“பெண்களை கடவுளா பாக்காதீங்க!”: ‘ஜென்டில்வுமன்’ பட விழாவில் இயக்குநர் ராஜூ முருகன்
கோமளா ஹரி பிக்சர்ஸ் & ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் “ஜென்டில்வுமன் ”.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், தயாரிப்பாளர் லியோ, எடிட்டர் இளையராஜா சேகர், நடிகை தாரணி, ஒளிப்பதிவாளர் காத்தவராயன், தயாரி்பாளர் ஹரி உத்ரா, ஹரி உத்ரா, ஆர்ட் டைரக்டர் அமரன், இயக்குநர் லெனின் பாரதி, இயக்குநர் த செ ஞானவேல் , பாடலாசிரியர் வசனகர்த்தா யுகபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
இயக்குநர் ராஜு முருகன் பேசும்போது, “இயக்குநர் இந்தக் கதையைச் சொன்ன போது படத்தின் பெயர் வேறு, அதைவிட ஜென்டில்வுமன் டைட்டில் மிக பொருத்தமாக உள்ளது. ஜென்டில்மேன் பற்றி மட்டும் பேசும் உலகில், ஜென்டில்வுமன் பற்றியும் பேச வேண்டும் அதை ஜோஷ்வா செய்துள்ளார். சென்சாரில் இருந்து ஒரு நாள் போன் செய்தார். இத்தனை கட் என்ன செய்வது என்றான், சென்சாரால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான் தான், அதனால் இதையெல்லாம் செய் என சொல்லித் தந்தேன். இன்றைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது.
இங்கு எல்லாவற்றையும் புனிதப்படுத்துவது தான் மிகப்பெரிய பிரச்சனை, புனிதப்படுத்த நீ யார் ?. பலர் நம் காலத்துக்கு முன்பே வழக்கத்தை உடைத்து, என்னென்னவோ செய்து விட்டார்கள் ஆனால் நாம் அதைத் தாண்டவே இல்லை. இப்படியான உலகில் புனிதப்படுத்துவதைக் கட்டுடைப்பது முக்கியம். பெண்களை சக மனுஷியாகப் பார்க்காமல் கடவுளாகப் பார்க்கும் சமூகம் தான் மிக ஆபத்தான சமூகம் என நினைக்கிறேன்.
பெண்களை சக மனுஷியாகப் பார்த்து, அவர்களோடு அவர்கள் மொழியில் பேசுவது தான் இந்த ஜென்டில்வுமன். இது போன்ற படத்தைத் தயாரித்து திரைக்குக் கொண்டு வரும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.
தொடர்ந்து, இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன், நடிகர் ஹரி கிருஷ்ணன், நடிகை லாஸ்லியா, நடிகை லிஜோமோல் ஜோஷ் உள்ளிட்டோர் பேசினர்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம், வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.
