“கவர்னர் பீடி, மக்குப் பையன், சங்கி, தமிழ்ச்சட்டை!”: ஆளுநர் விழா பேச்சுக்கு பார்த்திபன் அதிரடி விளக்கம்!
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது அவர், “தமிழ்நாட்டின் பண்பாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி காப்பாற்றுகிறார்” என்று தெரிவித்தார். மேலும், ஆளுநர் செய்யும் நல்ல விஷயங்களுக்கு தானும் உடன் இருக்க வேண்டும் என்றும், ஆளுநர் மீது தனக்கு காதல் உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், “தமிழ்க் கலாச்சாரத்தை குறைத்துபேசிவரும் – வரலாற்றைத் திரிக்கும் ஆளுநர் ரவியை புகழ்ந்து பேசலாமா” ென்று சமூகவலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்தனர். விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, “தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் ஆளுநருக்கு, தங்களைப் போன்ற புகழ் பெற்ற ஆளுமைகள் பயன்படுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமில்லையா? “என்று கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில் பார்த்திபன் விளக்கம் அளித்து உள்ளார்.
அதில், “நேற்றைய ஆளுநர் சந்திப்பை நான் எதைச் சொல்ல விரும்பினேனோ அதற்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். பேச்சின் முதல் வரியாக தமிழின் ஆளுமை சுப்ரமணிய பாரதிக்கு என் முதல் வணக்கம் என்று துவங்கி தமிழக ஆளுனருக்கு மரியாதை எனத் தொடர்ந்தேன். தமிழின் பெருமையும் தமிழக பண்பாடும் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே எல்லா சொற்களையும் பயன்படுத்தினேன்.
மேலும், ‘பையன் ரொம்ப நல்லா படிக்கிறான் போல..’ என்று சொல்லும் போது ஒருவேளை அப்பையன் சரியாக படிக்காதவனாக இருந்தால் உள்ளுக்குள்ள உறுத்தும். அப்படித்தான், ‘தமிழ் பண்பாட்டை கவர்னர் நன்றாக பாதுகாக்கிறார்’ என்ற வாக்கியத்தில் உள்ள உள்குத்தையும் கவனிக்க வேண்டும்.
பேச்சின் இடையே, ‘எங்கப்பா குடிச்ச பீடியின் பெயர்.. கவர்னர் பீடி’ என்று கலாய்த்தேன்: சபை சலசலப்பை உருவாக்கி குலுங்கியது. அவர் புரியாமல் பார்த்தார். ‘sorry to say this’ எனக் கூறி அதையே ஆங்கிலத்தில் கூற.. அவருக்கு புரிந்திருக்கும், புகைந்திருக்கும். ‘பீடிக்கு கவர்னர் பீடி என பெயர் வைத்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றேன்.
ஆளுநர் தமிழன் பெருமை உணர தமிழின் செழுமையை வாசிக்க புத்தகம் வழங்கினேன். தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை காப்பதற்கு நன்றி எனக் கூறி விடை பெற்றேன். இந்(தி)த கோட்டைக்குள் சென்று ஆனந்தமாய் தமிழ், தமிழ், தமிழ் என செம்மொழியில் கர்ஜித்து விட்டே வந்தேன். வாய்ப்பை ஒதுக்கி ‘சங்கீ’தம் பாடுவதை விட, கிடைத்த வாய்ப்பை செதுக்குவதே மேல். இதற்கு மேல் முறையீடு செய்ய வேண்டாம்.
பின்குறிப்பு: பத்ம விருதோ கட்டு கட்டாக காந்திகளோ.. ஏன், ஒரு கட்டு கவர்னர் பீடியோ கூட தட்சனையாகப் பெறவில்லை. மாறாக நான் என் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு அம்மாளிகையில் தமிழ் கொடியேற்றி விட்டு வந்தேன். ஒவ்வொருவருக்கும் சொல்லும் பாணியென்று ஒன்று உண்டு. அதனால் மட்டுமே அவரை வசைமொழியில் சங்கீ’தமாய் பாடக்கூடாது” என்று பார்த்திபன் விளக்கம் அளித்து உள்ளார்.
