விளையாட்டு நகரம்: வேண்டாம் செம்மஞ்சேரி! திருச்சி, தஞ்சாவூர்ல வேணும்! தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

விளையாட்டு நகரம்: வேண்டாம் செம்மஞ்சேரி! திருச்சி, தஞ்சாவூர்ல வேணும்! தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

சென்னை அருகே செம்மஞ்சேரியில், 105 ஏக்கர் பரப்பளவில் பல நூறு கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு அமைக்க இருக்கும் விளையாட்டு நகரத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தனியார் ஆய்வு மையம் வலியுறுத்தி உள்ளது.

சென்னையில் உலக தரத்திலான மெகா ஸ்போர்ட் சிட்டி எனும் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் அறிவித்து இருந்தார்.

அரசு தரப்பில், “இந்த விளையாட்டு நகரத்தில் ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

இங்கு நீச்சல் வளாகம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம் என 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமையும்.

இந்த வளாகத்தில் வீரர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் வகையில் பயிற்சிக் கூடங்கள், தங்கும் அறைகள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இடத்தைத் தேர்வு செய்யும் பணி நடக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விளையாட்டு நகரத்தை அமைக்க தகுந்த இடத்திற்கான ஆய்வுகள் நடந்தன. அதில் செம்மஞ்சேரி, வண்டலூர், குண்டம்பாக்கம் உள்ளிட்ட 3 இடங்களில் இந்த விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக கண்டறியப்பட்டது.

2023ம் ஆண்டு, செம்மஞ்சேரி பகுதியில், விளையாட்டு நகரத்துக்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் விளையாட்டு நகரத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

விளையாட்டு திடல் அமைக்க உள்ள காலி இடங்களின் வழித்தடம் மற்றும் மாதிரி வரைப்படம் ஆகியவற்றை காண்பித்து அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கம் அளித்தனர். அப்போது அதிலுள்ள சிக்கல்கள், ஆக்கிரமிப்பு பிரச்சினைகள், வழித்தடங்கள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.இதனையடுத்து, செம்மேஞ்சேரியை தேர்வு செய்து அங்கு விளையாட்டு நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் போட்டிகள் நடைபெறும்போது வெளிநாட்டு வீரர்கள் வந்து செல்ல வசதியாக சென்னை விமான நிலையத்துக்கு அருகே செம்மஞ்சேரி பகுதியில் இந்த விளையாட்டு நகரத்தை அமைக்க அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது.

2024 ஜூன் மாதம், செம்மஞ்சேரி விளையாட்டு நகரம் அமைக்க தொழில்நுட்ப – பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரியது.

கடந்த (2025 மார்ச்) மாதம், தமிழக சட்டசபையில், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகிய துறைகளுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு முன்வைக்கப்பட்டது.

அதில், “விளையாட்டு நகரத்தை அமைக்க சென்னை செம்மஞ்சேரியில் 100 ஏக்கர் பரப்பளவு நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. விளையாட்டு நகரம் உருவாவதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை முடிவடையும் தருவாயில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த விளையாட்டு நகரத்தை உருவாக்க ரூ.1000 கோடி வரை செலவு ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், உவகை ஆராய்ச்சி நிறுவனம் (Uvagai Research Foundation) சார்பில் முனைவர் விதுபாலா, சென்னை பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி பகுதியில் வெள்ளம் சூழாமல் தடுப்பது எப்படி என்கிற ஆய்வுரையை, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வழங்கினார்.

அந்த செய்தி:

சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணையில் வெள்ளத்தைத் தடுக்க இதை பண்ணுங்க!

அப்போது, “செம்மஞ்சேரி பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு நகரம் நீர் தேங்கும் தாழ்வான பகுதியில் வருகிறது. எனவே, இந்தத் திட்டத்தை வேறு தகுந்த இடத்திற்கு மாற்ற வேண்டும்” என்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவரை தொடர்புகொண்டு பேசினோம்.

அவர், “நான் ஏற்கெனவே சொன்னது போல, செம்மஞ்சரி தாழ்வான பகுதி. மழைக்காலத்தில் வெள்ள அபாயம் உண்டு. ஏற்கெனவே அப்படி நடந்திருப்பதை அறிவோம். இந்த விளையாட்டு நகரம் அமைக்க சென்னை அருகிலேயே வண்டலூர், குத்தம்பாக்கம் ஆகிய இடங்களையும் ஆய்வு செய்தனர்.

எதற்கெடுத்தாலும் சென்னையை சுற்றி வரும் முடிவினை தவிர்க்க வேண்டும். இதனால் இங்கே மேலும் இட நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி, சுற்றுச் சூழல் மாசு, தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கவே செய்யும்.

சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் இருப்பதால் இங்கே இடங்களைத் தேர்ந்தெடுத்தோம் என்கிறார்கள். வெளிநாட்டு வீரர்கள் அவர்கள் நாட்டில் இருந்து சென்னை மீனம்பாக்கம் வர சில மணி நேரம் ஆகும். அங்கிருந்து செம்மஞ்சேரி செல்ல அதே போல மணிக்கணக்காக ஆகும். இதை அவர்கள்.. ஏன், எவருமே விரும்பமாட்டார்கள்” என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், “தமிழ்நாடு பெரிய மாநிலம். வட கிழக்கு மூலையில் உள்ள சென்னையிலேயே ஆகப்பெரும்பாலான திட்டங்களை கொண்டு வருவது, பிற பகுதி மக்களுக்கு அவதிதான். ஆகவே திருச்சி, மதுரை பகுதியில் திட்டங்களை.. குறிப்பாக இந்த விளையாட்டு நகரத்தை அமைக்கலாம்.

அங்கே பரந்த இடம் – அரசு இடம் – உள்ளது. உதாரணமாக, திருச்சி – தஞ்சை பகுதியில் பல்லாயிரக்கணக்கான அரசு நிலம் இருக்கிறது. அருகிலேயே திருச்சி விமான நிலையம் உண்டு. திருச்சி, தஞ்சை இரண்டு ஊர்களுமே பேருந்து, ரயில் வசதி நிரம்பியவை.

அங்கே விளையாட்டு நகரத்தை அமைக்கலாம்” என்கின்றனர்.

– டி.வி.சோமு

Related Posts