66 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் “அந்த நாள்!” : அப்போ சிவாஜி, இப்போ ஆர்யன்!
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவி.எம்., கடந்த 1954ம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட படம், “அந்தநாள்”
சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில், சிவாஜி கணேசன் நடித்த இப்படம், பெரும் வெற்றி பெற்றது. வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட த்ரில்லர் படமான இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.‘
66 வருடங்களுக்குப் பிறகு, அதே பெயரில் மீண்டும் புதிய படம் உருவாகிறது.
இப்படம், ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் வழங்க ஆர். ரகுநந்தனின் கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படுகிறது.
வி.வி. இயக்கும் இப்படத்தில், ஆர்யன் ஷாம் நாயகனாகவும் கதை நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு ஆகியோரும் நடிக்கிறார்கள்.
மேலும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் புகழ் ராஜ்குமார், கைதி பட புகழ் கிஷோர், ஆகியோருடன் காமெடி வேடத்தில் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்கள். சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்ய, என்.எஸ். . ராபர்ட் சற்குணம் இசையமைக்கிறார்.
படம் குறித்து நாயகன் ஆர்யன் ஷாம் கூறும்போது, “இது வித்தியாசமான கதையமைப்போடு கிரைம், திரில்லர் கலந்த திகில் படம். நான், முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறேன்!” என்றார்.
இயக்குநர் வி.வி., “படத்திற்கான இறுதி கட்டப்பணி வேகமாக நடந்து வருகிறது. இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்!” என்றார்.
இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
இன்று படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டது.
இயக்குநர் வி.வி.யிடம், ” சிவாஜி நடித்த அந்த அந்தநாள் படத்தின் ரீமேக்கா?” என்று கேட்டபோது, ” இது புதிய கதை, புதிய களம்!” என்றார்.
- யாழினி சோமு