‘அது வாங்குனா இது இலவசம்’: திரைப்பட விமர்சனம்
கெட்டது செய்தால் அழிந்துபோவாய் என்கிற பழைய கான்செப்ட்தான். அதை காமெடி கலந்துக கவர முயற்சிக்கிறார்கள்.
கதைநாயகன் ராமர், தனது இரு கூட்டாளிகளோடு திருட்டு உள்ளிட்ட சில்லறை குற்றங்களை செய்து வருகிறார். சிறைக்குச் சென்று வருகிறார்.
இன்னொரு பக்கம், நான்கு இளைஞர்கள் இளம்பெண்களை கடத்திச் சென்று பலாத்காரப்படுத்தி அவர்களை கொடூரமாக கொலை செய்கிறார்கள். இதனைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் காவல்துறை அதிகாரி, லஞ்சம் வாங்கிக் கொண்டு கம்மென்று இருக்கிறார்.
ராமரும், அவரது கூட்டாளிகளும் செய்யும் தவறுகளால் மற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டாலும், எதையும் கண்டு கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று தவறுகளோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் இன்றி தவறு செய்யும் அனைவரையும் நாயகி பூஜாஸ்ரீ தண்டிக்கிறார். அதை அவர் எப்படி செய்கிறார் ?, எதற்காக செய்கிறார் ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ஹீரோ + வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் விஜய் டிவி பிரபலம் ராமர். தனது வழக்கமான சின்னத்திரை பாணியில், ரசிகர்களை சிரிக்கவைக்கிறார்.
அதிலும், அவரதுபிரபல ஸ்டைலான (!) பெண் வேடத்தில் வந்து, லாரி ஓட்டுநரை ஓரமாக அழைத்து செல்வதும், பிறகு போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக அதே வேடத்தில் ஓட்டம் பிடிப்பது என ரகளைதான்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை பூஜாஸ்ரீ, தனது பாத்திரம் அறிந்து நடித்து உள்ளார். அழகு கம் அமைதியான பெண்ணாக ஆரம்பத்தில் வருபவர், இறுதியில் செய்யும் அதிரடி எதிர்பாராதது.
கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுமே ரசிக்க வைத்து உள்ளனர்.
அர்வின் ராஜ் இசையமைப்பில், இயக்குநர் எஸ்.கே.செந்தில் ராஜனின் வரிகளில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு.
விக்னேஷ் மலைச்சாமியின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் கண் முன் நிற்கின்றன. பாடல் காட்சிகளில் கூடுதலாக ரசிக்க வைக்கிறார்.
நாகராஜன்.டி யின் படத்தொகுப்பு கச்சிதம்.
வெவ்வேறு விசயங்களை ஒரே கதையாக சொல்வதில் ஆரம்பத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், இடைவேளைக்குப் பிறகு சரியான பாதையில் கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர் எஸ்.கே.செந்தில் ராஜன்.
இளம்பெண்களை கடத்தி கற்பழித்து கொடூரமாக கொலை செய்யும் கும்பல், காதலர்களின் படுகொலை என்று மிரட்டல் ஒருபுறம்… அதேநேரம் , ராமர் மற்றும் இரண்டு நண்பர்கள் கூட்டணி செய்யும் நகைச்சுவை மறுபுறம் என்று இரண்டையும் தண்டவாளம்போல் நேர்த்தியாக கொண்டு சென்று இருக்கிறார்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற தத்துவத்தை ரசிக்கத்தக்க திரைப்படமாக அளித்து இருக்கிறார்கள். அனைவரும் ரசிக்கலாம்.
ரேட்டிங் 2.5/5
