“பிராமணர்களை இழிவுபடுத்தும் வெப் தொடர்! இயக்குனர் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்!” : எஸ்.வி. சேகர் காட்டம்  

“பிராமணர்கள் அனைவரும் அயோக்கியர்கள்!” என்ற வசனம் இடம் பெற்றதால் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து “காட்மேன்” என்ற வெப் தொடரின் டீசர் தடை செய்யப்பட்டது.

ஸீ டி.வி. குழுமத்தின், “ஸீ 5” என்கிற இணைய சேனல் (ஓ.டி.டி.) பிரபலமானது. இதில், திரைப்பட இயக்குனர் பாபு யோகஸ்வரன் இயக்கத்தில், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த “காட் மேன்” என்ற வெப் தொடர் வரும் ஜூன் 12 முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.

இரு நாட்களு்கு முன் இத்தொடரின் டீசர் வெளியானது.

இதில், “பிராமணாள் மட்டும் தான் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்திரத்துல சொல்லி இருக்கு?”, “என்னைச் சுத்தி இருக்கும் பிராமணர்கள் எல்லோரும் அயோக்கியர்களாக இருக்கா!” என்றும் வசனங்கள் இடம் பெற்றன.

மேலும், பிராமணராக மாற முயலும் டேனியல் பாலாஜி ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக இருக்கும் படுக்கையறை காட்சிகளும், மது அருந்தும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இதையடுத்து இந்து அமைப்புகள் பல, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், தமிழக பாஜக சட்டப்பிரிவு மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சார்பில் சென்னை  காவல்துறை ஆணையாளர்  அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. பிரமுகரும் நடிகருமான எஸ்.வி. சேகரும், இத்தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர், “ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், அவர்கள் தாக்கப்படக்கூடிய சூழலும், மதரீதியாக   பகைமையை தூண்டும் வகையிலும் இத்தொடர் உள்ளது. இதனால் பொது அமைதி குலையும்.

எந்த ஒரு மதத்தையோ அல்லது சமூகத்தையோ குறிப்பிட்டு இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றம், என்பது தெரிந்ததே.கடந்த சில காலங்களாக ஒரு குறிப்பிட்ட மதத்தை சாதியை கொச்சைப்படுத்தி பேசும் வசனங்களை ஊடகங்களில் வைப்பது வாடிக்கையாகிவிட்டது. இது மேலும் தொடர்ந்தால் தவறான முன்னுதாரணமாகி தமிழகத்தை வன்முறைக்கு அழைத்து செல்லும்.

இதில் நடித்த நடிகர்கள் ஜெயப்ரகாஷ், டேனியல் பாலாஜி ,சோனியா அகர்வால், இயக்குனர் பாபு யோகேஸ்வரன்,  தயாரிப்பாளர் இளங்கோ ரகுபதி, இணை இயக்குனர் ராஜா முகமது, நிர்வாக தயாரிப்பாளர் சுகுமாரன் மற்றும் ஸீ 5 நிறுவனத்தின் சி.இ.ஓ. தருண் கைதால் ஆகியோரை கைது செய்ய வேண்டும்!” என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

தற்போது இத்தொடரின் டீசர்,  யூ டியுபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

 

 

  

Related Posts