“ஆளாளுக்கு உத்தரவு.. உழைப்புக்கு மரியாதை இல்லை!”: காங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பு காட்டம்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சற்றுமுன் அறிவித்துள்ள நடிகை குஷ்பு, “ கட்சியில் ஆளாளுக்கு உத்தரவிடுகின்றனர்..  உழைப்புக்கு மரியாதை இல்லை!:”என்று குற்றம் சாட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
நடிகை குஷ்பு, காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணையப் போவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளியாகின. இந்தத் தகவலுக்கு மறுப்புத் தெரிவித்து டெல்லியில் பேசிய நடிகை குஷ்பு, ரூ.2 வாங்கிக் கொண்டு தாம் பா.ஜ.க-வில் இணையப் போவதாக போலியான தகவல்களை சிலர் பரப்பிவருவதாக ஆத்திரப்பட்டார்.
 
ஆனாலும், டில்லியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
 
சென்னையில் இருந்து குஷ்பு நேற்று டில்லி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில், அவரிடம் நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
 
இந்த அறிவிப்பு வெளியான சிறிதுநேரத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தான் விலகுவதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
 
சோனியாவுடன் குஷ்பு (கோப்பு படம்)
இது குறித்து, காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.
 
அதில், “காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. கடினமான சூழல்களில் பல்வேறு தளங்களில் நமது கட்சியின் பிரதிநிதியாக செயல்படுவதை நான் எப்போதுமே பெருமையாகக் கருதியிருக்கிறேன்.
 
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருந்த கடினமான சூழலில்தான் நான் கட்சியில் இணைந்தேன். பணத்துக்காகவோ புகழுக்காகவோ நான் கட்சியில் இணையவில்லை.
 
ஆனால், களத்தில் இருக்கும் மக்களோடு எந்தவிதத் தொடர்பும் இல்லாத, மக்கள் அங்கீகாரம் இல்லாத சிலர் கட்சியின் உயர் பதவியில் அமர்ந்துகொண்டு கட்டளை இடுகிறார்கள். கட்சியின் நலனுக்காக உண்மையில் உழைக்கும் என்னைப்போன்றவர்களை அவர்கள் புறந்தள்ளுகிறார்கள்… ஒடுக்கவும் செய்கிறார்கள்.
 
ஆகவே, நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்திருக்கிறேன். காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன்.
 
இந்த சமயத்தில், ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும்’’ என்று அக்கடிதத்தில் குஷ்பு குறிப்பிட்டிருக்கிறார்.

Related Posts