“ஜோசப் விஜய்க்கு கோரிக்கை.. இன்புளூயன்ஸர்களுக்கு எச்சரிக்கை!”: சிலம்பம்’ விழாவில்மோகன்.ஜி அதிரடி!

“ஜோசப் விஜய்க்கு கோரிக்கை.. இன்புளூயன்ஸர்களுக்கு எச்சரிக்கை!”: சிலம்பம்’ விழாவில்மோகன்.ஜி அதிரடி!

க்‌ஷ்மி நாராயணா பிலிம்ஸ் சார்பில், ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர் ஏ.கே.எஸ்.ஜோதி தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கும் பக்கா ஆக்ஷன் திரைப்படம் ‘சிலம்பம்’. அறிமுக நடிகர் அஜித் நாயகனாகவும், ஹரிஷ் வில்லனாகவும், மௌனிகா ரெட்டி நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேபில் செம மாஸாக அரங்கேறியது!

தமிழர்களின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை மையமாக வைத்து உத்வேகத்துடன் உருவாகியிருக்கும் இந்த ‘சிலம்பம்’ பட விழாவில், ஒவ்வொருவரும் மேடையில் சுழன்றடித்த சுவாரசியப் பேச்சுகள் இதோ உங்களுக்காக…


மேடையில் இயக்குநரின் உருக்கமும்.. எனர்ஜியும்!

விழாவின் தொடக்கமாக, தமிழர்களின் ஒழுக்கத்திற்கும் வீரத்திற்கும் அடையாளமான சிலம்பக் கலையை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வந்திருக்கும் இப்படம் வெல்ல வாழ்த்தி, அனைவரையும் வரவேற்றார் இணை இயக்குநர் அருண்குமார்.

அடுத்து மைக் பிடித்த இயக்குநர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி, தன் குருநாதர் பவர் பாண்டியன் மாஸ்டருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தட்டிவிட்டார்.

“இந்த படத்தில் நிஜ சிலம்ப மாஸ்டர்கள் மற்றும் பயிற்சி பெற்ற 300 பேரை வச்சு இயக்கியிருக்கேன். ஆங்கிலம் கலக்காமல் முழுக்க முழுக்க தமிழில் வசனங்கள் பேசியிருக்கோம். ஒரு காலத்துல கராத்தே, பாக்ஸிங் கூட்டிட்டுப் போன பெற்றோர்கள், இப்போ சிலம்பக் கலைக்கு பிள்ளைகளைக் கூட்டிட்டு வர்றாங்க, அதுவும் தாய்மார்கள் கூடவே இருந்து ஊக்கப்படுத்துறாங்க! அந்த அளவுக்கு சிலம்பம் இப்போ விஸ்வரூபம் எடுத்திருக்கு.

படை பலம், பண பலம், அதிகார பலத்தை எதிர்க்கும் ‘சிலம்பரசன்’ கேரக்டரில் தம்பி அஜித் மிரட்டியிருக்கார். நான் எப்போ கேமரா முன்னாடி நிப்பேன் என ஏங்கிய காலங்களில் எனக்கு ஊக்கம் கொடுத்த என் மனைவிக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப்போகும் மீடியாவுக்கும் என் நன்றிகள்!” என எமோஷனலாகப் பேசினார்.


டீம் கொடுத்த எனர்ஜி பூஸ்ட்!

  • இசையமைப்பாளர் ‘தி’ (விக்ரம் வர்மன்): “கன்னடம், இந்தினு பிஸியா இருந்தாலும், ஜோதி சாருக்காக இந்த படத்துக்கு மியூசிக் பண்ணியிருக்கேன். திறமையிருந்தும் வாய்ப்பில்லாத என் நண்பர்களை ஒன்றிணைத்து ‘தி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி, இந்த படத்தின் இசையை உருவாக்கியிருக்கோம்!”

  • நாயகி மௌனிகா ரெட்டி: “எனக்கு இந்த அருமையான வாய்ப்பைக் கொடுத்த டைரக்டருக்கு நன்றி. பாடல்களும் டிரைலரும் உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும், தியேட்டருக்கு வந்து பாருங்க!”

  • ஜி.வி.எம்.குமார் & சுமா தேவி: “சினிமா பாதை பூக்களால் ஆனது அல்ல, கஷ்டங்கள் நிறைந்தது. அதைத் தாண்டி ஜெயிச்சிருக்கார் ஜோதி” என்று வாழ்த்தியதோடு, 14 வருட மலையாள சினிமா அனுபவத்திற்குப் பிறகு தமிழில் அறிமுகமாகும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் சுமா தேவி.


சிலம்பத்தின் ஹிஸ்டரி சொன்ன பவர் பாண்டியன் ஆசான்!

“ஸ்டண்ட் யூனியனுக்கு இந்த படம் ஒரு முன்னோடி” எனப் பெருமிதத்துடன் தொடங்கிய ஆசான், சிலம்பத்தின் வரலாற்றை மேடையில் சுழற்றினார்.

“1980 உலகத் தமிழ் மாநாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் டேவிட் மேனவ்ராய் ஒரு புத்தகம் கொடுத்தார். அதை வாசித்த எம்.ஜி.ஆர், ‘இந்த கலை ஏன் விளையாட்டாக மாறக்கூடாது?’ என யோசித்தார். அதன் பிறகுதான் தற்காப்பு கலையாக இருந்த சிலம்பம், விளையாட்டாக மாறியது. 2006ல் கலைஞர் அவர்கள் இதை பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் சேர்த்தார். இப்படி சிலம்பம் வளர எல்லாக் கட்சிகளுக்குமே பங்கு உண்டு. ஜோதியின் பிள்ளைகள் இதில் மாநில அளவில் சாதித்த அனுபவம்தான் இந்த படத்தின் கதை. 4500 ஆண்டுகள் பழமையான இந்த கலையை சினிமாவில் உயிருடன் வைத்திருப்பது எங்கள் ஸ்டண்ட் யூனியந்தான்!”

இவரைத் தொடர்ந்து பேசிய ஸ்டண்ட் யூனியன் தலைவர் அசோக், “விஜய், சூர்யா எனப் பல முன்னணி ஹீரோக்கள் ஜெயிக்க மாஸ்டர் சொல்லிக்கொடுத்த ஒழுக்கம்தான் காரணம். ஜோதி அண்ணன் தன் பிள்ளைகளை இதில் கடுமையாக உழைக்க வச்சிருக்கார், படம் பெருசா ஜெயிக்கும்!” என்றார்.


மேடையைக் கலகலப்பாக்கிய கூல் சுரேஷ்!

வழக்கமான தன் துள்ளல் பாணியில் என்ட்ரி கொடுத்த கூல் சுரேஷ், படத்தில் வரும் “கலையை காசாக்க சொல்றீங்களா” என்ற வசனத்தைப் பாராட்டிவிட்டு, அரசியல் அதிரடிகளுக்குத் தாவினார்.

“இந்த படத்தின் சக்சஸ் மீட் விஜய் சார் முதல்வராகப் பதவியேற்ற நேரு ஸ்டேடியத்தில் நடக்கணும்! விஜய் சார் ஆட்சி அமைச்சுட்டாங்க. டிவி கே எம்.எல்.ஏக்கள் எல்லாரும் படிச்சவங்க, அவங்களைச் சோசியல் மீடியாவில் ஒருமையில் பேசாதீங்க. அஞ்சு வருஷம் பொறுமையா இருந்து அவங்க பண்ற நல்லதை ப்ளீஸ் பாருங்க!” என அட்வைஸ் மழை பொழிந்தார்.


ஆக்ஷன் நாற்காலியும்… அஜித் சாருக்கு ரிக்வெஸ்ட்டும்… பேரரசு அதிரடி!

கூல் சுரேஷுக்குப் பதிலடி கொடுத்துப் பேச்சைத் தொடங்கிய இயக்குநர் பேரரசு, “ஜோதி நல்ல இயக்குநராக மட்டுமில்லாம, பையனை ஹீரோவாவும் வில்லனாவும் ஆக்கி நல்ல தகப்பனாவும் நிக்கிறார். இந்தியில் ஸ்டண்ட் மாஸ்டர் வீர் தேவ்கான் தன் மகன் அஜய் தேவ்கானை ஹீரோவாக்கினது போல, இங்க ஜோதி நிக்கிறார்” எனப் பாராட்டினார். தொடர்ந்து,

“தமிழ் சினிமாவோட முதல் ஆக்ஷன் ஹீரோ எம்.ஜி.ஆர் முதல்வரானார். அடுத்து ஆக்ஷன் ஹீரோ விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். இப்போ ஆக்ஷன் ஹீரோ விஜய் முதல்வராகிவிட்டார்! நடிகர்கள் அரசியலில் ஜெயிக்க ஆக்ஷன் ஹீரோவா இருக்குறதுதான் அடிப்படை. அந்த ஆக்ஷன் ஹீரோக்களை உருவாக்குறதே இந்த பைட் மாஸ்டர்கள்தான். விஜயோட முதல்வர் நாற்காலியில் ஒரு கால் ஸ்டண்ட் மாஸ்டர்கள்தான்! அதேபோல, இங்க வந்திருக்கும் தம்பி அஜித் நல்லா பண்ணியிருக்கார். நான் இப்போ ‘தல’ அஜித் சாருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்… நீங்க கார் ரேஸை சீக்கிரம் முடிச்சுட்டு சினிமாவுக்குத் திரும்ப வந்துடுங்க, கேப் விட்டா வேறு யாராவது வந்துடுவாங்க!” எனப் பட்டாசு கிளப்பினார்.


சோசியல் மீடியா இன்புளூயன்ஸர்களுக்கு மோகன்.ஜி விடுத்த எச்சரிக்கை!

“சிலம்பம் கலையின் பின்னாடி இருக்கும் அரசியலை எளிய மக்களுக்குச் சொல்லியிருக்காங்க” எனப் பாராட்டிய இயக்குநர் மோகன்.ஜி, தற்போதைய சினிமா ரிலீஸ் கஷ்டங்களைப் படம்பிடித்துக் காட்டினார்.

“இப்போ சினிமா சோசியல் மீடியா இன்புளூயன்ஸர்கள் கைக்கு போயிடுச்சு. பணத்துக்காகப் படங்களை ஓடவிடாமல் தடுக்க பெரிய குரூப் வேலை செய்யுது. என் படத்திற்கும் அதனால்தான் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக முதல்வர் விஜய் சார் அரசு சார்பில் பிரத்யேக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்க வேண்டும்! தியேட்டருக்குப் பெரிய கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் சிறு முதலீட்டுப் படங்களை வாழ வைக்க இதுதான் வழி!” என்ற கோரிக்கையோடு விடைபெற்றார்.

இறுதியாகப் பேசிய பெப்ஸி விஜயன், “வெள்ளைக்காரர்களிடம் இருந்து மிளகைக் காப்பாற்ற மூங்கிலை உடைத்துச் சுழற்றியதுதான் சிலம்பத்தின் தொடக்கம்! எம்.ஜி.ஆருக்கு என் தந்தைதான் மாஸ்டர். அப்படிப்பட்ட பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் தம்பி ஜோதிக்கு வாழ்த்துகள்!” என ஆக்ஷன் டச்சோடு விழாவை நிறைவு செய்தார்.

Related Posts