நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்?: திரை விமர்சனம்: குளிருதா, கொதிக்குதா?
தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை ஈர்த்த தனுஷ், தொடர்ந்து பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பல அவதாரங்கள் எடுத்தார். அத்தனையிலும் முத்திரை பதித்தார்.
இந்தநிலையில், அவர் இயக்க மட்டுமே செய்து பிறர் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. அவரது அக்கா மகன் பவிஷ்தான் ஹீரோ.
காதலுக்கும்-காதல் தோல்விக்கும் இடையேயான உணர்வில் சிக்கிக்கொள்ளும் இளைஞன் என்ன ஆனான் என்பதே கதை.
காதல் தோல்வியை கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் இளைஞன், பிரபு (பவிஷ்). திருமணம் செய்தால் சரியாகிவிடுவான் என அதற்கு ஏற்பாடு செய்யும் பெற்றோர். (சரண்யா-ஆடுகளம் நரேன்).
எதிர்பாராத வகையில், பள்ளித் தோழி பிரீத்தியை (பிரியா வாரியர்) பெண் பார்க்கிறான்.
இருவரும் பேசிப் பழகுகின்றனர். இதற்கிடையே பிரபுவிற்கு அவனது முன்னாள் காதலியான நிலாவின் திருமண அழைப்பிதழ் வருகிறது. இதனால் தனது காதல் குறித்தும், காதல் தோல்வி குறித்தும் சொல்ல ஆரம்பிக்கிறான்.
வசதியான குடும்பத்து பெண் நிலா-நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சமையல் கலை பயிலும் பிரபு, இருவரும் காதலிக்கின்றனர். இவர்களுக்கு இடையில் நிலாவின் பணக்கார அப்பா சரத்குமார் வில்லனாக வர, அங்கிருந்து இவர்களுக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது. நிலாவின் நலனுக்காக பிரபு அவளை விட்டு பிரியும் சூழல்.
இந்த கதையை கேட்கும் பிரீத்தி, திருமணத்திற்கு செல்லுமாறு பிரபுவிடம் சொல்கிறாள்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
நாயகன் பவிஷூக்கு இது முதல் படம்.ஆனால் இயல்பாக நடிக்கிறார். நடிப்பும், குரலும்கூட தனுஸ் போல் இருக்கிறது. இப்போதைக்கு இது பாசிடிவான விசயம்தான். போகப்போக தனக்கான பாணியை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
நாயகிகள் அனேகா, பிரியா வாரியர் ஆகியோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கின்றனர்.
ஆனால் மூவருமே மிக இளைஞர்கள் என்பதால், காதல், திருமணம் என காட்சிகளைப் பார்க்கும்போது மனதில் ஒட்டவில்லை.
நாயகனின் நண்பன் கார்த்திக் கதாப்பாத்திரத்தில் மாத்யூ தாமஸ், கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.
அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன், அரதப்பழசான அரைகுறை ஆங்கில காமெடி செய்கிறார். இந்த காமெடிக்கு தடை போட வேண்டும்.
ஒரு பாடலுக்கு வந்த பிரியங்கா மோகன், சில நிமிடங்களே வந்த சரத்குமார் ஆகியோரும் ரசிக்க வைக்கின்றனர்.
காட்சியமைப்புகள் அனைத்தும் லியோன் பிரிட்டோவின் கைவண்ணத்தில் அழகாக இருக்கிறது. ஆனால் வசனங்கள் இயல்பாக இல்லை. செயற்கை.
ஹீரோ அறிமுகமாவதே, மது பாட்டில்களை கையில் வைத்துக்கொண்டு, பொண்ணுங்களே மோசம்டா என ஆடிப்பாடுவதில்தான் ஆரம்பிக்கிறது. தவிர, வசதியான குடும்பத்துப் பெண், நடுத்தர அல்லது ஏழை பையனை காதலிப்பதும் பல படங்களில் பார்த்ததுதான்.
குளிரவும் இல்லை, இதமாகவும் இல்லை.

