பயிற்சி முதல் விமானப் பயணம் வரை இலவசம்: சைதை துரைசாமியின் ‘மனிதநேயம்’ சாதனை!

பயிற்சி முதல் விமானப் பயணம் வரை இலவசம்: சைதை துரைசாமியின் ‘மனிதநேயம்’ சாதனை!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது பல இளைஞர்களின் வாழ்நாள் கனவாகும். முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கடினமான கட்டங்களைக் கொண்ட இத்தேர்வுகளுக்கு, சாமானிய மற்றும் ஏழை, எளிய மாணவர்களும் தயாராகும் வகையில், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி தலைமையிலான ‘மனிதநேயம் பயிற்சி மையம்‘ பல ஆண்டுகளாகக் கட்டணமில்லாப் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

நடப்பாண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளுக்குப் பயிற்சி அளித்த நிலையில், அத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் அடுத்தகட்ட வெற்றியை உறுதி செய்யும் விதமாக, மாதிரி நேர்முகத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியை மனிதநேயம் மையம் தற்போது தொடங்கியுள்ளது. இப்பயிற்சியில் 94 தேர்வர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்தில், அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி முன்னிலையில் பிரத்யேக மாதிரி நேர்முகத் தேர்வுப் பயிற்சி நடைபெற்றது. தேர்வர்களின் ஆளுமைத் திறன், முடிவெடுக்கும் ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக, துறைசார்ந்த வல்லுநர்கள் இப்பயிற்சியை நடத்தினர். ஓய்வுபெற்ற காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.) ஏ.எக்ஸ். அலெக்சாண்டர், வருமான வரி ஆணையர் நந்த குமார், முன்னாள் பேராசிரியர் எஸ்.எம். உசேன், உதவிப் பேராசிரியர் ஆர். சிவக்குமார் மற்றும் உளவியலாளர் சுபஸ்ரீ வனமாலி ஆகியோர் அடங்கிய குழுவினர் தேர்வர்களுக்கு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.

வெறும் கல்விப் பயிற்சியோடு நின்றுவிடாமல், தேர்வர்களின் பொருளாதாரச் சுமையை முழுமையாகக் குறைக்கும் வகையில் மனிதநேயம் மையம் முன்னெடுத்துள்ள திட்டங்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளன. டெல்லியில் நடைபெறவுள்ள இறுதிக்கட்ட நேர்முகத் தேர்வில் பங்கேற்கச் செல்லும் இந்தத் தேர்வர்களுக்கு விமானப் பயணச் சீட்டுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மேலும், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதற்கும், உணவுக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கட்டணமின்றிச் செய்து தரப்படுகின்றன.

இதற்கு மேலாக, நேர்முகத் தேர்வைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் ஆண் தேர்வர்களுக்குத் தரமான கோட்சூட் மற்றும் காலணிகளும், பெண் தேர்வர்களுக்குச் சேலை, சுடிதார் மற்றும் காலணிகளும் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கப்பட உள்ளன.

தகுதியும் திறமையும் இருந்தும் பொருளாதார வசதியின்மையால் உயர் பதவிகளை எட்ட முடியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு, பயிற்சி முதல் பயணச் செலவு, உடை வரை அனைத்தையும் இலவசமாக வழங்கி, அவர்களின் அதிகாரக் கனவுகளை நனவாக்கி வருகிறது சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையம்.