடுத்து அல்லது மனநோய் காரணமாக ஏற்படுவது என்று பல காலமாக கருதிவரப்பட்டது.

ஆனால், இது இயல்பாக சிலருக்கு பிறப்பின் அடிப்படையில் ஏற்படும் உணர்வு. இது மனநோய் அல்ல என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து சொல்லி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால், ஈரான்,ஆப்கன், ஏமன் போன்ற சில இஸ்லாமிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இப்போதும் மரண தண்டனைதான். மேலும் பல நாடுகளில், கசையடி, சிறைவாசம் உண்டு.

உலகில் ஐக்கிய நாடுகள் சபையில் 195 நாடுகள் உள்ளன. (இவற்றில் வத்திக்கான் மற்றும் பாலஸ்தீனம் உறுப்பினர் அல்லாத பார்வையாளர்கள்.)

இவற்றில், 64 நாடுகளில் இன்றும் ஓரினச்சேர்க்கை என்பது தண்டனைக்குறிய குற்றமே.

இந்தியாவிலும் 2018ம் ஆண்டுவரை, இந்திய தண்டனை சட்டம் – பிரிவு377 வரை ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக்குறிய குற்றமாகவே இருந்தது. ஒரு வழக்கில் இந்த சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது உச்ச நீதிமன்றம்.

ஆனாலும் இந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்த ஆளும் ஒன்றிய பாஜக அரசு, “ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்பதே நீடிக்கப்பட வேண்டும்” என்றது.

சமீபத்தில்கூட, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக செளரப் கிர்பால் என்பவரை கொலீஜியம் தேர்ந்தெடுத்தது. இதை ஒன்றிய பாஜக அரசு ஏற்கவில்லை. காரணம், அவர் தன்னை தன்பால் ஈர்ப்பாளர் என பிரகடனப்படுத்தியவர் என்றது. அதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

இந்த நிலையில்தான், ஓரினச்சேர்க்கையாளர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் திரைப்படங்கள் மெல்ல வர ஆரம்பித்து உள்ளன. இதற்கு முன்பு, அவர்களை இழிவானர்களாக காண்பித்த திரையுலகம், இதன் மூலம் பிரயாச்சித்தம் தேடிக்கொள்வதாகக்கூட சொல்லலாம்.அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கு் திரைப்படம்தான், காதல் என்பது பொதுவுடமை.

நாயகி, நந்தினி என்கிற பெண்ணை விரும்புகிறாள். இதற்கு துணையாக நிற்கிறான், நாயகியின் முன்னாள் காதலன்.

தனது அம்மா லட்சுமி, முற்போக்கானவர், யு டியுபில் பலவித விமர்சனங்்களை அலசுபவர் என்பதால், தனது காதலை ஏற்றுக்கொள்வார் என நினைக்கிறார்.

முற்போக்காளராக இருந்தாலும், அவரது அம்மா இதை ஏற்கவில்லை. நாயகியின் தந்தையும் ஏற்கவில்லை.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

நாயகியாக லிஜோ மோல் ஜோஸ்…

தன் காதலைப் பற்றி தாயிடம் வெளிப்படுத்தும் காட்சியில் இருந்து இறுதியில் அதை ஆழமாக வெளிப்படுத்தும் காட்சி வரை சிறப்பாக நடித்து உள்ளார்.

அவருக்கு ‘இணையாக’ வரும் அனுஷா பிரபுவும் லிஜோவுக்கு இணையாக நடித்து உள்ளார்.

நாயகின் ஏற்காத காதலர்.. ஆனால் காதல் உணர்வுடனே வாழ்பவராக நடித்து உள்ளார், காலேஷ். அற்புதமான நடிப்பு.

‘மாப்பிள்ளையை’ எதிர்பார்க்கும் நாயகின் தாயிடம் சிக்கித் தவிப்பது, நாயகியின் தந்தையிடம் ஆரம்பத்தில் தயங்கி பிறகு வெளிப்படையாக பேசுவது… அற்புத நடிப்பு.

சிறந்த நடிகர் என்பதால் இவரை, இதே போன்ற கதாபாத்திரங்களுக்குத் திரையுலகம் பயன்படுத்திவிடக்கூடாது. அதிரடி நாயகனாகவும் வலம் வரவேண்டும் என எச்சரிக்கை கலந்தே வாழ்த்த வேண்டி இருக்கிறது!

நாயகியின் அப்பாவாக வினீத். தமிழில் ஆவாரம்பூ, சந்திரமுகி என அவ்வப்போது வந்தாலும் எந்தவொரு படத்திலும் தனது நடிப்பின் பங்களிப்பை குறைத்ததே இல்லை. இதிலும் அப்படித்தான்… மகளின் நிலைை புரிந்துகொள்ளாமல் தவிப்பது, பரிதவிப்பது, ஆதங்கப்படுவது, ஆத்திரப்டுவது என உணர்ச்சிக்கொள்ளப்புகளை அத்தனை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

வீட்டு வேலைக்காரப் பெண்ணியாக தீபா… சிறந்த நடிகை என்றாலும் ஒரே மாதிரி டெம்ப்ளட்டான கதாபாத்திரங்களே இவருக்குக் கிடைக்கின்றன. இதில், தன் மகளை அவளது கணவனிடம் இருந்து காப்பாற்றும் காட்சியில், பூனையிடமிருந்து தனது குஞ்சுகளைக் காப்பாற்றும் கோழியாக சீறி மனதில் நிற்கிறார்.

நாயகியின் அம்மாவாக ரோகினிக்கு முக்கிய கதாபாத்திரம். என்னதான் முற்போக்கு என சொல்லிக்கொண்டாலும், ஓரினச் சேர்க்கை என்பது குறித்த புரிதல் இல்லாதவர்கள் – எதிர்ப்பவர்கள்தான் பலர். இவர்களின் ஒட்டுமொத்த உருவமாக ரோகினி கதாபாத்திரம் படைக்கப்பட்டு இருக்கிறது.

மனதை நெகிழவைக்கும்படி சில காட்சிகளில் நடித்து இருக்கிறார் என்றாலும் ஓவர் ஆக்டிங் பல காட்சிகளில்.

ஆனாலும் இதர கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு இதை ஈடுகட்டி விடுகிறது. ஆகவே காட்சியில் தொய்வு இல்லை.கண்ணன் நாராயணனின் இசை, ஒரு கதாபாத்திரமாகவே படம் நெடுக பயணிக்கிறது. அற்புதம்.

மிகச் சில லொகேசன்கள், மிகச் சில கதாபாத்திரங்கள் என்றாலும் உறுத்தாத – சோர்வடைய வைக்காத வகையில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ஸ்ரீசரவணன்.

இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

என்னதான் விசயமறிந்தவர்கள், படித்தவர்கள் என்றாலும் இன்னும் ஓரினச் சேர்க்கை குறித்தான புரிதல் இல்லை என்பதையும், அது என்பது இயற்கையான ஒன்று என்பதையும் சிறப்பாக எடுத்து அளித்துள்ளார்.

காதலில் விழுந்த இரு பெண்களிடையே யாருக்கு கொஞ்சம் ஆண் தன்மை, யாருக்கு பெண்தன்மை என்பதை நுணுக்கமான காட்சிகளாக வைத்து இருக்கிறார்.

முதலிரவில் ‘கணவன்’ தனது ‘மனைவியை’ பலாத்காரப்படுத்தும்போது பின்னணியில் ஒலிக்கும் மாங்கல்யம் தந்துனானே…

மொத்தத்தில் இயக்குநரை பாராட்டலாம்.

ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்

பல ஆண்டுகளுக்கு முன்பே, “ஓரினச்சேர்க்கை என்பது மன நோய் அல்ல” என்று உலக அளவிலும், இந்திய அளவிலும் மருத்துவர்கள் அறிவித்த பிறகும், இந்தப் படத்தில், “மனநல சிகிச்சைக்குப் போகலாம்” என்ற காட்சி ஏன் என்று தெரியவில்லை.

லட்சுமியின் மகள் சாம், நந்தினி, சரஸ்வதி என ஓரினச் சேர்க்கை பெண்களுக்கு எல்லாம் இந்து மத பெயர் ஏன் என்று தெரியவில்லை.

ஒரு வேளை இஸ்லாம், கிறித்துவ மதங்கள் ஓரினச் சேர்க்கையை எதிர்த்தாலும் இந்து மதம் அப்படி எதிர்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்டவா… தெரியவில்லை.

இந்தப் படம் – காதல் என்பது பொதுவுடமை.. முதல் பாகம்தான்.

அடுத்த பாகம் வரவேண்டி இருக்கிறது.

இன்னும் பெரும்பாலான நாடுகளில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமணம் செய்யும் உரிமை அளிக்கப்படவில்லை. இந்தியாவும் அதில் ஒன்று.

இதனால் சேர்ந்து வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ரேசன் அட்டை பெறுவது, வங்கியில் வாரிசு என நியமிப்பது, இணைந்து வீடு வாங்குவது போன்ற பல விசயங்களில் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

இவை குறித்து விரைவில், காதல் என்பது பொதுவுடமை இரண்டா் பாகம் வரவேண்டும்!

ஜியோ பேபி – தனஞ்செயன்

இயக்குநரும், இப்படத்தைத் தயாரித்துள்ள மேன் கைண்ட் சினிமாஸ், சிம்மெட்ரி சினிமாஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களும், படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் மலையாள இயக்குநர் ஜியோ பேபியும் இதைச் செய்ய வேண்டும்!

வாழ்த்துகள்!

– டி.வி.சோமு

Related Posts