திரைவிமர்சனம்: பருந்தாகுது ஊர்க்குருவி

திரைவிமர்சனம்: பருந்தாகுது ஊர்க்குருவி

சின்னச் சின்ன திருட்டுகள் மற்றும் அடிதடிகளில் ஈடுபடும் குற்றவாளி நாயகன் நிஷாந்த் ரூசோ.ஒரு நாள் காவல் நிலையத்தில் இருக்கும் நேரத்தில்,காட்டுக்குள் ஒருவர் பிணமாகக் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் வருகிறது.

அந்த இடத்திற்குச் செல்ல வழிகாட்டுவதற்காக நாயகனையும் இழுத்துச் செல்கிறது காவல்துறை. அங்கே சென்று பிணமாகக் கிடக்கும் விவேக்பிரசன்னாவைக் கண்டறிகிறார்கள்.அவருடன் நாயகனின் கையைச் சேர்த்து கைவிலங்கு போடுகிறார் காவலதிகாரியாக வரும் கோடங்கிவடிவேல்.

கைவிலங்கிலிருந்து தன்னை விடுவிக்க முயல்கையில் விவேக்பிரசன்னாவுக்கு உயிர் இருப்பதை அறிந்துகொள்கிறார். அப்போது,விவேக்பிரசன்னாவின் கைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது.அதில் விவேக்பிரசன்னாவைக் காப்பாற்றச் சொல்லி நாயகி அழுகிறார்.

அவர் மூலம் விவேக்பிரசன்னாவைப் பற்றித் தெரிந்துகொள்ளும் அதேநேரம் அவரைக் கொல்லமுயன்ற கூட்டம் திரும்பவருகிறது.அவர்களிடமிருந்தும் காவல்துறையிடமிருந்தும் விவேக்பிரசன்னாவைக் காப்பாற்ற நாயகன் நிஷாந்த்ரூசோ போராடுவதுதான் படம்.

நிஷாந்த்ரூசோ, விவேக்பிரசன்னா, காயத்ரிஐயர்,காவல்துறையினராக வரும் ராட்சசன் வினோத், கோடங்கிவடிவேல் வில்லன்களாக வரும் கெளதம், ராஜேஷ், ஆன

ந்த், ஆதிக் உள்ளிட்ட அனைவருமே இது பரபரப்பான த்ரில்லர் படம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

இருட்டு, காடு என சவாலான கதைக்களத்தை இயல்பாக எதிர்கொள்கிறது அஸ்வின்நோயலின் ஒளிப்பதிவு.

ரஞ்சித் உண்ணி பின்னணி இசை மூலம் மேலும் பரபரப்பைக் கூட்ட முயன்றிருக்கிறார்.

நெல்சன் ஆண்டனியின் படத்தொகுப்பு இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம்.

ஒரு காடு, சில கதாபாத்திரங்கள் ஆகியனவற்றை வைத்துக் கொண்டு வஞ்சகமும் சூழ்ச்சியும் நிலைக்காது என்கிற நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கோ.தனபாலன்.