நான் அந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்றபோது “இது எப்படி முடியும் சார்? ” என்று கேட்டார் தலைவர்.

அவர் கேட்ட தொனியில் அவரது நம்பிக்கையின்மை தெரிந்தது.*

“ஏன் முடியாது டெக்னாலஜி உலகத்தில் எல்லாம் முடியும்” – இந்த சார்.

“யார் அந்த சார்?” என்று எனக்கு தெரியாது .. ஆனால் தலைவரை நன்றாக தெரியும்.

தலைவர் என்றால் எனக்கு தலைவர் இல்லை. இந்தக் கட்சி அலுவலகத்தின் தலைவர். இது சமீபத்தில் தோன்றி வளர்ந்து வரும் ஒரு கட்சி.

இந்த தலைவர் தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்றவர். தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார்.

என் தலைவர் பள்ளிக்கூடம் படித்த காலத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அரசியல் வாழ்வை தொடங்கியவர்.

அந்த வரலாறு எல்லாம் இந்தக் கதைக்கு தேவை இல்லை என்பதால் அதை இத்துடன் விட்டு விடுகிறேன்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது நான் உள்ளே நுழைந்ததால் அந்த சார் பேச்சை நிறுத்திவிட்டு “இவர் யார்” என்றார்.

“நான் சக்திமான் செக்யூரிட்டி சர்வீஸ் பாய்ஸ். தண்ணீர் கேன் போட வந்தேன்” என்று சொல்லிக்கொண்டே இருப்பது லிட்டர் தண்ணீர் கேனை கவிழ்த்து வைத்தேன்.

அவர் வெளியே போகட்டும் என்று அமைதியானார் அந்த சார்.

“நம்ம பையன் தான் நீங்க சொல்லுங்க” என்ற தலைவர்.

ஆனாலும் அந்த சார் தொடர்ந்து பேசவில்லை.

கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளுவதற்குள் வந்துவிட வேண்டும் என்று நானாகவே வெளியே வந்து விட்டேன்.

வெளியே வரும்போது அவர்கள் பேசிக் கொள்வது வெளியே கேட்கும் படி கதவை சிறிது இடைவெளி விட்டு சாத்திவிட்டு வந்து விட்டேன்.அந்த ஆசாமி என்னை போகச் சொல்லிக் காத்திருந்ததால் ஏதோ தவறாக நடக்கிறது என்ற யூகித்து கதவு அருகிலேயே நின்று பேசுவதை கேட்டேன்.

தலைவரைப் பற்றி விவரிக்க தேவையில்லை. கதையைப் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தலைவரை தெரிந்திருக்கும். அதே லட்சணத்துடன் தான் இந்த தலைவரும் இருப்பார். அதனால் தனியாக விளக்கம் தேவையில்லை.

புதிதாய் வந்த பராசக்தி படத்தில் ஐபிஎஸ் ஆபிஸராக வரும் ஜெயம் ரவி போல் கோட் சூட் அணிந்திருந்தார் அந்த சார். உருவம் பார்வை எல்லாம் கூட அவரைப் போலவே இருந்தது. படத்தில் சண்டைக் காட்சிகளில் டூப் போட சரியான தேர்வு இவர்.

இருவருக்கும் இடையே இருந்த மேஜையில் ஒரே ஒரு லேப்டாப் விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதில் எதையோ தட்டிக் கொண்டே இருந்தார் ஜெயம்ரவி.

திரும்பத் திரும்ப சார் என்று எழுதுவது எனக்கே போரடிக்கிறது. படிக்கும் உங்களுக்கும் நிச்சயம் போரடிக்கும். அதனால் இனி ஜெயம் ரவி என்று இவரை குறிப்பிடுகிறேன்.

ஆனால் இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் சம்பவங்கள் யாவும் கற்பனையே. கதையைப் படித்து விட்டு யாரும் ஜெயம் ரவியின் வீட்டின் பூட்டை பிடித்து ஆட்ட வேண்டாம். ஆனால், என் வீட்டில் கதவுக்கு பூட்டே இல்லை என்பது மென் சோகம்.

இனி அவர்களின் உரையாடல்.

“நேற்று உங்களிடம் நான் எப்படி பேசினேன்?”

“நல்லா தான் பேசினீங்க அதுல என்ன?”

“அது இல்ல தலைவரே. 100 கிலோமீட்டர் அப்பால இருந்து கம்பி தொடர்பு இல்லாத போன்ல முகம் பார்த்து பேசினேன். இதெல்லாம் நடக்கும்னு ஒரு முப்பது வருடம் முன்பு யோசித்திருப்போமா?”

“இல்ல தான்.”

“ஆனா இப்ப அது சாத்தியமாகுது. அதான் டெக்னாலஜியின் வளர்ச்சி. அது போல தான் இதுவும்.”

“ஆனா இந்த மெஷினை ஹேக் பண்ணவே முடியாதுன்னு சொன்னாங்களே?!”

“அது இந்த மிஷினை கண்டுபிடிச்சவங்க கண்டுபிடிச்ச போது சொன்னது. அதற்குப் பிறகு எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டது. இப்போ அட்வான்ஸ் டெக்னாலஜி எல்லாம் வந்துட்டு .இப்ப எதுவும் சாத்தியம்.”

இப்படியாக போய்க்கொண்டிருந்தது அவர்களுடைய உரையாடல். எனக்கு எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பது தெளிவாக புரிந்தது.

நகராட்சிக்கு இடைத்தேர்தல் முடிந்து ஒரு வாரம் தான் ஆகிறது. நாளை காலை வாக்கு எண்ணிக்கை. எல்லா கட்சிகளும் வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இது தலைவருக்கென்று தனியான அலுவலகம். அதனால் இங்கு கட்சிக்காரர்கள் நடமாட்டம் இல்லை. நானும் சீக்கிரத்தில் வெளியேறி விட வேண்டும். அதற்குள் நடக்கிற சதியை பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொண்டு வெளியேற வேண்டும்.

அவர்கள் உரையாடலின் தொடர்ச்சி.

“பேட்டரி எல்லாம் பிடுங்கிவிட்டு தானே மிஷினை பெட்டிக்குள் வைப்பார்கள். அதில் நீங்கள் என்ன பண்ண முடியும்.?”

“முடியும்”.

“அதான் எப்படி? உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சா மட்டும் போதாது. படிக்காத எனக்கு புரியும்படி விளக்கவும் தெரிய வேண்டும். எப்படின்னு தான் சொல்லுங்களேன்.”

“நீங்க முதன் முதலில் என்ன செல் வைத்திருந்தீர்கள்?”

“நோக்கியா மண்ட செல்லு”

“அதுல டவர் இல்லாதப்போ பேட்டரி இல்லாதப்போவோ உங்களுக்கு நான் மெசேஜ் அனுப்புனா என்ன ஆகும்?”
“காத்திலேயே சுத்திக்கிட்டு இருக்கும், டவர் கிடைச்சதும் இல்லன்னா பேட்டரி ஆன் பண்ணதும் வந்து விழும்.”

“அதேதான். ஒவ்வொருத்தருக்கும் எத்தனை ஓட்டு வேணும் என்று நான் ப்ரோக்ராம் பண்ணி நாளை காலையிலேயே அனுப்பி வச்சிருவேன். வாக்கு எண்ணிக்கைக்காக மிஷின ஆன் பண்ணும் போதே என் ப்ரோக்ராம் அதுல லோட் ஆகிடும். அதைத்தான் ரிசல்டா காட்டும்.”

“அந்த மண்ட செல்லு காலத்துல வைரஸ் மெசேஜ் அனுப்பி செல்லை காலி பண்றதா பேசிக்கிட்டாங்க. அதனால் நான் ஒரு வாரம் செல்லை ஆன் பண்ணாமலே வச்சிருந்தேன்.”

“அப்புறம் என்ன ஆச்சு?” இது ஜெயம் ரவியின் குரல்.

“ஆன் பண்ணினதும் ஒரு மெசேஜ் வந்துச்சு. ஒரு வாரம் ஆகி இருக்கும் இன்னுமா சுத்த போகுது என்று அந்த மெசேஜை ஆன் பண்ணினேன். மண்ட செல் மண்டைய போட்டுட்டு.”

“அதேதான்”

“அப்படிதான் இதுவுமா..?”

“கிட்டத்தட்ட அப்படித்தான்.”

“கிட்டத்தட்டன்னா..?”

“அதுல மண்டைய போட வைச்சோம். இதுல மண்டைய குழப்பிடுவோம். எத்தனை வாக்குகள் யார் யாருக்கு பதிவு பண்ணி வச்சோம் அப்படிங்கிற ஞாபகத்தையே குழப்பி நாம என்ன சொல்றோமோ அதை திருப்பி சொல்ல வைப்போம். அதுதான் ரிசல்ட்.”

“புதிதாக கட்டளையை ஏற்கிற மாதிரி ப்ளூடூத் எல்லாம் அந்த மிஷின்ல கிடையாதுன்னு சொல்றாங்களே சார்.?”

“இதையே 20 வருடமா சொல்லிக் கொண்டிருப்பீர்களா.? உங்க மொபைல் ஓட புது வெர்ஷன் ஆட்டோமேட்டிக்கா அப்டேட் ஆகல?”

“ஆமாம்”

“அதுவும் இல்லாம தேர்தல் அன்னைக்கு மட்டும் தான் பெட்டி உங்க பார்வையில. மற்ற நாட்களில் அது எங்க இருக்குன்னு உங்களுக்கே தெரியாது.”

“ஆமாம்.”

“பேசிகிட்டு இருக்க நேரமில்லை விடிந்தால் ரிசல்ட். மறுபடியும் ஒரு ஆமாம் போட்டுட்டீங்கன்னா டீலிங் முடிச்சிடலாம். என்ன சொல்றீங்க.?”

“ஒரு நாலு நாள் முன்ன வந்து இருந்தா டெக்னாலஜி தெரிஞ்ச எங்க பயலுகள கேட்டிருப்பேன். காலையில வந்து சொல்லி இருந்தா கூட லண்டன்ல படிக்கிற என் பையன் கிட்டயாவது கேட்டு இருப்பேன். காசு கொடுத்து ஏமாந்துட கூடாது இல்லையா.?”

“ஓட்டு போடுவாங்களா மாட்டாங்களா எதுவுமே தெரியாம மக்களிடம் காசு கொடுக்குறீங்க. டெக்னாலஜி தெரிஞ்ச என்கிட்ட கொடுக்கிறதுக்கு யோசிக்கிறீங்க. இது எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ற வேலை இல்லை.
நாம கொடுக்கிற முடிவை மக்கள் ஏத்துக்கிற மாதிரி கருத்துருவாக்கம் பண்ணனும். அதுக்கு பத்திரிகைகளை விலைக்கு வாங்கணும்.”

“நான் எந்த பத்திரிகைக்கும் காசு கொடுக்கலையேப்பா. ஆனாலும் நான் தான் ஜெயிப்பேன்னு எழுதுறாங்களே.?”

“அது அவங்களா எழுதுறாங்கன்னு நீங்க நினைச்சீங்களா.? நாங்க பணம் கொடுத்திருக்கிறோம். நாங்க ரெண்டு மாதம் முன்பே உங்களுக்காக வேலையை ஆரம்பிச்சிட்டோம்.”

“அப்படியா?”

“அதுவும் இல்லாம எல்லா பூத்திலும் உங்களுக்கு லீடிங் காட்ட முடியாது. எந்த இடத்தில கொஞ்சமாவது ஓட்டு வாங்குவீங்களோ அந்தப் பூத்துல தான் கூடுதலா கொஞ்சம் காட்ட முடியும்.”

“எனக்கு ஓட்டு விழுகிற பூத் உங்களுக்கு எப்படி சார் தெரியும்?”

“அதுக்காக தான் நாங்க பத்திரிக்கை சர்வே எக்ஸிட் போல் இப்படி பல டீம் வச்சு டீடைல் கலெக்ட் பண்றோம்.
எத்தனை ஓட்டு விழுந்துச்சு ஆண் எத்தனை பெண் எத்தனை வோட் மிஷின் நம்பர் என்ன எல்லாவற்றையும் கலெக்ட் பண்ணி தான் ப்ரோக்ராமே பண்ண முடியும்.”

“நல்ல வேலைக்காரங்க தான் சார் நீங்க. அப்படியே என்னை எதிர்த்து நிற்கிறவனையும் முடிச்சு விட்டுருங்க சார். அவன் அந்த வார்டுல ஜெயிக்கவே கூடாது.”

“நம்பவே முடியலன்னு சொன்ன நீங்க விளக்கம் கொடுத்ததும் அவரையே முடிச்சு விட பாக்குறீங்களே பேராசைதான் தலைவரே உங்களுக்கு.”

“அவன் காலங்காலமாக அரசியலில் இருக்கிறவன். சபைக்கு வந்தான்னா என்ன நோண்டி நுங்கு எடுப்பான். மிஷின் மேல அஞ்சு பத்து போட்டு கொடுக்கிறேன். எப்படியாவது முடிச்சு விட்ருப்பா..”

அறைக்கு வெளியே நிற்கிறேன் நான். தலைவர் கெஞ்சுவது அவர் குரலிலேயே தெரிந்தது .
இதற்கு மேல் முழு உரையாடலை கேட்க அவகாசம் இல்லை.உடனடியாக வெளியேறியாக வேண்டும்.

நடக்கப் போகும் சதியின் விபரீதம் புரிந்து மிகவும் பரபரப்பாக உணர்ந்தேன்.

உடனடியாக யாரும் அற்ற பாதுகாப்பான ஒரு இடத்திற்கு வந்து என் உண்மையான தலைவரை போனில் அழைத்தேன்.

எனக்கு இருந்த பரபரப்பில் அவர் போனை எடுத்தவுடனே “தலைவரே நாளைக்கு நீங்க ஜெயிக்க மாட்டீங்க” என்ற கதறி விட்டேன்.

“யாருப்பா நீ. ஏதோ நான் பகுத்தறிவுவாதிங்கறதுனால உன் பேச்சை சாதாரணமா எடுத்துக்கிறேன். சகுனம் அபசகுனம் பாக்குறவங்களா இருந்தா என்ன ஆகும்? உன் பதட்டம் எனக்கு புரியுது. பத்திரிகைகள் எழுதுவதெல்லாம் நம்பாதே. நாமதான் ஜெயிப்போம் ” என்று நம்பிக்கையாக சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்.

பேசத் தெரியாமல் பேசி விட்டேன் என்பது எனக்கே தெரிந்தது.

அடுத்து நான் அடிக்கடி பேசும் என்னுடைய வார்டு கவுன்சிலருக்கு போன் அடித்தேன்.

“தலைவரே நாளைக்கு ..”என்று இழுத்தேன்.  எப்படி ஆரம்பிப்பது என்று எனக்கு தெரியவில்லை.

“நாளைக்கு கடை லீவு அதானே. அதெல்லாம் முன்னாடியே வாங்கி வச்சாச்சு. வீட்ல போய் சின்னவன் கிட்ட கேட்டு வாங்கிக்கொள் ”

“அது இல்ல தலைவரே..?”

“என்ன வேட்டுவாங்க காசு வேணுமா?”

“போங்கடா நீங்களும் உங்க வேட்டும்” என்று மனதில் நினைத்தேன். இனி பேசி புரிய வைக்க முடியாது.”

“வெடியெல்லாம் ஏற்கனவே செட் பண்ணியாச்சு தலைவரே. நாளைக்கு ரிசல்ட் வந்ததும் வெடிக்கும். நான் போய் பாட்டில் மட்டும் வாங்கிக்கிறேன்.”

கடுப்பாக சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

பாட்டிலுக்கா பஞ்சம். கிடைத்த இடத்தில் வாங்கி ஊற்றிவிட்டு மட்டையாகினேன்.

சத்தம் காதை கிழித்ததும் உறக்கத்திலிருந்து விழித்தேன்.

“தேர்தல் தான் முடிஞ்சிடுச்சு இல்ல. இன்னும் ஏண்டா காதை கிழிக்கிறீங்க?.” என்று எதிரில் இருந்த அறை நண்பனிடம் சத்தம் போட்டேன்.

“அது நான் இல்ல. வெளியில பஸ் கண்டக்டர். பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல ரூம் இருந்தா இப்படித்தான்”. என்றான் நண்பன்.

பேசிக் கொண்டே மணியைப் பார்த்தேன். மணி ஒன்றாகிவிட்டது.

“இவ்வளவு நேரம் தூங்கி விட்டேனா. ? “”ரிசல்ட் என்ன ஆச்சு? என்றேன் பதட்டமாக.

“இனிமே நாங்கதான்” என்றான் அவன்.

எனக்கு ஜெயம் ரவி கண்ணில் வந்து போனான்.

“என் தலைவர் என்ன ஆனார் டா?”

“தோத்துட்டார். டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம்.”

எல்லாம் தெரிந்தும் எதையும் யாருக்கும் சொல்ல முடியாத அவஸ்தையில் இருந்தேன் நான்.
“என்னடா முழிக்கிற?”

“இல்ல ஆடு திருடு போயிட்டது அதான் முழிக்கிறேன்.”

“ஆடு திருடு போய்விட்டதா. இல்ல திருடு போனது மாதிரி கனவு கண்டியா?”

“ஆடு திருடு போகல. கனவுதான் கண்டேன் ”

என்றேன் நான்.

அவ்வளவுதான். கதை முடிந்தது.