எஸ்.ஏ.சி.யின் சிறந்த திரைக்கதை எது தெரியுமா?: இயக்குநர் பார்த்திபன் அதிரடி!
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், 1978-ஆம் ஆண்டு “அவள் ஒரு பச்சை குழந்தை” என்கிற படத்தின் மூலம், இயக்குநராக தடம் படதித்தார். இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, கன்னட படங்களையும் இயக்கி இருக்கிறார். சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி, நீதிக்குத் தண்டனை என பிளாக் பஸ்டர் படங்கள் பலவற்றைக் கொடுத்தவர்.
தனது மகன் விஜயை குழந்தை நட்சத்திரமாகவும், நாயகனாகவும் அறிமுகப்படுத்தினார்.
குடும்பம், திகில், விலங்குகள் என குறிப்பிட்ட விதத்தில் படங்களை அளிப்பார்கள் இயக்குநர்கள். அந்தவகையில், “அரசியல், சட்டம் குறித்தவை என்றால் எஸ்.ஏ.சி. படங்கள்தான்” என்பது ரசிகர்களின் அபிப்பிராயம். அவற்றில் எந்த அளவுக்கு அரசியல், சட்டம் இருந்தது என்பது விவாதத்துக்கு உரியது என்றாலும், “அரசியல் – சட்ட திரைப்படங்கள்” என்றால் எஸ்.ஏ.சி.தான் நினைவுக்கு வருவார்.
இயக்குநர் என்பதோடு தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட அவர், தற்போது, கூரன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
இது குறித்து பிரபல இயக்குநர் ரா.பார்த்திபன் பாராட்டி கருத்துத் தெரிவித்துள்ளார்.
“எப்போதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் மிகப்பெரிய இயக்குநர் எஸ்.ஏ.சி அவர்கள்.
அவர் ஒரு சிறந்த நடிகராக இந்த ‘கூரன்’ படம் பார்த்தபோது எனக்குத் தெரிந்தது. இதற்கு முன்பு அவர் நடித்த சில படங்களை நான் பார்த்து இருந்தாலும் இதில் நடித்திருந்த அவரது பாத்திரம் சிறப்பாக இருந்தது.
நான் இந்த ‘கூரன்’ படம் பார்க்கும் முன்பு கதையைக் கேட்டு விட்டுத்தான் சென்றேன். இதில் ஒரு நாய் தனது குட்டிக்காகத் தனக்கு வழக்காடுவதற்காக ஒரு வழக்கறிஞரைப் போய் பார்க்கிறது. அந்த வழக்கறிஞர் தான் எஸ்.ஏ.சி. அவர்கள். எனக்கு இந்தக் கதையே புதிதாக இருந்தது.
இந்த நாய் தனது உணர்வை எப்படி வெளிப்படுத்தும்? அதற்காக இவர் எப்படி வழக்காடுவார்? இந்த ஆர்வத்தோடு தான் நான் படம் பார்த்தேன். படத்தில் அது கொஞ்சமும் குறையாமல் இருந்தது” என்று தெரிவித்து உள்ளார்.
மேலும்,” எஸ்.ஏ.சி., 1992ல் நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் தனது மகன் விஜயை நாயகனாக அறிமுகப்படுத்தினார். அவரது மகன் (20)26 வது வருடத்தில் என்ன தீர்ப்பு எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவு பெரிய ஆரூடம் தெரிந்தவர் எஸ் .ஏ. சி.” என்றும் பாராட்டியுள்ள பார்த்திபன், “எஸ்.ஏ.சி. எவ்வளவு பெரிய இயக்குநர் என்பது உலகத்திற்கே தெரியும் அவர் திரைக்கதையில் ஒரு மன்னர். அவர் செய்த மிகச் சிறந்த திரைக்கதை இளைய தளபதி விஜய்!” என தனது பாணியில் பாராட்டு பஞ்ச் வைத்து உள்ளார்.
