“தேனியில் இளம்பெண் ஆணவக்கொலை!” : த.வி.இ. குற்றச்சாட்டு!

காதல் தோல்வியால், இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், “இதுவும் ஆணவக்கொலையே!” என்று தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.கருப்பையா  குற்றம் சாட்டி உள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டி கக்கன்ஜி நகரைச் சேர்ந்த முத்து – பழனியம்மாள் தம்பதியின் மகள் முத்துப்பாண்டியம்மாள். இதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் மகன் முத்து. 

இருவரும், பண்னைக்காடு வீரம்மாள்  கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகின்றார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் மணம் விரும்பி காதலித்து வந்தனர்.

இதை அறிந்த முத்துவின்   தந்தை கிருஷ்ணன் இவர்களின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து, இருவரும், தங்கள் குடும்பத்தினருக்குத் தெரியாமல், சென்னைக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேவதானப்பட்டியில் உள்ள தனது வீட்டில் முத்துப்பாண்டியம்மாள் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.கருப்பையா கூறும்போது, “அந்த காதல் ஜோடி இருவருமே பறையர் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் பையனின் தந்தை அரசியல் செல்வாக்கு மிக்கவர்; வசதியானவர்.  இதைக் குறிப்பிட்டு, இத்திருமணத்தை  ஏற்க மறுத்துவிட்டார். 

இதையடுத்தே  இருவரும்  சென்னை சென்று திருமணம் செய்துகொண்டு, மூன்று நாட்கள் மகிழ்ச்சியாக குடும்பமும் நடத்தி  இருக்கிறார்கள்.  ஆனால், இருவரையும் வாழவைப்பதாக நைச்சியமாக பேசி ஊருக்கு வரவழைத்தார், பையனின் தந்தை கிருஷ்ணன்.

கருப்பையா

அவர்கள் வந்ததும், பஞ்சாயத்தில் பேசி,  இருவரையும் பிரித்துவிட்டார். தவிர, காவல்துறையிலும் தனது செல்வாக்கை செலுத்தி, ‘பையனுக்கு 18 வயது நிரம்பவில்லை’ என கூறி,  தன்னுடன் அழைத்து  சென்றுவிட்டார்.

இதனால் விரக்தி அடைந்த முத்துபாண்டியம்மாள் தற்கொலை செய்துகொண்டார். அதாவது, அந்த இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டி உள்ளனர். ஆகவே இதுவும் கொலைதான்.

ஒரே சாதி என்றாலும், அந்தஸ்து காரணமாக காதல் தம்பதிகளைப் பிரித்து தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறார்கள்.  இதையும் ஆணவக்கொலை என்றே சொல்ல வேண்டும். தவிர, அந்தப் பெண்,  நேற்று காலை தற்கொலை செய்துகொண்டார். இரவு வரை அவரது உடல் அவரது வீட்டிலேயே இருந்தது. அதன் பிறகு எரித்துவிட்டனர். இது குறித்து காவல்துறைக்கு நான் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை! அரசு உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்! ”  என்றும் குற்றம் சாட்டினார் கருப்பையா.

 

 

Related Posts